Published:Updated:

கட்சித்தாவல்... உட்கட்சிப்பூசல்... கூண்டோடு ராஜினாமா... கரையும் காங்கிரஸ்!

இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.நடராஜன்

பிரீமியம் ஸ்டோரி

`பலமான எதிர்க்கட்சியே வலுவான ஜனநாயகத்தை உருவாக்கும்’ என்பார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை காங்கிரஸின் பலம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போவதால் நாட்டின் ஜனநாயகமே கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கரைத் தொடர்ந்து கடந்த வாரத்தில், ஜம்மு காஷ்மீரிலும் முக்கியத் தலைவர்களைப் பறிகொடுத்திருக்கிறது காங்கிரஸ். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை ஆட்சிசெய்த `கிராண்ட் ஓல்டு பார்ட்டி’யான காங்கிரஸ் சறுக்கியது எப்படி?

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வீசிய மோடி அலையால், 543 தொகுதிகளில் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது காங்கிரஸ். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அதைவிடக் கூடுதலாக எட்டு இடங்கள் அதிகம் பெற்று 52 தொகுதிகளில் வென்றது. 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சியைச் சேர்ந்த 405 எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவியிருக்கின்றனர் என்கிறது ஏ.டி.ஆர் (Association Of Democratic Reforms) அறிக்கை. கட்சி தாவிய அந்த 405 பேரில், 42 சதவிகிதம் பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். அதுவே, பா.ஜ.க-விலிருந்து 4.4 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தக் காலகட்டத்தில் வெளியேறியிருக்கின்றனர்.

கட்சித்தாவல்... உட்கட்சிப்பூசல்... கூண்டோடு ராஜினாமா... கரையும் காங்கிரஸ்!

நீண்டகாலமாகவே முக்கியத் தலைவர்களை இழப்பது காங்கிரஸின் வழக்கமாக இருக்கிறது. சரண் சிங், மொரார்ஜி தேசாய், மம்தா பானர்ஜி, சரத் பவார், ஜெகன் மோகன் ரெட்டி, ஹிமந்தா பிஸ்வா சர்மா என அந்தந்த மாநிலங்களில் சக்திவாய்ந்த தலைவர்களை இழந்து, அந்த மாநிலங்களில் பலவீனமும் அடைந்திருக்கிறது காங்கிரஸ். குறிப்பாக, 2014-க்குப் பின்னர் சரியான தலைமை இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான தலைவர்கள் கட்சியைவிட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதுவே காங்கிரஸ் தொண்டர்களிடம் எஞ்சியிருந்த உற்சாகத்தையும் வற்றச்செய்தது. பல ஆண்டுகளாக ஆட்சி செய்த சில மாநிலங்களில், இன்று காங்கிரஸுக்கு ஒரு எம்.எல்.ஏகூட இல்லை என்பதுதான் நிஜம் (பார்க்க இன்ஃபோ).

போராடத் தவறிய தலைவர்கள்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், 10 சதவிகித இடங்களைக்கூடப் பிடிக்காததால், இந்திய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லை என்றாகிவிட்டது. இருப்பினும், பா.ஜ.க-வுக்கு அடுத்து அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்கிற வகையில் மட்டுமே, பரிதாப எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவருகிறது காங்கிரஸ். எதிர்க்கட்சியின் பணிகளில் முக்கியமானது, மக்களுக்கு எதிரான சட்டங்களை அரசு கொண்டுவரும்போது களத்தில் இறங்கிப் போராடுவதும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறவைப்பதும்தான். ஆனால், இந்தியாவில் சி.ஏ.ஏ., புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட மக்கள் விருப்பத்துக்கு எதிரான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டபோது, மக்களே களத்தில் இறங்கிப் போராடினர். அவர்களுக்குப் பெயரளவுக்கு மட்டுமே ஆதரவு தந்தது காங்கிரஸ் கட்சி. கடந்த பத்தாண்டுகளில் சம்பிரதாயமான பந்த், அடையாள மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் தவிர நாட்டையே புரட்டிப்போடும் அளவுக்கு ஒரு போராட்டத்தைக்கூட முன்னெடுக்கவில்லை காங்கிரஸ். அவ்வளவு ஏன்? ஹத்ராஸ் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தைக் காணச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுலையும் பிரியங்காவையும் உ.பி காவல்துறை தரதரவென இழுத்துச் சென்றபோதுகூட காங்கிரஸ்காரர்களிடம் சலனம் இல்லை. போராட்டம்தான் என்றில்லை... பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் அரசியலில் மட்டுமே ஆர்வம் காட்டும் காங்கிரஸ் தலைவர்கள், தேர்தலுக்குப் பிறகு நீண்ட ஓய்வெடுக்கச் சென்றுவிடுவதும் காங்கிரஸின் பலவீனம் மட்டுமல்ல... மக்கள்மீதான அக்கறையின்மையும்கூட!

கட்சித்தாவல்... உட்கட்சிப்பூசல்... கூண்டோடு ராஜினாமா... கரையும் காங்கிரஸ்!

ஆட்சியிலிருக்கும் மாநிலங்களிலும் ஊசலாட்டம்!

இந்த அலட்சியத்தால்தான் இந்தியாவின் 31 மாநிலங்களில், வெறும் மூன்றில் மட்டுமே ஆட்சி செய்துவருகிறது காங்கிரஸ். அங்கும் உட்கட்சிப்பூசல்கள் கட்சியைக் கறையான்களாக அரித்துவருகின்றன. அடுத்த ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஏழு மாநிலங்களில், பஞ்சாப்பில் மட்டுமே காங்கிரஸுக்கு லேசான வெளிச்சம் தெரிகிறது. அங்கும் சமீபத்திய குழப்பங்களால் ஆட்சியை இழந்தாலும் ஆச்சர்யமில்லை. மற்ற ஆறு மாநிலங்களில், உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறது காங்கிரஸ். அங்கும் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்காமல், `தனித்துப்போட்டி’ என்று சொல்லி கோட்டைவிட்டிருக்கிறது. இதில் லேட்டஸ்ட்டாக, நவம்பர் 17-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியில், ‘கட்சித் தலைமையைச் சந்திக்க வேண்டும் என்று ஓராண்டுக்கும் மேலாக நேரம் கேட்டும், எங்களை அனுமதிக்கவில்லை’ என்று சொல்லி நான்கு முன்னாள் அமைச்சர்கள், மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உட்பட 20 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இப்படி சொந்தக் கட்சியினரையே தவறவிட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒரு குடையின்கீழ் எப்படி ஒன்றிணைக்கப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

கட்சித்தாவல்... உட்கட்சிப்பூசல்... கூண்டோடு ராஜினாமா... கரையும் காங்கிரஸ்!

ஓர் எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் தனது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. அப்படியிருக்கையில், ஆளுங்கட்சியானால் என்ன செய்துவிடும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. இந்த நம்பிக்கையின்மை ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. வரும் 2024 தேர்தலுக்குள் சரியான தலைவரை நியமித்து, கட்சியின் பிரச்னைகளைச் சரிசெய்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் ஆதங்கக் குரலாக இருக்கிறது.

உலக அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பலமிழந்த எதிர்க்கட்சிகள் இருக்கும் நாடுகளில் சர்வாதிகாரம் கோலோச்சுவதைக் காணலாம். இந்தியாவின் ஜனநாயகம் வலுவிழக்காமல் இருக்க காங்கிரஸ் மீண்டெழ வேண்டியது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு