Published:Updated:

தி.மு.க கொங்கு மண்டலத்தில் சரிந்தது ஏன்?

தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரின் கட்சி தாண்டிய, சாதிரீதியான அரசியல்தான் கோவையில் அந்தக் கட்சியை புதைகுழியில் தள்ளியுள்ளது.

பிரீமியம் ஸ்டோரி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தின் பிற பகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றியைப் பெற்றாலும் மேற்கு மண்டலமான கோவை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. தி.மு.க தலைமை, தேர்தல் வெற்றிக்களிப்பில் மூழ்கியிருக்க... கொங்கு தி.மு.க-வினரோ முக்காடு போட்டு புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்னை எங்கே?

கோவை

20 ஆண்டுகளாக வளராத தி.மு.க!

கோவை மாவட்டத்தில், 2001 சட்டமன்றத் தேர்தலிலிருந்து வரிசையாக ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க படுதோல்வியைச் சந்தித்துவருகிறது. 2006 தேர்தலில் இரண்டு இடங்களையும், 2016 தேர்தலில் ஓர் இடத்தையும் தி.மு.க கைப்பற்றிய நிலையில் 2001, 2011, 2021 ஆகிய தேர்தல்களில் அனைத்து இடங்களையும் அ.தி.மு.க கூட்டணியே மொத்தமாக அள்ளியது.

‘‘தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரின் கட்சி தாண்டிய, சாதிரீதியான அரசியல்தான் கோவையில் அந்தக் கட்சியை புதைகுழியில் தள்ளியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் சில உள்ளடி வேலைகளுக்காகவும், சாதிப் பாசத்தாலும் அந்த முன்னாள் அமைச்சரால் வளர்க்கப்பட்டவர்தான் எஸ்.பி.வேலுமணி. இதனாலேயே, கடந்த 20 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் தி.மு.க கொஞ்சமும் வளரவில்லை’’ என்றபடியே கோவை தி.மு.க நிர்வாகிகள் சிலர் தங்கள் வேதனைகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

தி.மு.க கொங்கு மண்டலத்தில் சரிந்தது ஏன்?

‘‘கட்சியில் செல்வாக்கு இல்லாதவர்களெல்லாம் திடீரென்று முளைத்து, கவனிக்க வேண்டியவர்களை கவனித்து, மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் மருதமலை சேனாதிபதி, தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்தார். தற்போது அந்த ஒன்றியத்துக்கே சம்பந்தமில்லாத இடத்தில் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார். கவுண்டம்பாளையம் தொகுதி வேண்டும் என்பதற்காகவே, கட்சி மாவட்டத்தைப் பிரித்து அதற்குப் பொறுப்பாளர் பதவி பெற்றார் பையா கிருஷ்ணன். பொள்ளாச்சிப் பகுதியில் சிறுபான்மையாக இருக்கும் வேட்டுவ கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த தென்றல் செல்வராஜ், அப்பகுதிக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார். அங்கு பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாள கவுண்டர்கள் அவரை மதிப்பதில்லை.

கோவை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோது, நாயுடு சமுதாயப் பாசத்தால் வளர்க்கப்பட்டவர்தான் நா.கார்த்திக். கடந்த 2016-21 காலகட்டத்தில் கோவையின் ஒரே தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த இவர்மீது கட்சியிலும் தொகுதியிலும் புகார்கள் வரிசைகட்டியது. அவருக்கே மீண்டும் சீட் கொடுக்கப்ப்ப்பட்டதால், இம்முறை அவரால் தொகுதியைத் தக்கவைக்க முடியவில்லை.

தேர்தலுக்குச் செய்ய வேண்டிய முதல் பணியே, வீடு வீடாகச் சென்று எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்ற பட்டியலை எடுப்பதுதான். அந்தப் பட்டியலை வைத்துத்தான் சகல வியூகங்களும் அமைக்கப்படும். அனைத்துத் தொகுதிகளிலும் அ.தி.மு.க அந்தப் பட்டியலை எடுத்துவிட்டது. தி.மு.க-வில் கடைசிவரை அப்படி ஒரு பட்டியலையே எடுக்கவில்லை. ஆனால், தி.மு.க ஆதரவு அலை, சாதகமான கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றால், அனைத்து வேட்பாளர்களுமே வெற்றிபெற்ற மனநிலைக்குச் சென்றுவிட்டனர்.

தி.மு.க கொங்கு மண்டலத்தில் சரிந்தது ஏன்?

மறுபக்கம் வேலுமணியின் மாஸ்டர் பிளான் பக்காவாக வேலை செய்தது. சில மாதங்களுக்கு முன்பே தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளைத் தேர்தல் பணியில் நியமித்தது, தி.மு.க-வைவிட அதிக ‘ஸ்வீட்’ கொடுத்தது என்று அ.தி.மு.க-வினர் அமர்க்களப்படுத்தினர். தி.மு.க-வினர் ஒருவழியாக சுதாரித்து, அ.தி.மு.க விசுவாச அதிகாரிகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தாலும் உயரதிகாரிகள் மாற்றப்பட்டார்களே தவிர, கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் அ.தி.மு.க-வுக்குத்தான் விசுவாசமாக இருந்தனர்.

கோவை பகுதியில் செல்வாக்கு மிகுந்த ஒரு தலைவர்கூட தி.மு.க-வுக்கு இல்லை. பல இடங்களில் பூத் ஏஜென்ட்களே கிடைக்காமல், வெவ்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்டார்கள். வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்களுக்கு இங்கிருக்கும் நிலவரம் குறித்து என்ன தெரியும்? அ.தி.மு.க-வில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் ஏஜென்ட்கள். இப்படி கட்சி அமைப்புரீதியாகவும் தி.மு.க மிகவும் பலவீனமாக இருந்ததுதான் தோல்விக்குக் காரணமாகிவிட்டது” என்றார்கள்.

சேலம்

‘‘வலிமையான தலைமை இல்லை!”

கடந்த 2016 தேர்தலைப்போலவே சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளில், சேலம் வடக்குத் தொகுதியில் மட்டுமே தி.மு.க வென்றுள்ளது. அங்கு போட்டியிட்ட பனமரத்துப்பட்டி ராஜேந்திரனைத் தவிர மற்ற அனைத்து தி.மு.க கூட்டணி வேட்பாளர்களும் மண்ணைக் கவ்வியுள்ளார்கள்.

‘‘எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதும், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியதும், ஸ்வீட் பாக்ஸ்களை வாரி வழங்கியதும்தான் அ.தி.மு.க-வின் வெற்றிக்குக் காரணம்’’ என்று சொல்லப்பட்டாலும், ‘‘சேலம் தி.மு.க-வில் நிலவிய கோஷ்டிப்பூசலும், அதைத் தலைமை சரிசெய்யத் தவறியதுமே இந்தப் படுதோல்விக்குக் காரணம்’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் தி.மு.க தொண்டர்கள்.

தி.மு.க மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் தோல்விக்கான காரணங்களை நம்மிடம் அடுக்கினார்கள். ‘‘கடந்த 1989, 1996, 2006 தேர்தல்களில் மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க அபார வெற்றிபெற்றது. அப்போது சேலத்தில் ஒற்றைத் தலைமையாக வீரபாண்டி ஆறுமுகம் இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு வீரபாண்டி ராஜா, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் என இரண்டு கோஷ்டிகளாக தி.மு.க-வினர் செயல்பட்டனர். அதைக் களைவதற்கு தி.மு.க தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தநிலையில் சேலம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக ராஜேந்திரனும், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக சிவலிங்கமும், மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக செல்வகணபதியும் நியமிக்கப்பட்டார்கள். இதனால், மேலும் பல கோஷ்டிகள் உருவாகி, கோஷ்டிப்பூசல் உச்சத்துக்குச் சென்றது. ஒவ்வொரு கோஷ்டித் தலைவரும் கிரிமினல் பின்புலமுள்ள ரௌடிகளை வைத்துக்கொண்டு மற்ற கோஷ்டியை காலி செய்வதற்கு வியூகம் வகுத்து செயல்பட்டார்களே தவிர, கட்சி வளர்ச்சிக்கு முனைப்பு காட்டவில்லை.

தி.மு.க கொங்கு மண்டலத்தில் சரிந்தது ஏன்?

வேட்பாளர்கள் தேர்விலும் சொதப்பிவிட்டார்கள். சேலத்தில் வசிக்கும் ரேகா பிரியதர்ஷினியை கெங்கவல்லியிலும், கெங்கவல்லியில் வசிக்கும் சின்னதுரையை ஆத்தூரிலும், சேலம் மேற்கில் வசிக்கும் தருணை வீரபாண்டியிலும் தொகுதி மாற்றி நிறுத்தினார்கள். சேலம் மேற்கில் போட்டியிட்ட சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், சேலம் தெற்கில் போட்டியிட்ட சரவணன், எடப்பாடியில் முதல்வரை எதிர்த்து போட்டியிட்ட சம்பத்குமார் ஆகியோர் தொகுதி மக்களுக்கு அறிமுகமே இல்லாதவர்கள்.

மொத்தத்தில் சேலம் மாவட்டத்தில் வலுவான தலைமை கட்சிக்கு இல்லை. இனியாவது தி.மு.க தலைமை, தனி கவனம் செலுத்தி ஆளுமைமிக்க தலைவரை இங்கு உருவாக்க வேண்டும். இல்லையென்றால், எப்போதும் சேலத்தில் தி.மு.க தலைதூக்க முடியாது’’ என்று விரக்தியுடன் சொல்லி முடித்தார்கள்.

என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

கண்டுகொள்ளாத தயாநிதி!

கோவையில் வேலுமணியின் ஆதிக்கம், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் பலம் இதையெல்லாம் எதிர்கொள்வதற்காகத்தான் தி.மு.க-வில் ‘வெயிட்’டான நபரான தயாநிதி மாறனை மேற்கு மண்டலப் பொறுப்பாளராக நியமித்தது கட்சித் தலைமை. ஆனால், அவரும் இந்தப் பிரச்னைகளின் வீரியத்தைப் புரிந்துகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதாலேயே இந்தப் படுதோல்வி ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

‘‘தயாநிதி மாறன் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஏதோ கெளரவப் பதவி என்று நினைத்துக்கொண்டு, சேலம் மாவட்டத்தில் நடக்கும் உட்கட்சிப் பூசலின் அரிச்சுவடிகூட தெரிந்துகொள்ளாததும், களப்பணி செய்யாததும்தான் தோல்விக்கு முக்கியக் காரணம். தயாநிதி மாறனுக்கு பதிலாக சேலம் மாவட்ட அரசியலை அறிந்த மூத்த நிர்வாகியை நியமித்திருந்தால்கூட, இன்னும் ஓரிரு தொகுதிகளை வென்றிருக்க முடியும்’’ என்கிறார்கள் சேலம் தி.மு.க தொண்டர்கள்.

தி.மு.க கொங்கு மண்டலத்தில் சரிந்தது ஏன்?

கோவை உடன்பிறப்புகளோ, ‘‘தயாநிதி மாறன் ஒரு முறைகூட தொகுதிப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை. சம்பிரதாயத்துக்காக இங்கு பிரசாரம் செய்ய வந்தார். அப்போதும் கிணத்துக்கடவு பகுதியில் ஜெயலலிதா, மோடி, ராஜேந்திர பாலாஜி தொடர்பாகச் சர்ச்சையாகப் பேசி பெரிய சிக்கலையே ஏற்படுத்திவிட்டுச் சென்றார். ஏற்கெனவே ஆ.ராசா பேச்சு சர்ச்சையாக இருந்தபோது, தயாநிதியின் சர்ச்சைப் பேச்சு மேலும் எரிச்சலையே கிளப்பியது. இப்படி கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வின் தோல்விக்கு தயாநிதியும் ஒரு காரணமாகிவிட்டார்’’ என்று குமுறுகிறார்கள்.

தருமபுரியில் தரைதட்டியது ஏன்?

தருமபுரி மாவட்டத்திலும் ‘ஆல் அவுட்’ ஆகியிருக்கிறது தி.மு.க கூட்டணி. இங்கிருக்கும் ஐந்து தொகுதிகளில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளை அ.தி.மு.க-வும், தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளை பா.ம.க-வும் கைப்பற்றியிருக்கின்றன. இப்படி தி.மு.க கூட்டணி ‘வாஷ்அவுட்’ ஆன பின்னணியை விசாரித்தால், “தருமபுரி மாவட்டத்துக்குத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட எ.வ.வேலுவின் பாராமுகம், கிழக்கு, மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களான தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் ஆகியோரின் அலட்சியம், சாதி ஓட்டுகள், ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடா ஆகியவையே தோல்விக்குக் காரணம்” என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

தருமபுரி மாவட்டத்தின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “தருமபுரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாகவே தி.மு.க களப்பணி செய்யவில்லை. சொல்லப்போனால், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை நிறைவேற்றியது தி.மு.க-தான். ஆனால், இந்தச் சாதனையைக்கூட சரிவர எடுத்துச் சொல்லவில்லை. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, எ.வ.வேலு ஆகியோர் பிரசாரத்துக்கு வந்தபோது மட்டுமே உள்ளூர் நிர்வாகிகள் சுறுசுறுப்பாகப் பிரசாரத்துக்கு சென்றார்கள். மற்ற நாள்களில் வெயில் ஓய்ந்த நேரங்களில் மட்டும் பிரசாரம் சென்றனர். எ.வ.வேலுவும் உள்ளூர் கட்சியினரிடம் பாராமுகமாகவே இருந்தார். மூத்த நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிப்பதில்லை. இவரது புறக்கணிப்பால்தான் தருமபுரி தி.மு.க-வின் முகமாக இருந்த முல்லைவேந்தன் கட்சியிலிருந்து விலகினார்.

தி.மு.க கொங்கு மண்டலத்தில் சரிந்தது ஏன்?

பென்னாகரம் இயல்பாகவே பா.ம.க-வுக்குச் சாதகமான தொகுதி. அங்கு போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் ஜி.கே.மணி, ‘எனக்கு இதுதான் கடைசி தேர்தல்’ என்று கண்ணீர்விட்டு வன்னியர் சமூக மக்களைக் கவர்ந்தார். குறிப்பாக, வன்னியர் சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில், ‘இட ஒதுக்கீடு’ பற்றி சென்டிமென்ட்டாகப் பேசினார். தி.மு.க வேட்பாளர் இன்பசேகரனோ, தொகுதியில் பலமாகவுள்ள கம்யூனிஸ்ட் வாக்குகளைப் பெறக்கூட ஆர்வம்காட்டவில்லை.

பாப்பிரெட்டிபட்டி தொகுதியில், அ.ம.மு.க-வின் பழனியப்பன் பிரிக்கும் வாக்குகள் தங்களுக்குச் சாதகமாகும் என்று கணக்கு போட்டுக் காத்திருந்தார் தி.மு.க வேட்பாளர் பிரபு ராஜசேகர். ஆனால், பழனியப்பன் 11,701 ஓட்டுகளில் சுருண்டுபோக அ.தி.மு.க-வின் கோவிந்தசாமி தருமபுரி மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றிபெற்றார். 2016 தேர்தலில் அரூர் தனி தொகுதியில், வி.சி.க வேட்பாளருக்காக இடதுசாரித் தோழர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தார்கள். இந்தமுறை தேர்தல் செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்துப்போனார் சி.பி.எம் வேட்பாளர் குமார்.

தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், தருமபுரி தொகுதி தி.மு.க வேட்பாளருமான தடங்கம் சுப்பிரமணியம், கட்சிப் போராட்டங்களைக்கூட சம்பிரதாயத்துக்கு மட்டுமே நடத்திக்கொண்டிருந்தார். அதனாலேயே கரைசேரவில்லை. அதேசமயம், இங்கு போட்டியிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொடர்ந்து தொகுதி மக்களிடம் சகஜமாகப் பழகியதுடன், எதிர்க்கட்சியினரையும் நன்றாக ‘கவனித்தார்.’ அவரிடம் தி.மு.க நிர்வாகிகளே சரண்டரானதால், தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றிபெற்றிருக்கிறார் அன்பழகன்!’’ என்று சொல்லி முடித்தார்கள்!

இவை தவிர, சாதிய ஓட்டுகளும் தி.மு.க-வின் தோல்விக்குக் காரணமாகியிருக்கின்றன. “தருமபுரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமூகத்தினரிடையே உள் இட ஒதுக்கீடு பிரசாரம் நன்றாகவே எடுபட்டிருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தைச் சுட்டிக்காட்டி செய்யப்பட்ட ‘நாடக திருமணம்’ பிரசாரம் மற்றும் ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு உள்ளிட்ட விஷயங்கள் தி.மு.க-வுக்கு எதிராகத் திரும்பிவிட்டன. வன்னியருக்கு அடுத்து பெரும்பான்மையாக இருக்கும் கொங்கு வேளாளர் சமூகத்தினரின் ஓட்டுகளும் எடப்பாடிக்குச் சாதகமாகிவிட்டன. இன்னொரு பக்கம், பணப்பட்டுவாடா விஷயத்தில் தி.மு.க தரப்பில் கடும் சுணக்கம் காணப்பட்டது. மறுபுறமோ அமைச்சர் அன்பழகன் மூன்று தொகுதிகளுக்குமே பொறுப்பேற்றுக்கொண்டு பட்டுவாடா விஷயத்தில் புகுந்து விளையாடிவிட்டார். இவையும் தருமபுரி மாவட்டத்தில் தி.மு.க கூட்டணி தோல்வியடையக் காரணமாகிவிட்டன” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு