அலசல்
Published:Updated:

ஒன் பை டூ: “பிசாசுபோல வளர்கிறது பி.ஜே.பி” என்ற அமைச்சர் துரைமுருகனின் விமர்சனம்!

இராஜீவ்காந்தி,கே.பி.ராமலிங்கம்
News
இராஜீவ்காந்தி,கே.பி.ராமலிங்கம்

அரசியல் களத்தில் அ.தி.மு.க-வைச் சந்தித்த நாம், இப்போது பா.ஜ.க-வை சந்திக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை இருக்கிறது’ என்று அவர் பேசியிருப்பது ஏற்புடைய கருத்து.

இராஜீவ்காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். தேர்தல் அரசியலில் தங்கள் கொள்கையைப் பேசி வெல்வது ஒரு முறை. ஆனால், பா.ஜ.க-வால் தமிழ்நாட்டில் கொள்கை, சமூகநீதி, மக்களின் அரசியலைப் பேசி வெல்ல முடியாது. அதனால், சகிப்புத்தன்மையற்ற மத விஷம பிரசாரத்தைக் கையிலெடுத்து மாநில அரசைச் செயல்படவிடாமல் செய்கிறது.

மாநில அரசுக்குத் தரவேண்டிய நிதியைத் தராமலிருப்பது, மாநில அரசு இயற்றிய சட்டங்களை ஆளுநரைவைத்து, கையெழுத்துப்போடாமல் இழுத்தடிப்பது போன்ற கொல்லைப்புற வேலைகளால் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறது. சமூகத்துக்கு எதிரான குறியீடுதான் `பிசாசு’ என்ற சொல். அதேபோலவே, சமூகத்தில் ஒரு ஆரோக்கியமற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, பிசாசுபோல பா.ஜ.க வளர்ந்துகொண்டிருக்கிறது.

`நாங்கள் தமிழை வளர்க்கிறோம், தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்’ என்பது போன்ற பொய்யான பிரசாரங்களை முன்வைக்கிறது. பா.ஜ.க-வின் இது போன்ற பொய் பிரசாரம் ஒருசில இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. அதே பாணியைத் தமிழகத்திலும் கையாள நினைக்கிறார்கள். இதற்காக அ.தி.மு.க-வின் தலைவர்களையும், அதன் வாக்காளர்களையும் கைப்பற்றிக்கொண்டு, ஊதிப் பெருக்கப்பட்ட பிசாசுபோல பா.ஜ.க வளர்கிறது.’’

இராஜீவ்காந்தி,கே.பி.ராமலிங்கம்
இராஜீவ்காந்தி,கே.பி.ராமலிங்கம்

கே.பி.ராமலிங்கம், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``துரைமுருகன் உண்மையை உணர்ந்து பேசியிருக்கிறார். `அரசியல் களத்தில் அ.தி.மு.க-வைச் சந்தித்த நாம், இப்போது பா.ஜ.க-வை சந்திக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை இருக்கிறது’ என்று அவர் பேசியிருப்பது ஏற்புடைய கருத்து. தமிழகத்தில் பா.ஜ.க பூதாகரமாக வளர்ந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆன்மிகமும் தேசியமும்தான் நமக்கு இனி உகந்தது என்று உணர்ந்து, பெரும்பான்மையான தமிழக மக்கள் பா.ஜ.க-வை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க இனி செல்லாத கட்சி, எடுபடாத இயக்கம் என்று தி.மு.க-வினர் பேசிவருகிறார்கள். துரைமுருகன் ஒரு பண்பட்ட அரசியல்வாதி, எம்.ஜி.ஆருடன் அரசியலில் களமாடியவர், ஜெயலலிதாவின் அரசியல் வியூகங்களைத் தகர்த்தெறிந்தவர். அவருக்கு இன்றைய அரசியல் சூழல் நன்கு புரிந்திருக்கிறது.

தமிழகத்தின் அடுத்த ஆளுங்கட்சி பா.ஜ.க என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே அவர், பா.ஜ.க-வின் விஸ்வரூப வளர்ச்சி குறித்துப் பேசியிருக்கிறார். சொந்தக் கட்சியினர் வருத்தப்படுவார்கள் என்பதற்காக, `பிசாசுபோல’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் கட்டாயமாக பா.ஜ.க ஆட்சியமைக்கும். பா.ஜ.க-வின் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டதற்கு பா.ஜ.க-வின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.’’