சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இறுதி ஆண்டில் எடப்பாடி ஆட்சி...

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

என்ன செய்தார்..? என்ன செய்வார்..?

2016 மே 23.

ஐந்தாண்டுகள் நிறைவு செய்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நாள்!

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் என்றுகூடச் சொல்லலாம். அந்த நாளைக் கொண்டாடாமல் இடையில் 2017 பிப்ரவரி 16-ம் தேதி, தான் முதல்வர் ஆன தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த தினத்தை மழுங்கடித்துவிட்டு, எடப்பாடிக்குப் புகழாரம் சூட்டி மகிழ்ந்திருக்கிறது அம்மா வழியில் நடக்கும் அரசு. தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் வெளியிடப்பட்ட மூன்றாண்டு சாதனை விளம்பரங்கள் அ.தி.மு.க அரசின் சாதனைகளாக அல்ல... எடப்பாடியின் புகழ்பாடும் சாதனைகளாக முன்னிறுத்தப்பட்டி ருக்கின்றன.

ஜெயலலிதா முதல்வராக இருந்த நேரத்தில், ஒரு நிகழ்ச்சிக்காக அவருக்கு வளர்மதியும் கோகுல இந்திராவும் ஆளுயுர மாலை அணிவித்தார்கள். அப்போது பின்னால் இருந்த அமைச்சர்கள் தலைவிக்காகக் கரவொலி எழுப்பினார்கள். அதில் கடைசி ஆளாக தூரத்தில் நின்றுகொண்டிருந்த எடப்பாடி, ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியிலேயே வந்து அமர்வார் என யாரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் கிடைக்காதா என ரத்தத்தின் ரத்தங்கள் ஏங்கித் தவிக்கும்போது, அவர் அமர்ந்து ஆட்சி செய்த நாற்காலியே எடப்பாடிக்கு வசமானது அதிர்ஷ்டம்தான். ஜெயலலிதா இறந்திருக்காவிட்டால் எடப்பாடிக்கு அந்த வாய்ப்பு வாய்த்திருக்குமா?

ஜெயலலிதாவுடன் அ.தி.மு.க.வினர்...
ஜெயலலிதாவுடன் அ.தி.மு.க.வினர்...

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் ஆன ஓ.பன்னீர்செல்வம், ஆட்சி முடியும் வரையில் முதல்வராகத் தொடரலாம் என நினைத்தபோது, அவருடைய ஆசையில் மண்ணைப் போட்டார் சசிகலா. புதிய முதல்வராக சசிகலாவைத் தேர்வுசெய்ய நடந்த அ.தி.மு.க கூட்டத்தில், சிரித்தபடியே போஸ் கொடுத்து சசிகலாவுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர், அடுத்த 48 மணி நேரத்துக்குள் தடம் மாறினார். ‘தர்மயுத்த நாயகன்’ ஆனார். ‘அம்மாவின் ஆன்மா சொன்னது’ என ‘ரீல்’ விட்டார். ஆனால், ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லித்தான் சமாதிக்குப் போனார் என்பது ‘ரியல்’ ஆனது.

தர்மயுத்த காலத்தில், ‘யார் முதல்வர் ஆகலாம்’ என்கிற கோதாவில் பன்னீரும் சசிகலாவும் ராஜ்பவனை வட்டமடித்தார்கள். அப்போதுகூட சசிகலா அமைச்சரவையில் தனக்கு இடம் கிடைக்குமா என்ற அளவில்தான் எடப்பாடியின் மன ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது. பன்னீரால் போதிய ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் திரட்ட முடியவில்லை. சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானது. தன்னை முதல்வர் ஆவதைத் தடுத்து, சிறைக்குப் போகக் காரணமாக இருந்த பன்னீரைப் பழிவாங்க... யாரை முதல்வர் ஆக்கலாம் என சசிகலா யோசித்தபோது எடப்பாடிக்கு அடித்தது ஜாக்பாட்.

ஜெயலலிதா காலில் கட்சியினர் விதவிதமாக விழுந்து வணங்கும் காட்சிகள் எத்தனையோ பார்த்திருக் கிறோம். தன்னை முதல்வர் ஆக்கிய சசிகலா காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசி வாங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி, தவழ்ந்து சென்று நாற்காலிகளைத் தாண்டி முதல்வர் நாற்காலியில் அமர்ந்த காட்சி, ஊரே சிரித்த காட்சி. ஜெயலலிதாவுக்குக்கூட செய்யாத இந்த மரியாதையை (!) சசிகலாவுக்காகச் செய்தார் எடப்பாடி. அந்த எடப்பாடிதான் நான்கே மாதத்தில் ‘அமைதிப்படை’ நாகராஜ சோழன் அவதாரம் எடுத்தார். சசிகலாவை எதிர்த்த பன்னீரை அமைச்சரவைக்குள் கொண்டு வந்தார்.

‘முத்திரை பதித்த மூன்றாண்டு... முதலிடமே அதற்குச் சான்று’ எனச் சொல்லிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் எடப்பாடி, இந்த மூன்றாண்டில் சாதித்தது என்ன? ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இரண்டு முறையும் இறந்தபோது ஒருமுறையும் முதல்வர் ஆக்கப்பட்ட பன்னீர்செல்வம், ஜெயலலிதா பயன்படுத்திய முதல்வர் அறையையோ அவர் அமர்ந்த நாற்காலியையோ பயன்படுத்தியதில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில்கூட நடுநாயகமாக ஜெயலலிதாவின் படத்தை வைத்துவிட்டு ஓரமாக அமர்ந்துகொண்டவர் பன்னீர்செல்வம். ஆனால், எடப்பாடி அப்படியே மாறிப்போனார். ஜெயலலிதாவின் அறையிலே அமர்ந்து ஆட்சி செய்கிறார். ஜெயலலிதாவாகவே மாற ஆரம்பித்தார். ‘`பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை செய்யுங்க’’ என அரசு விளம்பரத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா
எடப்பாடி பழனிசாமி, சசிகலா

2016 தேர்தலில் ‘`படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வருவோம்’’ எனப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்ததும் 500 டாஸ்மாக் கடைகளை மூட, கடைகளின் நேரத்தை இரண்டு மணி நேரம் குறைக்க முதல் கையெழுத்து போட்டார் ஜெயலலிதா. எடப்பாடி முதல்வராகப் பதவியேற்றதும் ஜெயலலிதா ஸ்டைலிலேயே 500 மதுபானக் கடைகளை மூட ஆணையிட்டு, கோப்பில் முதல் கையெழுத் திட்டார். எடப்பாடியின் ஆட்சிக் காலம் இன்னும் ஓராண்டுதான். தலைவி அளித்த ‘படிப்படியாக மதுவிலக்கு’ என்ற வாக்குறுதியை எடப்பாடி நிறைவேற்றவில்லை. மதுக்கடைகள் பெருமளவில் மூடப்படவும் இல்லை.

ஆளுநர் உரையிலும் பட்ஜெட்டிலும்தான் புதிய அறிவிப்புகள் வெளியிடுவார்கள்.ஆனால் ஜெயலலிதாவோ பட்ஜெட் தாக்கல் ஆன பிறகு சட்டமன்ற விதி 110-ன் கீழ் தினம் ஓர் அறிவிப்பை வெளியிடுவார். அதே பாணியைத்தான் எடப்பாடியும் இப்போது பின்பற்றுகிறார். அப்படி வெளியிட்டப்பட்ட அறிப்புகள் பலவும் வெற்று விளம்பரங்கள்தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்குச் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்’ என அறிவித்தார். தேர்தலுக்காகச் சொல்லப்பட்ட அந்த அறிவிப்பு புஸ்வாணமானது. அந்தத் திட்டத்தை சம்பிரதாயமாகத் தொடக்கி வைப்பதற்காக நடத்தப்பட்ட விழாவுக்கு பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதற்காக 1.12 கோடியைச் செலவழித்தார்கள். இப்போது தரப்பட்டிருக்கும் ‘முத்திரை பதித்த மூன்றாண்டு... முதலிடமே அதற்குச் சான்று’ விளம்பரமும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள முயலும் நிகழ்வுதான்.

ஜெயலலிதா எதிர்த்த உணவுப்பாதுகாப்பு, உதய் மின் திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை எடப்பாடி வலிந்து சென்று ஆதரிக்கிறார்.

‘`என் மாநிலத்துக்கும் மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதிநிதியாக இருப்பதற்காக மிகவும் அவமானப்படுகிறேன். குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்ததன் மூலம் எடப்பாடியின் உண்மையான நிறம், அவருடைய நேர்மையின் அளவு, எந்த விலை கொடுத்தாவது ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது’’ என நடிகர் சித்தார்த் சொன்ன வார்த்தைகள் நிதர்சனம். தன்னுடைய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த அளவுக்குக் கீழிறங்கியும் மத்திய பா.ஜ.க. மோடி அரசுக்குக் கூழைக்கும்பிடு போடும் எடப்பாடி பழனிசாமி, மாநில உரிமைகளை ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்துவிட்டார்.

ஜெயலலிதா எதிர்த்த உணவுப்பாதுகாப்பு, உதய் மின் திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை எடப்பாடி வலிந்து சென்று ஆதரிக்கிறார். முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதற்காக `விஸ்வரூபம்’ படத்தை ஓடவிடாமல் தடுத்த ஜெயலலிதா, இன்றைக்கு உயிருடன் இருந்திருந்தால் குடியுரிமைத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஒருசமயம் அவர் ஆதரவு கொடுத்திருந்தாலும் இப்போது உருவாகியிருக்கும் போராட்டத்துக்குப் பிறகு ‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம்’’ எனச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவாக மாற வேண்டும் என நினைத்த எடப்பாடிக்கு அவரைப்போலவே துணிச்சல் மட்டும் வாய்க்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியைக்கூடத் தமிழகத்தில் நடத்தவிடாமல் 2013-ல் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. அவரின் துணிச்சல் எங்கே? கட்சியை டெல்லிக்கு அடமானம் வைத்துவிட்ட எடப்பாடியின் கோழைத்தனம் எங்கே? பி.ஜே.பி கொண்டு வரும் எல்லாச் சட்டங்களையும் திட்டங்களையும் கண்மூடிக்கொண்டு ஆதரித்து அண்ணா தி.மு.க-வை ‘அமித் ஷா தி.மு.க’ ஆக்கிவிட்டார்.

எடப்பாடி அரசின் மூன்றாண்டு சாதனைக்கு சித்தார்த்திடம் இருந்தே ஒரு சாம்பிள் கொடுக்க முடியும். 2014-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை `காவியத் தலைவன்’ படத்தில் நடித்த சித்தார்த்துக்கு 2017-ம் ஆண்டு அறிவித்தது எடப்பாடி ஆட்சி. அந்த விருதை எப்போது கொடுப்பார்கள் என்றே தெரியவில்லை. ‘காவியத் தலைவன்’ எம்.ஜி.ஆர் கொள்கையையும் கட்டிக்காக்கவில்லை. அதைச் சுட்டிக்காட்டிய ‘காவியத் தலைவன்’ படக் கதாநாயகனையும் மதிக்கவில்லை.

என்.பி.ஆரில் இப்போது கேட்கப்படும் கூடுதல் கேள்விகளும் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஷரத்துகளும் 1952-ம் ஆண்டே அமல்படுத்தப்பட்டிருந்தால் இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆர் நடிகர் ஆகியிருப்பாரா... அ.தி.மு.க-வைத் தொடங்கியிருப்பாரா... நாடாள முடிந்திருக்குமா? அன்றைக்கு என்.பி.ஆர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் சாத்தியமா? இவற்றை யெல்லாம் சிந்தித்துப் பார்த்தாரா எடப்பாடி?

`கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்பது அ.தி.மு.க பைலா. இந்த விதியின்படிதான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆனார்கள். இந்த பைலாவுக்கு ஒரு பெருமை உண்டு. கட்சியின் எந்த விதியையும் உருவாக்கவோ, திருத்தம் செய்யவோ, நீக்கவோ பொதுக்குழுவுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இந்த விதியை மாற்றவோ திருத்தவோ முடியாது. இந்த ஏற்பாட்டை எம்.ஜி.ஆர் செய்துவிட்டுப் போனார். ஜெயலலிதாவும் அதைப் பின்பற்றிவந்தார். ஆனால், இந்த விதியையே மாற்றிவிட்டார்கள் எடப்பாடியும் பன்னீரும்.

அ.தி.மு.க-வின் அதிகாரம் அனைத்தும் ‘பொதுச்செயலாளர்’ பதவிக்குத்தான் உண்டு. இந்தப் பொதுச்செயலாளரைவிட கட்சிக்கே சம்பந்தம் இல்லாத ‘துணைச் செயலாளர்’ ஒருவருக்குத்தான் அதிகாரம் உண்டு என்கிற அவப்பெயரையும் ஏற்படுத்தினார் எடப்பாடி. “தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘குடியுரிமை மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்’ என்றார்’’ என்று சொல்லி அதிர வைத்தார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். ஜெயலலிதா மறைந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்தினார்கள். அதை எதிர்த்துக் குரல் கொடுத்த , எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை அதே தலைமைச் செயலகத்திலிருந்து வந்த உத்தரவுக்குக் கட்டுப்பட வைத்தார்கள்.

‘`ஒரே ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றதற் காக எடப்பாடியைப் பாராட்டு கிறார்கள். மதுரை எய்ம்ஸ் அறிவிப்பும் இன்னும் நிறைவேறாத நிலையில் இந்தக் கல்லூரிகளின் நிலை என்ன ஆகும்’’ எனக் கேள்வி எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

‘`ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம். சிக்ஸர் அடிக்கலாம். ஆனால், 9 ரன் எடுப்பவர் நம்ம முதல்வர் மட்டுமே’’ என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எடப்பாடிக்குப் புகழாரம் சூட்டுகிறார். ‘`நம்ம முதல்வர் மட்டுமே’’ என்றால்... ஜெயலலிதாவுக்கு அவ்வளவுதான் மரியாதையா?

‘`ஜெயலலிதா என்னை அறைந்தார்’’ என நாடாளுமன்றத்தில் பொங்கிய சசிகலா புஷ்பா, இப்போது பி.ஜே.பி-யில் சேர்ந்துவிட்டார். தன் கட்சி எம்.பி. பி.ஜே.பி-யில் போய்ச் சேர்ந்ததற்காக ஒரு கண்டனத்தையோ கட்சித் தாவல் நடவடிக்கையையோ எடுக்காத எடப்பாடிதான் அ.தி.மு.க பெயரில் போலி இணையதளம் நடத்தியதாகச் சொல்லி கே.சி.பழனிசாமியைக் கைது செய்கிறார். இந்தப் பழனிசாமி பாவம் ஓ.பன்னீர்செல்வம் விசுவாசி. ஆனால் முதல்வர் பழனிசாமியிடம் சரண்டர் ஆகிவிட்ட பன்னீர், தன் விசுவாசி பழனிசாமியை அம்போ என்று விட்டுவிட்டார்.

கூவத்தூரில் தவழ்ந்துபோய் சசிகலா காலில் ஆசி வாங்கிய எடப்பாடி இப்போது இல்லை. கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு 90 டிகிரியில் நிமிர்ந்து நிற்கும் வேறு எடப்பாடி இவர். தர்மயுத்தம் நடத்திய பன்னீருக்கு எதிராகச் சீறி, எடப்பாடியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டுச் சிறைக்குப் போனார் சசிகலா. எடப்பாடியோ, பன்னீருக்குத் துணை முதல்வர் பட்டாபிஷேகம் கட்டி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நாற்காலியில் அமர வைத்தார். இரட்டை இலையை முடக்கக் காரணமான பன்னீரைக் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். தினகரனை ஓரங்கட்டினார்கள். ஆட்சியை ‘அமோகமாக’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அமைச்சர் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளக் காவடி தூக்கி, மண்ணில் புரண்டு, மண்சோறு சாப்பிட்டிருப்பார்கள் மந்திரிகள். அ.தி.மு.க கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் அரங்கேறும் அவலங்களைத் தட்டிக்கேட்பதற்கு சமாதியில் இருந்து ஜெயலலிதா எழுந்தா வரப்போகிறார்?

2021 மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். மீண்டும் ஆட்சியைப் பிடித்து அமர்ந்துவிட எடப்பாடி நினைக்கிறார். தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்தை மீண்டும் அமைச்சரவைக்குள் இணைக்க நடந்த பேச்சுவார்த்தையில் பிரதானமாக வைக்கப்பட்ட கோரிக்கை முதல்வர் பதவி. அந்தப் பதவியை விட்டுத் தர முடியாது என்பதில் விடாப்பிடியாக இருந்த எடப்பாடி, அடுத்த தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் தான்தான் என்பதை அழுத்தமாக முத்திரை பதிக்கும் வகையில்தான் இப்போது காய்கள் நகர்த்திக்கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்சி சாதனை விளம்பரங்களில்கூட ஜெயலலிதா, எடப்பாடி படங்கள் மட்டுமே இருக்கின்றன. பன்னீரைக் காணவில்லை. கட்சி என் கையில், ஆட்சி என் கையில் என்பதை, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அழுத்தமாகப் பதிய வைக்க நினைக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுக்க ஆரம்பித்துவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த போது 22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போதுமான அளவுக்கு இடங்களை வென்று ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்தை சாமர்த்தியமாகத் தவிர்த்தார். நாடாளுமன்றத் தொகுதிகளைத் தவிர்த்து இடைத்தேர்தலில் வெல்ல வேண்டிய சட்டசபைத் தொகுதிகள்மீது கவனத்தைக் குவித்து வெற்றிபெற்றதுபோல, அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலிலும் 130 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றிபெறலாம் என்பதுதான் எடப்பாடியின் திட்டம். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகள் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றது. அதன்பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க முதலிடம் வந்தபோது அந்தக் கட்சியை நெருங்கும் வகையில் இடங்களை அள்ளியது அ.தி.மு.க கூட்டணி. இந்த நம்பிக்கையை வைத்துதான் கட்சியை பலப்படுத்தி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறார் எடப்பாடி. அதற்காக மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்.

ரஜினி தலைமையில் கூட்டணி அமைந்தால் அதில் அ.தி.மு.க பங்கேற்குமா என்பது கேள்விக் குறிதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிக தொகுதிகள் கேட்ட பி.ஜே.பி-க்கு 5 இடங்கள்தான் அளித்தது அ.தி.மு.க. அதனால், ரஜினியின் கூட்டணியில் அ.தி.மு.க இணையும் வாய்ப்பு வந்தாலும் தன்னுடைய இடத்தை எடப்பாடி விட்டுத் தரத் தயாரில்லை என்றுதான் தோன்றுகிறது.

அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலிலும் 130 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றிபெறலாம் என்பதுதான் எடப்பாடியின் திட்டம்.

ஆனால், அதிகாரத்தை ருசிப்பதற்கு எடப்பாடியைப் பலி கொடுத்து பா.ஜ.க-வுடன் கைகோக்க ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஏராளமான ‘அமைதிப்படை’ அமாவாசைகள் அ.தி.மு.க-விலேயே இருக்கின்றனர். எடப்பாடியை மதிக்காமல் தான்தோன்றித் தனமாகக் கருத்து தெரிவித்துவரும் ராஜேந்திர பாலாஜியும் பா.ஜ.க ஸ்லீப்பர்செல் மாபா.பாண்டியராஜனுமே அதற்கு சாட்சிகள்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை திராவிடக் கட்சிகளை ஒழித்துவிட்டு, இந்துத்துவச் சித்தாந்தத்தைத் தமிழகத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதற்காகத்தான் ரஜினியைக் கொண்டுவர நினைக்கிறது பா.ஜ.க. அது அ.தி.மு.க-வை அரவணைத்து நடக்கவேண்டுமா, அழித்து நடக்கவேண்டுமா என்ற சிந்தனையில்தான் டெல்லி பா.ஜ.க தலைமை இருக்கிறது. ரஜினி நேரடியாக பா.ஜ.க ஆளாக வருவாரா, பா.ஜ.க மறைமுகமாக இயக்க தனிக்கட்சிப் போர்வையில் வருவாரா, அ.தி.மு.க-வுடன் ரஜினி - பா.ஜ.க கூட்டணி அமையுமா, அ.தி.மு.க-வை உடைத்து அதை ரஜினியின் கையில் பா.ஜ.க ஒப்படைக்குமா என்று பல கேள்விகள் இருக்கின்றன.

அடுத்தமுறை அ.தி.மு.க ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறதா, வந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வரா என்பதும் முக்கியமான கேள்விகள். நாளை அரசியல் களத்தில் அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எதுவும் நடக்கலாம். எங்கேயோ இருந்த எடப்பாடி முதல்வர் ஆவதும் அ.தி.மு.க-வில் சாத்தியம்; இன்றைய முதல்வர் நாளை முகவரியே இல்லாமல்போவதும் அ.தி.மு.க-வில் சாத்தியம்.