Published:Updated:

ஒன் பை டூ

கரு.நாகராஜன், லட்சுமி ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன், லட்சுமி ராமச்சந்திரன்

“நாங்கள் வாங்கித்தந்த சுதந்திரத்தால்தான் பிரதமராகி மோடியால் இன்று ஆட்டம்போட முடிகிறது” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருப்பது?

ஒன் பை டூ

“நாங்கள் வாங்கித்தந்த சுதந்திரத்தால்தான் பிரதமராகி மோடியால் இன்று ஆட்டம்போட முடிகிறது” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருப்பது?

Published:Updated:
கரு.நாகராஜன், லட்சுமி ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன், லட்சுமி ராமச்சந்திரன்

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“வேடிக்கையான பேச்சு. 30 கோடி இந்தியர்களும், 30,000 சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பல சமஸ்தானங்களும் போராடிப் பெறப்பட்டது இந்திய சுதந்திரம். காங்கிரஸ் கட்சிக்கும் இந்திய சுதந்திரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. சுதந்திரம் பெற்றதுமே, `காங்கிரஸைக் கலைத்துவிடலாம்’ என்று காந்தியடிகள் கூறினார் என்பதை மறந்துவிடக் கூடாது. ஜெயிலுக்கும் ஜாமீனுக்கும் அலையும் தலைவர்கள்தான் இன்று காங்கிரஸில் இருக்கிறார்கள். உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிரவைத்திருக்கும் பாரதப் பிரதமரை இப்படிப் பேசியதற்கு அவர் வெட்கப்பட வேண்டும். கடந்த எட்டு வருடங்களில் வரலாறு காணாத வளர்ச்சியை இந்தியா கண்டிருக்கிறது. ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் அனைத்து முகாந்திரங்களோடுதான் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ராகுல் விசாரணைக்குச் செல்கிறார். ஏதோ சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை விசாரணைக்கு அழைப்பதுபோல காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இப்போது நடைபெறும் போராட்டங்களைப்போல மக்களின் பிரச்னைகளுக்காக ஏதாவது போராட்டம் நடத்தியது உண்டா... இதிலிருந்தே அவர்களின் லட்சணத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் அர்த்தமில்லாமல் பேசுவதில் இளங்கோவனுக்கு நிகர் அவர் மட்டுமே!”

கரு.நாகராஜன், லட்சுமி ராமச்சந்திரன்
கரு.நாகராஜன், லட்சுமி ராமச்சந்திரன்

லட்சுமி ராமச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர், காங்கிரஸ்

“உண்மையைத்தான் பேசியிருக்கிறார். பா.ஜ.க-வின் எட்டு வருட ஆட்சியில் அரைவேக்காட்டுத்தனமான திட்டங்களைக் கொண்டுவந்து மக்களைக் கஷ்டப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். திட்டங்கள் கொண்டுவருவதும், மக்களின் எதிர்ப்பு காரணமாக அவற்றைத் திரும்பப் பெறுவதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. பா.ஜ.க உண்மையில் இந்தியாவின் வளர்ச்சியை அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது. பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மா பேச்சால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் உண்டானது. அந்த விவகாரத்தை திசைதிருப்ப ராகுல் காந்தியின் மீது அமலாக்கத்துறை விசாரணை என்ற நாடகத்தை நடத்திவருகிறது பா.ஜ.க. அமலாக்கத்துறை முதல் வருவாய்த்துறை வரை மத்திய அரசின் துறைகளை பா.ஜ.க-வினர் தவறாகப் பயன்படுத்தி, அடக்குமுறை அரசியலை நடத்துகிறார்கள். ஆட்சியின் தவறுகளுக்கு எதிராகப் போராடுபவர்களின் வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்கும் கேவலம் உலகில் எங்கேயும் கிடையாது. பா.ஜ.க-வினர் சர்வாதிகாரப் போக்கால், இந்தியாவின் இறையாண்மையைச் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவை ஏற்படுத்திக்கொடுத்த எங்களையே மோடி அரசு அடக்குமுறை கொண்டு கையாள நினைப்பதைத்தான் இளங்கோவன் பேசியிருக்கிறார்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism