அரசியல்
அலசல்
Published:Updated:

பி.டி.ஆரின் நிதி மேலாண்மை... சாதிக்கிறாரா... சறுக்குகிறாரா?

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மோடி அரசு என்ன சொன்னாலும் கேட்கிறது என்று சொல்லி, அ.தி.மு.க அரசை `அடிமை அரசு’ என்று விமர்சித்தார்கள். இப்போது இவர்களும் `மத்திய அரசு சொல்வதால் மின்கட்டணத்தை உயர்த்துகிறோம்’ என்கிறார்கள்.

ஆங்கில ஊடகத்தின் விவாத நிகழ்ச்சி ஒன்றில், மாநில அரசின் ‘இலவசத் திட்டங்கள்’ குறித்த கேள்விக்கு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக அளித்த பதில், நாடு முழுவதும் வைரலானது. உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியாலும் விமர்சிக்கப்பட்ட அந்தச் ‘சம்பவ’த்துக்குப் பிறகு, செப்டம்பர் 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில் திடீரெனச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் பி.டி.ஆர்.

கனவில்கூட காணமுடியாது!

அப்போது, “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அரசின் வருவாய்ப் பற்றாக்குறையை அமைச்சர்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு குறைத்திருக்கிறோம். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்காத அளவில் கடன்கள், வட்டிகளைக் குறைத்திருக்கிறோம். வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்ததன் மூலமாக, ஆண்டுதோறும் செலுத்தவேண்டிய வட்டியில், ஆயிரம் கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சொந்த வரிகள் மூலமான வருவாய் 50 சதவிகிதத்துக்கு அதிகமாகவும், வரி அல்லாத வருவாய் 74 சதவிகிதத்துக்கும் கூடுதலாகவும் பெற்றிருக்கிறோம். இதைவிட சிறப்பான நடவடிக்கையைக் கனவில்கூட காண முடியாது” என்று தெரிவித்தார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நுகர்வோருக்கான உணவுப் பொருள்கள் விலைவாசி உயர்வு குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசின் புள்ளியியல் துறை அவ்வப்போது வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மற்ற மாநிலங்களைவிட தென் மாநிலங்களில் உணவுப்பொருள்கள் விலை உயர்வு குறைவாக இருக்கிறது. இந்திய அளவில் உணவுப்பொருள்களின் விலை உயர்வு 7.6 சதவிகிதமாக இருக்கும் நிலையில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் உணவுப்பொருள்களின் விலை உயர்வு ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உணவுப்பொருள்கள் விலை உயர்வு 3.6 சதவிகிதம்தான். தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் கணிசமான மக்கள் பயன்பெறுவதால், இங்கு விலைவாசி ஏற்றத்தின் சதவிகிதம் பெருமளவு குறைந்திருக்கிறது” என்றார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நிதி மேலாண்மை பேசுபொருளாக மாறியிருப்பதால், கடந்த ஓராண்டில் நிர்வாகரீதியில் என்னென்ன நடைமுறை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று நிதித்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம்.

ஒரே கணக்கு!

“நிதியமைச்சராக பி.டி.ஆர் பொறுப்பேற்ற பிறகு நிதி மேலாண்மையில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் நிதிகள் தனித்தனிக் கணக்குகளில் ஆங்காங்கே பராமரிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் ஒரே கணக்கின்கீழ் கொண்டுவந்தார். அந்த நிதி மட்டுமே சுமார் ரூ.2,000 கோடி. ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது... அது எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையெல்லாம் நிதியமைச்சர் பார்க்கிறார். இத்தகைய நடவடிக்கைகள் தமிழக அரசின் நிதி நிலைமையை மேம்படுத்தியிருக்கின்றன” என்றார்கள்.

எனினும், நிதியமைச்சர் பி.டி.ஆரின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்துவரும் பா.ஜ.க-வினர், மாநில அரசின் நிதி மேலாண்மை குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள். இது பற்றி, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்.

இராம.ஸ்ரீனிவாசன்
இராம.ஸ்ரீனிவாசன்

“ஒவ்வொரு தமிழன்மீதும் ரூ.1.25 லட்சம் கடன் இருப்பதாக தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. அந்தக் கடன் தொகை, கடந்த ஒன்றரை ஆண்டில் எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்பதை நிதியமைச்சர் தெரிவிக்க வேண்டும். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றபோது ரூ.5.5 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாடு அரசின் கடன், தற்போது ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறதே, இதற்கு என்ன பதில்... மின் கட்டணம் ஏறத்தாழ 54 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 40 சதவிகித சொத்து வரி உயர்வு, மூன்று முறை ஆவின் பால் விலை உயர்வு எனக் கட்டணங்களையும், விலையையும் உயர்த்திவிட்டு, நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம்... மக்கள் மேல் சுமையை ஏற்றிவிட்டு, `நிதி நிலையை மேம்படுத்திவிட்டோம்’ என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது... `அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் முறையைக் கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்குவந்தார்கள். இப்போது, `பழைய பென்ஷனை ஒருபோதும் திரும்பக் கொண்டுவர முடியாது’ என்கிறார் நிதியமைச்சர். ஒருபோதும் செயல்படுத்த முடியாத வாக்குறுதியை ஏன் கொடுக்க வேண்டும்... நிதியமைச்சர் பி.டி.ஆரைப் பொறுத்தவரை, அவர் நிறைய பேசுகிறார்... அதிகமாகச் சத்தம் போடுகிறார். ஆனால், செயலில் ஒன்றுமில்லை. தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை மிக மோசமாகவே இருக்கிறது” என்றார்.

“இந்தக் குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கும் பொருந்தும்தானே... மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று சொல்கிறார்களே?” என்று கேட்டோம்.

இதுவும் அடிமை அரசா?

“மோடி அரசு என்ன சொன்னாலும் கேட்கிறது என்று சொல்லி, அ.தி.மு.க அரசை `அடிமை அரசு’ என்று விமர்சித்தார்கள். இப்போது இவர்களும் `மத்திய அரசு சொல்வதால் மின்கட்டணத்தை உயர்த்துகிறோம்’ என்கிறார்கள். அப்படியென்றால், தி.மு.க அரசும் அடிமை அரசா... ‘ஒன்றிய’ அரசு சொல்வதை ‘திராவிட மாடல்’ அரசு ஏற்காது என்று மறுத்திருக்கவேண்டியதுதானே...” என்று கேட்கிறார் சீனிவாசன்.

மத்திய அரசும், மாநில அரசும் தங்கள் நிதி மேலாண்மையை மெச்சிக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டின் நிதியமைச்சர்களான இல்லத்தரசிகள் என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம்!