Published:Updated:

கருத்து சுதந்திரத்தைச் சிறை வைக்கலாமா?

கருத்து சுதந்திரத்தைச் சிறை வைக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்து சுதந்திரத்தைச் சிறை வைக்கலாமா?

போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மரணமடைந்தவிதம் குறித்து சமூக வலைதளப் பக்கங்களில் எழுதிய பத்திரிகையாளர்களே குறிவைக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கும் நிருபர்களை ‘ஆன்ட்டி இண்டியன்’ என்றார்கள். அதன் அடுத்தகட்டமாக இப்போது பத்திரிகையாளர்கள்மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்திருக்கிறது.

ஜனவரி 26, குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி மோசமான வன்முறையில் முடிந்தது. அனுமதிக்கப்பட்ட பாதைகளைத் தாண்டி பல இடங்களில் விவசாயிகள் பேரணி நடத்தினர். பல இடங்களில் விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் மோதல் வெடித்தது. செங்கோட்டை வரை சென்ற சிலர், அத்துமீறி செங்கோட்டைக்குள் நுழைந்து சீக்கியக் கொடியை ஏற்றினர். வன்முறையை யார் நிகழ்த்தினாலும், எந்த வடிவத்தில் வந்தாலும், அது தவறு. வன்முறை குறித்து ஒரு பக்கம் டெல்லி போலீஸ் விசாரித்துவர, இன்னொரு பக்கம் பத்திரிகையாளர்கள்மீதும் வழக்கு போடுவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

விவசாயிகள் பேரணி குறித்தும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும் செய்தி வெளியிட்ட பலர்மீது, வழக்கு போடப்பட்டுள்ளது. ‘இந்தியா டுடே’வின் ராஜ்தீப் சர்தேசாய், ‘நேஷனல் ஹெரால்டு’ இதழின் மூத்த ஆசிரியர் மிருணாள் பாண்டே, ‘குவாமி ஆவாஸ்’ ஆசிரியர் ஜாஃபர் ஆகா, ‘கேரவன்’ இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத், அதே இதழின் ஆனந்த் நாத், வினோத் கே.ஜோஸ் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. தேசத்துரோகம், வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டுதல், மத நம்பிக்கைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களில் ஒரே மாதிரியான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கருத்து சுதந்திரத்தைச் சிறை வைக்கலாமா?

போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மரணமடைந்தவிதம் குறித்து சமூக வலைதளப் பக்கங்களில் எழுதிய பத்திரிகையாளர்களே குறிவைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களைவைத்து, ‘அவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்’ என்று குறிப்பிட்ட ராஜ்தீப் சர்தேசாய், ‘அந்த விவசாயி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்தான் இறந்தார்’ என போலீஸார் வெளியிட்ட வீடியோவையும் உடனே பகிர்ந்தார்.

பொய்களிலிருந்து உண்மையைப் பிரித்தறிய முடியாத அளவுக்கு வதந்திகள் பலவும் செய்திகளைப்போலவே வேடமணிந்து வரும் சமூக வலைதள யுகம் இது. இந்தச் சூழல், பத்திரிகையாளர்கள் பலரையும் ஏமாற்றிவிடுகிறது. ஒரு போராட்டம் நடைபெறும் நேரத்தில், அதில் நிகழும் பல்வேறு சம்பவங்களைப் பத்திரிகையாளர்கள் பதிவுசெய்வது இயல்பே! சம்பவங்களை நேரில் பார்ப்பவர்கள் மற்றும் காவல்துறையினர் தரும் தகவல்களை அடிப்படையாக வைத்தே இதைப் பத்திரிகையாளர்கள் செய்கிறார்கள். இதில் தவறுகள் நேர்வது இயல்பு. அதைத் திருத்திக்கொள்வதும் இயல்பே!

ராஜ்தீப் சர்தேசாய் - மிருணாள் பாண்டே
ராஜ்தீப் சர்தேசாய் - மிருணாள் பாண்டே

‘இந்தப் பத்திரிகையாளர்கள் எழுதிய ட்வீட்கள் உள்நோக்கத்துடன் தீங்கிழைக்கும் வகையில் இருந்தன. போராட்டக்காரர்கள் செங்கோட்டையை முற்றுகையிட அதுவே காரணம்’ என்றும் முதல் தகவல் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. உறுதி செய்யப்படாத ஒரு தகவலை எழுதுவது என்பது தேசத்துரோகமா? நிச்சயம் இல்லை.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ, பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்காகப் போராடுபவர்களைத் தேசத்துரோகக் குற்றம்சாட்டி சிறையில் தள்ளுவதற்காக தாமஸ் மெக்காலே 1870-ம் ஆண்டு கொண்டுவந்த இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் ‘தேசத்துரோகி’ என முத்திரை குத்தலாம். அந்த அளவுக்குக் குழப்பமான வார்த்தைகளுடன் வடிவமைக்கப்பட்ட சட்டப்பிரிவு இது. ‘சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட இந்திய அரசின்மீது வெறுப்பு ஏற்படுத்தும்படியான செயல்களை பேச்சு, எழுத்து, சைகைகள் என எந்த வடிவத்தில் ஒருவர் செய்தாலும் அது தேசவிரோதமாகக் கருதப்படும். இதற்குக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம்’ என்பதே இந்தச் சட்டப்பிரிவின் சுருக்கம்.

ஜாஃபர் ஆகா - பரேஷ் நாத்
ஜாஃபர் ஆகா - பரேஷ் நாத்

நாம் ‘தேசப்பிதா’வாக மதிக்கும் மகாத்மா காந்தியை, இந்தச் சட்டத்தின்கீழ் தேசத்துரோகியாக நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்தியது பிரிட்டிஷ் அரசு. ‘யங் இந்தியா’ இதழில் எழுதிய மூன்று கட்டுரைகளுக்காக அவர்மீது வழக்கு போட்டார்கள். அப்போது அவர் வைத்த வாதமே, ‘எது தேசத்தின்மீதான நேசம்’ என்பதற்கான அளவுகோல். ‘‘நம் மக்களின் சுதந்திரத்தை ஒடுக்கும் பல்வேறு அரசியல் சட்டப் பிரிவுகளின் இளவரசன் என இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-A கருதப்படலாம். சட்டத்தின் மூலம் மக்களிடம் நாட்டின்மீது நேசத்தை உருவாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ முடியாது. ஒருவருக்கு ஒரு நபர் அல்லது அமைப்புமீது நேசமில்லாமல் போகலாம். அந்த நேசமின்மையை முழுமையாக வெளிப்படுத்த அவருக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். அவர் வன்முறையைப் பற்றிச் சிந்திக்கவோ, அதைப் பரப்பவோ, அதைத் தூண்டும் செயல்களில் ஈடுபடவோ முயற்சி செய்யாதவரை, அவர்மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது’’ என்றார் காந்தி.

‘‘பத்திரிகைகள் கடுமையாக விமர்சனம் செய்யவும், ஏன்... விஷயங்களைத் தவறாகச் சித்திரிக்கவும்கூட முடிந்தால்தான், கருத்துச் சுதந்திரம் உண்மையில் மதிக்கப்படுகிறது என அர்த்தம்’’ என்று சொன்னவர் காந்தி. இந்தத் தேசத்துரோக சட்டம் நீக்கப்பட வேண்டும் என விரும்பினார் காந்தி. துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் கட்சி அதைச் செய்யவே இல்லை.

‘இந்த தேசத்துரோகச் சட்டமானது, அரசியல் சட்டத்தின் பிரிவு 19(1)(a), மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமைக்கு எதிரானதா?’ என்ற வாதம் பலமுறை நீதிமன்றங்களில் வந்திருக்கிறது. ‘அரசை விமர்சனம் செய்து பேசவும் எழுதவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அது சட்டம் ஒழுங்கு பிரச்னையையோ, வன்முறையையோ தூண்டும் நோக்கத்துடன் செய்யப்படாதவரை பிரச்னை இல்லை’ என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

‘தேசத்துரோகச் சட்டத்தை உண்மையிலேயே நாட்டுக்கு விரோதமாக நடக்கும் செயல்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். யாரோ சிலர் இங்கும் அங்கும் சில கோஷங்களை எழுப்புவதெல்லாம் தேசவிரோதம் ஆகிவிடாது’ எனக் கடந்த 95-ம் ஆண்டு பல்வந்த் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது. 2016 செப்டம்பரில் ஒரு தீர்ப்பில், இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிகளையும் விவரித்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவற்றை யாரும் பின்பற்றவில்லை. கடந்த 2018-ம் ஆண்டில் சட்ட ஆணையம் இந்த இ.பி.கோ 124(A) பிரிவை நீக்குவதற்குப் பரிந்துரை செய்தது. அல்லது ‘அரசுக்கு எதிராகக் கலவரங்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களைச் செய்பவர்கள்மீது மட்டுமே இந்தச் சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று யோசனை சொன்னது.

ஆனந்த் நாத் - வினோத் கே.ஜோஸ்
ஆனந்த் நாத் - வினோத் கே.ஜோஸ்

இது போன்ற சட்டங்களின் முன்னோடியான பிரிட்டிஷ் அரசே, 2009-ம் ஆண்டில் தேசத்துரோக சட்டங்களை நீக்கிவிட்டது. நாம் இன்னும் வைத்திருக்கிறோம். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் ஆகியோர் வரிசையில் இப்போது பத்திரிகையாளர்கள்மீதும் வழக்கு.

‘இப்படி வழக்கு பதிவுசெய்வது, பத்திரிகை யாளர்களை அச்சுறுத்தும் முயற்சி’ என இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்திய பிரஸ் கிளப் தலைவர் ஆனந்த் சஹாய், ‘‘எமர்ஜென்சி காலத்தில்கூட பத்திரிகையாளர்கள் இவ்வளவு கடுமையாக நடத்தப்பட்டது இல்லை. உத்தரப்பிரதேசம், மணிப்பூர், குஜராத், மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களில் சமீப காலங்களில் இப்படிப் பத்திரிகையாளர்கள்மீது தேசத்துரோக வழக்கு போடுவது அதிகரித்துள்ளது’’ என்கிறார்.

கருத்துச் சுதந்திரத்தை சிறைவைக்கும் முயற்சி கவலைக்குரியது!