Published:Updated:

வளர்ச்சி... முந்திச் செல்லும் கடைசி மாநிலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முந்திச் செல்லும் கடைசி மாநிலம்
முந்திச் செல்லும் கடைசி மாநிலம்

ஜூ.வி 2020

பிரீமியம் ஸ்டோரி

ஓவியம்: சாய்

சுதந்திர இந்தியாவின் பயணம் இடையூறுகளுடன்தான் தொடங்கியது; ஆமை வேகத்தில்தான் நகர்ந்தது. நீளமான அந்த ரயிலின் கடைசிப் பெட்டி மட்டும் தனியாக இன்ஜின் பொருத்திக்கொண்டு வளர்ச்சி எனும் தனிப்பாதையிலே வேகமாக முன்னேறத் தொடங்கியது. எல்லாப் பெட்டிகளையும் பின்னுக்குத் தள்ளி முன்னே போய் நின்றது அந்தப் பெட்டி... அதுதான் தமிழ்நாடு!

இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்று தேசமெங்கும் பேசப்படுகிறது. அரசியல் நிலைப்பாட்டில் மட்டுமல்ல; உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், மருத்துவம் மற்றும் கல்வி எனப் பல்வேறு துறைகளிலும் முன்னே செல்கிறது தமிழ்நாடு. கல்வியால் அடித்தளமிட்ட காமராஜர் தொடங்கி யதேச்சையாக பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி வரை அனைத்து முதல்வர்களுக்கும் இதில் பங்குண்டு.

1990-களுக்குப் பின்பே தமிழகத்தின் வளர்ச்சி தனி வேகமெடுத்தது. 1991-ம் ஆண்டு பிரதமராக நரசிம்மராவும் நிதியமைச்சராக மன்மோகன்சிங்கும் இருந்தபோது உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் பட்டது. உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்ற அமைப்புகளிடம் கடன் பெற்று பல மாநிலங்களில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. கடன் கொடுத்த அமைப்புகள், நம் நாட்டில் என்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் கட்டளையிடுகிற நிலை ஏற்பட்டது. ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு போன்றோர், உலக வங்கி சொல்வதை அப்படியே செயல்படுத்துபவர்களாக இருந்தனர். ஆனால், தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் மாற்றி யோசித்தனர்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் உலக வங்கி போன்ற அமைப்புகள் சொல்கிற அனைத்துக்கும் தலையாட்டாமல், தமிழகத்துக்கு என்ன தேவையோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தினர். சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்தார்கள். தனியாரை அனுமதித்தனர். ஆனால், அரசுத் துறைகளை அழித்துவிட வில்லை. சமச்சீரான வளர்ச்சிக்கு இது உதவியது.

தமிழகத்தில் சேவைத்துறையின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஆண்டுக்கு 7.5 - 8 சதவிகிதம் என்ற அளவில் வளர்கிறது சேவைத்துறை. உற்பத்தித் துறையைப் பொறுத்தளவில், இந்தியா எந்தளவுக்கு வளர்ச்சியில் இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தமிழ் நாட்டின் வளர்ச்சியும் இருக்கிறது. வேளாண்துறை வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருந்தாலும், வேளாண்துறையில் இந்திய அளவிலான வளர்ச்சியைவிட அதிகமான வளர்ச்சி தமிழ்நாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவத்தில், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. அதனாலேயே பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக ஏராளமானோர் இங்கே வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனை களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதனால் ஏழை, பணக்காரர் எல்லோருக்கும் உயர்தர சிகிச்சைக்கு உத்தரவாதம் தருகிறது தமிழகம். மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் எல்லா வகையான மருத்துவ நிபுணர்களும் தமிழ்நாட்டில் நிரம்பியிருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு இல்லை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், ‘‘தமிழ்நாட்டில் சமூகத்துறையில் தொடர்ந்து முதலீடு செய்யப் பட்டதால், மனிதவளக் குறியீடுகளில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட்டது. சிசு மரண விகிதமும், பிரசவத்தின்போது தாய்மார்கள் மரணமடையும் விகிதமும் வெகுவாகக் குறைந்தன. தமிழ்நாட்டின் மருத்துவத்துறையில் தனியார்மயம் அதிகரித்தாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. சில குறைபாடுகள் இருந்தபோதிலும், அரசு மருத்துவ மனைகள் அதிநவீனமாகியிருக் கின்றன. அரசு மருத்துவமனைகளை மூடுவது என்ற நிலை இங்கு இல்லை.

முந்திச் செல்லும் கடைசி மாநிலம்
முந்திச் செல்லும் கடைசி மாநிலம்

‘தமிழ்நாடு மெடிக்கல் கார்ப்பரேஷன்’ என்கிற ஓர் அமைப்பு, தமிழக அரசால் தொடங்கப் பட்டுள்ளது. இதுபோன்ற ஓர் அமைப்பு வேறு எங்குமில்லை. இதன் மூலம் பொதுச்சந்தையில் ஐந்து மடங்கு, ஆறு மடங்கு விலை குறைவாக மருந்துகள் வாங்கப் படுகின்றன. அதனால், இந்தியா விலேயே மிகக்குறைந்த செலவில் மருத்துவம் அளிக்க முடிகிறது. மருந்துகளையும் தரமுடிகிறது” என்றார்.

இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில்தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தொழில்வளர்ச்சி அதிகமாக இருப்பதுடன், அதுவேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பதுதான் தனிச்சிறப்பு.

இதைப்பற்றியும் விரிவாக விளக்குகிறார் ஜெயரஞ்சன்...

“1990-க்கு முன்பிருந்தே தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலம். மேலும், 1990-களில் மாற்றங்கள் வந்தபோது, அதைச் சரியாகப் புரிந்து கொண்டு அந்த மாற்றத்தின் போக்கிலேயே சென்று, வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டார்கள் தமிழக ஆட்சியாளர்கள். அதனால், தொழில் வளர்ச்சியில் முன்னேறிய முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது.

குஜராத்தையும் மகாராஷ்டிராவை யும் எடுத்துக்கொண்டால், அங்கு ஒன்றிரண்டு தொழில்கள்தான் பிரதானமாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில், ஒன்றிரண்டு தொழில்கள் மட்டுமே ஆதிக்கம் செய்கிற நிலை இல்லை. ஆட்டோ மொபைல், ஜவுளி உட்படப் பலவும் முக்கியத் தொழில்களாக உள்ளன. பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகம். சிறு குறு தொழில்களில் மிக அதிகமாக நிறுவனங்கள் இருப்பதும் இங்குதான். அதிகமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய தொழில்களாக இங்குள்ள தொழில்கள் இருப்பதே சிறப்பம்சம்.

வளர்ச்சி... முந்திச் செல்லும் கடைசி மாநிலம்!

குஜராத், மகாராஷ்டிராவில் அதிக முதலீடு கொண்ட தொழில்கள் நடப்பதால் அவற்றில் வேலை வாய்ப்புகள் குறைவு. உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் நடைபெறும் ஒரு தொழிலில், தமிழ்நாட்டில் அதிகமானோர் வேலை செய்வார்கள். உலகமய மாக்கலை தமிழ்நாட்டில் சரியாகப் பயன்படுத்தி, ஓர் அடித்தளம் நன்கு உருவாக்கப்பட்டுவிட்டது. அதுதான் இந்த வளர்ச்சிக்குக் காரணம்” என்கிறார்.

தொழில், மருத்துவம், கல்வி ஆகியவற்றில் தமிழ்நாடு வளர்ந்துகொண்டிருக்கும் அதே வேளையில், விவசாயம் வீழ்ச்சியை நோக்கிச் செல்வது வேதனை தருவதாகும். 1983-84 காலகட்டத்தில், 59 சதவிகிதத் தொழிலாளர்கள் விவசாயத்தில் இருந்தனர். அது, 2011-12 காலகட்டத்தில் 35 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது. வளர்ச்சியில் வேளாண்துறை குறைவாகப் பங்களித்தாலும், வேலைவாய்ப்பு களை வழங்குவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட 35 சதவிகித வேலைவாய்ப்பை விவசாயம்தான் வழங்குகிறது.

இதில் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், விவசாயத்திலிருந்து ஏராளமானோர் வெளியேறிவிட்ட தால், விவசாயத் தொழிலாளர்கள் பலரும் கட்டுமானத் தொழிலாளர் களாக மாறிவிட்டனர். அதே வேளையில், இன்றைக்குத் தொழிலாளர்களின் நிலை மோசமாகி வருவதையும் ஏற்க வேண்டியிருக்கிறது. தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்துக்கொண்டிருந்த சட்டங்கள், தற்போது சீர்குலைக்கப் பட்டுள்ளன. நிரந்தரத் தொழிலாளர் கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்படும் நிலை இருக்கிறது. இதனால், வேலைக்கு உத்தரவாதம் இல்லாத பரிதாப நிலைக்குத் தொழி லாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில், ஒன்றிரண்டு தொழில்கள் மட்டுமே ஆதிக்கம் செய்கிற நிலை இல்லை. ஆட்டோ மொபைல், ஜவுளி உட்படப் பலவும் முக்கியத் தொழில்களாக உள்ளன.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்று பெருமை யுடன் நாம் பேசுகிற அதே வேளையில், இந்த வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பார்க்க வேண்டும். வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் தான், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன. மணல், கிரானைட் கொள்ளை உச்சத்தில் இருந்தது. காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அத்தனை ஆறுகளும் கட்டாந்தரையாகக் காட்சியளிக் கின்றன. நவீன இயந்திரங்களைக் கொண்டு மலைகள் தகர்க்கப் பட்டுவிட்டன. தமிழ்நாட்டின் பல மலைகள் மாயமாகிவிட்டன. நிலத்தடி நீர் கண்மூடித்தனமாகச் சுரண்டப்பட்டுள்ளது.

அதேசமயம், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு, இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம், தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் போக்கு போன்ற காரணங்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனவே, தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் போக்கு எதிர்காலத்திலும் தொடருமா என்பதை உறுதியுடன் இப்போது சொல்ல முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு