Published:Updated:

ஒன் பை டூ

பீட்டர் அல்போன்ஸ், நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
பீட்டர் அல்போன்ஸ், நாராயணன் திருப்பதி

‘தேன், ஸ்பூன், மை உள்ளிட்ட சாதாரணப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டிருப்பது சரியா?’

ஒன் பை டூ

‘தேன், ஸ்பூன், மை உள்ளிட்ட சாதாரணப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டிருப்பது சரியா?’

Published:Updated:
பீட்டர் அல்போன்ஸ், நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
பீட்டர் அல்போன்ஸ், நாராயணன் திருப்பதி

பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் மூத்த தலைவர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்

“இது ஆணவத்தோடு எடுக்கப்படுகிற நடவடிக்கை. இன்று நடைமுறையிலிருக்கும் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு அதிகாரங்களையெல்லாம் பறித்துக்கொண்டு, மாநில அரசுகளைப் பிச்சைக்காரக் கூட்டமாக மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தின் உற்பத்தியும் தேவையும் தனித்துவமானவை. அதை உள்வாங்கிய வரிவிதிப்புதான் மாநிலங்களின் வருவாயைப் பெருக்கவும், முறையாகச் செலவிடவுமான சூழ்நிலையை உருவாக்கும். இப்போது என்ன நடக்கிறது என்று சொன்னால், பல மாநிலங்களுடைய வரிவருவாயை அவர்களது அடிமடியில் கைவைத்துத் திருடுகிறது.

சாமானிய மக்களுடைய தேவைகளுக்கான பொருள்களுக்கு வரி விதிப்பது என்பது மிகப்பெரிய அரச பயங்கரவாதம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பலன் தரக்கூடிய வரிச்சலுகைகள் தொடர்ந்து வந்தவண்ணமாகவே இருக்கின்றன. லட்சக்கணக்கான கோடி வருமானம் பெறக்கூடிய இடங்களையெல்லாம் சலுகைகளாக பெருமுதலாளிகளுக்குக் கொடுத்துவிட்டு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கரண்டி, தேன், தீப்பெட்டி, பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் என்று அடித்தட்டு, நடுத்தட்டு மக்கள் பயன்படுத்துகிற பொருள்களின் மீது வரி விதித்துச் சுரண்டுவது மிகப்பெரிய அதர்மம். இது யதேச்சதிகாரமான, ‘என்னை என்ன செய்ய முடியும்?’ என்கிற ஆணவத்தோடு எடுக்கப்படும் நடவடிக்கை!”

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்
நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு பா.ஜ.க

“இதன் மூலம் விலை உயரும் என்பது தவறான புரிதல். கடந்த ஐந்து வருடங்களாக ஜி.எஸ்.டி சிறப்பாகச் செயல்பாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதிக இலக்கை எட்டிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்தே நமது பொருளாதாரம் உயர்ந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நம்முடைய பொருளாதாரச் சந்தை கள்ளச் சந்தையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி, கணக்குக்குள் வரக்கூடிய சூழலை எட்டிக்கொண்டிருக்கிறது. எனினும், தற்சமயம் வந்திருக்கும் வரிவிதிப்பு குறிப்பிட்ட ஸ்லாப், அதாவது சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாகவே வந்திருக்கிறது. இதன் மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும். அதேபோல, உள்ளீட்டு வரியையும் இதில் கணக்கிட வேண்டும். தொழில்நுட்ப அடிப்படையில் பார்த்தால், உள்ளீட்டு வரியைச் சார்ந்தே ஜி.எஸ்.டி வரி அமைந்திருக்கிறது. மூலப்பொருள்களின் வரியைவிட, உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் வரி குறைவாக இருந்தால், இரண்டுக்கும் இடைப்பட்ட உள்ளீட்டு வரியை நிறுவனங்கள் இழக்கின்றன. அந்த நஷ்டத்தை இந்த வரி உயர்வு சரிக்கட்டும். ஜி.எஸ்.டி-யின் சதவிகிதம் உயர்த்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பொருள்களின் விலை கண்டிப்பாக உயராது. இது முழுக்க முழுக்க மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து, ஜி.எஸ்.டி கமிட்டி எடுக்கும் முடிவுதானே ஒழிய, ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் எந்த நேரடித் தொடர்புமில்லை.’’