
“ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்!” - என்ற ஹெச்.ராஜாவின் கருத்து?
வன்னி அரசு, துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க.
“ஹெச்.ராஜாவெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு பற்றி கருத்து சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குச் சென்ற பெண்களைத் தாக்கியதுதான் நீதிமன்ற அவமதிப்பு. சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில், சில நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்குக் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றது நீதிமன்றம். கூடவே, `ஊர்வலத்தில் பயங்கர ஆயுதங்களை எடுத்துச்செல்லக் கூடாது’ என்றும் குறிப்பிட்டது. அப்படியென்றால் ஆர்.எஸ்.எஸ் எப்போதும் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் என்றுதானே பொருள்படும்...
இன்றைய சூழலில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்தினால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், மகாத்மா கொலை, எமர்ஜென்சி, பாபர் மசூதி இடிப்பு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் மூன்று முறை தடைசெய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பது வரலாறு. அந்த இயக்கத்தைச் சேர்ந்த கோபால் கோட்சே `காந்தியைக் கொன்றதுதான் நியாயம், அதுதான் சனாதன தர்மம்’ என்று சொன்னவர். அம்பேத்கர் பிறந்ததினத்தில் பாபர் மசூதியை இடித்து, அந்த நாளை பாபர் மசூதி இடிப்பு தினமாக மாற்றியவர்கள் அவர்கள். இன்று அக்டோபர் 2-ல் பேரணி நடத்தி மகாத்மாவின் பிறந்தநாளை மறக்கடிக்க முயல்கிறார்கள். வன்முறை மூலம் அரசியல் செய்யும் பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-தான் இந்தியாவிலிருந்து முதலில் அப்புறப்படுத்தவேண்டிய இயக்கம்!”
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.
“மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு அரசு செய்தது நீதிமன்ற அவமதிப்புதான் என்பதை உயர் நீதிமன்றமே தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நீதிமன்றத்தில் மாநில அரசும், `ஓர் அமைப்பினர் போராட்டம் நடத்துவார்கள் என்றும், காவலர்கள் குறைவாக இருக்கிறார்கள்’ என்றும்தான் சொல்லியிருக்கிறது. எனினும், அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனுமதி வழங்கவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம். சீனப் போரின்போது, இந்திய ராணுவத்துக்குத் துணை நின்று உதவியதற்காக, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நேரு பாராட்டினார் என்பது வரலாறு.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நூறு ஆண்டுகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. எந்த ஆதாயமும் இல்லாமல் தேசபக்தி, தெய்வபக்தி என்று இந்தியாவின் சமூகக் கட்டமைப்பை மேம்படுத்திவரும் இயக்கம்தான்
ஆர்.எஸ்.எஸ். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் ஆர்.எஸ்.எஸ்-ஸை ஒப்பிட்டுப் பேசுபவர்கள்தான் உண்மையான தேச விரோதிகள். ஆர்.எஸ்.எஸ்-ஸைத் தடைசெய்வதற்கும், அதன் செயல்பாடுகளுக்குத் தடுப்பணை போடுவதற்கும் இந்த உலகத்தில் இனிமேல் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். இந்தியாவின் கலாசாரத்துக்குப் பாதுகாவலனாக ஆர்.எஸ்.எஸ் இருப்பது இங்குள்ள சில மதவாத இயக்கங்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. அவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்!”