Published:Updated:

“மோடி அரசுக்கு ஆர்வமில்லை!” - “ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதவில்லை?”

மோடி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி, ஸ்டாலின்

- மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூடுமா?

“மோடி அரசுக்கு ஆர்வமில்லை!” - “ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதவில்லை?”

- மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூடுமா?

Published:Updated:
மோடி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி, ஸ்டாலின்

நிதிப் பகிர்வு உட்பட பல விவகாரங்களில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துவருகிற காலகட்டம் இது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி, கேரளா உள்ளிட்ட பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் பல விஷயங்களில் கருத்து முரண்கள் ஏற்பட்டுவருகின்றன. இப்படியான சூழலில், இரு தரப்பினரும் அமர்ந்து பேசுவதற்கும், ஆலோசனைகள் பெறுவதற்கும் 1990-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட Interstate Council என்றழைக்கப்படும் ‘மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்’ அமைப்பைச் செயல்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது!

தமிழ்நாட்டில் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவிகிதம். ஆனால், தமிழ்நாட்டுக்கு 1.21 சதவிகிதம் மட்டுமே பகிர்ந்தளிக்கப்படுகிறது. வரியைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி” என்று குறிப்பிட்டார். கச்சத்தீவு, தமிழ் அலுவல் மொழி, நீட் விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அப்போது ஸ்டாலின் பேசினார். பிரதமரை வைத்துக்கொண்டு அவ்வாறு முதல்வர் பேசியதை தி.மு.க-வினரும், அதன் ஆதரவாளர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். பா.ஜ.க-வினரோ, ஸ்டாலின் பேச்சைக் கடுமையாக விமர்சித்தார்கள்.

“மோடி அரசுக்கு ஆர்வமில்லை!” - “ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதவில்லை?”

‘பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் இப்படிப் பேசலாமா… பேசக் கூடாதா?’ என்று பட்டிமன்றமே நடந்தது. அதேவேளையில், ‘மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்கான இடம் இருந்தால், இது போன்ற சர்ச்சைகளுக்கே இடமிருக்காதே…’ என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் Interstate Council பற்றிய பேச்சு அரசியல் நோக்கர்கள் மத்தியில் பரவலாக எழுந்திருக்கிறது.

30 ஆண்டுகளில் 11 முறை மட்டுமே..!

மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான பிரச்னைகள், இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் ஆகியவை குறித்து விவாதிக்கவும் விசாரிக்கவும், உரிய ஆலோசனைகளை வழங்கவும் ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், ‘மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்’ (Inter State Council) 1990-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பிரதமர் தலைமையிலான அந்தக் குழுவில், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் இடம்பெறுவார்கள். இந்தக் குழு, ஓர் ஆண்டுக்குக் குறைந்தது மூன்று முறை கூட்டப்பட வேண்டும் என்று விதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த 32 ஆண்டுகளில் 11 முறை மட்டுமே இந்த கவுன்சில் கூட்டப்பட்டிருக்கிறது. இந்த கவுன்சிலை முறையாகப் பயன்படுத்தினால், இன்றைக்கு மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே எழுந்திருக்கும் பல பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் வில்சனிடம் பேசினோம். “மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் 1969-ம் ஆண்டு தி.மு.க அரசு ஒரு குழுவை அமைத்தது. அது, தனது பரிந்துரைகளை 1971-ம் ஆண்டு அளித்தது. அதில், மாநிலங்களுக்கு இடையே ஒரு குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிற பரிந்துரை மிகவும் முக்கியமானது. அதன் வெளிப்பாடாக, நீதிபதி சர்க்காரியா குழுவும் மாநிலங்களுக்கு இடையிலான குழுவை ஏற்படுத்த வேண்டும் என்கிற பரிந்துரையை 1988-ல் வழங்கியது. அதன் அடிப்படையில், 1990-ம் ஆண்டு பிரதமர் தலைமையில் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.

இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை எழுந்தால், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றம் செல்லலாம். அதற்கு முன்பு, அந்தப் பிரச்னையை மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலுக்குக் கொண்டு சென்று உரிய ஆலோசனைகளைப் பெறலாம். கடந்த காலங்களில் நடைபெற்ற கவுன்சில் கூட்டங்களில், நதிநீர்ப் பங்கீடு, வனம், சுரங்கங்கள், வரிகள், சிறப்பு நீதிமன்றங்கள், ஆளுநருக்கான அதிகாரங்கள் எனப் பல அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டிருக்கின்றன. ஆனாலும், 1990-ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 11 முறைதான் கவுன்சில் கூடியிருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் ஒரு முறை மட்டுமே கவுன்சில் கூட்டப்பட்டிருக்கிறது. கூட்டாட்சியை வளர்ப்பதில் மோடி அரசுக்கு ஆர்வம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தினால், கூட்டாட்சியை வலுப்படுத்த முடியும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னைகளை எளிதாகத் தீர்ப்பதற்கு வழி கிடைக்கும் என்பதை மத்திய அரசு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

இது குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமியிடம் பேசினோம். “பிரதமர் தலைமையிலான இந்த கவுன்சில் கடந்த மே மாதம் மறுசீரமைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. `எதிர்காலத்தில் இந்த கவுன்சில் தொடர்ச்சியாகக் கூட்டப்படும்’ என்றும், `தேவைப்படும் நேரத்தில் நிபுணர்களின் கருத்துகள் கேட்கப்படும்’ என்றும் தற்போது சொல்லியிருக்கிறார்கள். கூட்டாட்சியை நிலைநாட்டுவதில் பா.ஜ.க அரசு ஆர்வத்துடன் இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். ஆனால், மாநில உரிமைகளைப் பற்றி தொடர்ச்சியாகப் பேசுகிற முதல்வர் ஸ்டாலின், இந்த கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று மத்திய அரசுக்கு ஏன் ஒரு கடிதம்கூட எழுதவில்லை?” என்று கேட்கிறார் வி.பி.துரைசாமி.

பஞ்சாயத்துகளுக்குத்தான் கவுன்சிலையே கூட்டுங்கள் என்கிறோம். அந்த கவுன்சிலைக் கூட்டுவதிலேயே பஞ்சாயத்தா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism