சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

ஒன் பை டூ

தாயகம் கவி, கோகுல இந்திரா
News
தாயகம் கவி, கோகுல இந்திரா

“தி.மு.க-வின் இயலாமை, திறமையின்மையால் மழைநீர் தேங்குகிறது” என்ற ஜெயக்குமாரின் விமர்சனம்?

தாயகம் கவி, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

“தவறான கருத்து. இது அவரின் அறியாமையைத்தான் காட்டுகிறது. வீட்டில் உட்கார்ந்துகொண்டு கருத்து சொல்லாமல், களத்துக்கு வந்து பார்த்துவிட்டுப் பேச வேண்டும். ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோது, தன் தொகுதிக்கோ, மக்களுக்கோ அவர் எதுவுமே செய்யவில்லை. அதனால்தான் மக்கள் அவரைப் படுதோல்வி அடையச் செய்தனர். கடந்த மழையில் பெருமளவு தண்ணீர் தேங்கிய எந்த இடத்திலும் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. உதாரணமாக, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு பருவமழையில், இடுப்பளவுக்குத் தண்ணீர் தேங்கி நின்றது. பல இடங்களுக்குப் படகில் சென்றுதான் அந்தப் பகுதி மக்களைச் சந்திக்கவேண்டிய நிலை இருந்தது. ஆனால், அதே பகுதியில் 35 செ.மீ மழை பெய்திருந்தபோதும் சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க செய்யத் தவறியதை நாங்கள் ஒரு வருடத்தில் சாதித்திருக்கிறோம். `எப்படியும் எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கும்... தி.மு.க-வைக் கடுமையாக விமர்சிக்கலாம்’ என்று பகல் கனவு கண்ட ஜெயக்குமார் இப்போது, என்ன செய்வதென்று தெரியாமல் இப்படிப் பொய்யைப் பரப்பிவருகிறார்!”

தாயகம் கவி
தாயகம் கவி
கோகுல இந்திரா
கோகுல இந்திரா

கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

“உண்மையைச் சொல்லியிருக்கிறார். இரண்டு நாள் பெய்த சின்ன மழைக்கே நகரின் பல பகுதிகளில் தண்ணீர், குளம்போலத் தேங்குவதைப் பார்க்க முடிகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்திருக்கிறது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், மழை வெள்ள பாதிப்புப் பகுதிகளில் அ.தி.மு.க நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை மக்களுக்கு உதவி செய்தார்கள். ஆனால், இப்போது அந்த வார்டு தி.மு.க கவுன்சிலர்கூட மக்களைச் சந்திப்பது கிடையாது. அவர்களுக்கு கமிஷன் வாங்கவும், மாமூல் வாங்கவுமே நேரம் போதவில்லை. இதில் எங்கே சென்று மக்கள் பிரச்னைகளை கவனிக்கப்போகிறார்கள்... சென்னை முழுக்க மழைநீர் வடிகால் கட்டும் திட்டம் கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது. அதற்காக அரசாணை பிறப்பித்து, நிதி ஒதுக்கி, ஒவ்வொரு கட்டமாகப் பணிகள் நடைபெற்றுவந்தன. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததுமே எந்தத் திட்டமிடலும் இல்லாமல் நகரம் முழுவதும் குழியைத் தோண்டிப்போட்டு மக்களைப் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். இதை மக்களே நன்கு உணர்ந்திருக்கிறார்கள்!”