அரசியல்
அலசல்
Published:Updated:

ஒன் பை டூ

வினோஜ் பி. செல்வம், பாபு முருகவேல்
News
வினோஜ் பி. செல்வம், பாபு முருகவேல்

“அ.தி.மு.க-வை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பா.ஜ.க முயற்சி செய்துவருகிறது” என்ற கே.என்.நேருவின் விமர்சனம்!

வினோஜ் பி. செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க

``அர்த்தமில்லாமல் பேசியிருக்கிறார். அ.தி.மு.க-வில் நடப்பது அவர்களின் உட்கட்சிப் பிரச்னை. அ.தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி. பல ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. அந்தக் கட்சியை பா.ஜ.க செயல்படாமல் தடுக்கிறது என்ற கவலை தி.மு.க-வுக்கு வரவேண்டிய அவசியம் என்ன... ஆளும் தி.மு.க., வாக்களித்த மக்கள் பிரச்னைகளைக் கையாளத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவே, ‘தமிழக அதிகாரிகள் மாநில அரசு சொல்வதைக் கேட்பதில்லை’ என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தி.மு.க-வின் ஆட்சி நிர்வாகம் மோசமாக இருக்கிறது. தங்கள் கையாலாகாத்தனத்தை திசைதிருப்ப வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க., பா.ஜ.க என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க பற்றியோ, அ.தி.மு.க குறித்தோ கவலைப்படுவதைவிட்டுவிட்டு, தங்களுக்கு வாக்களித்து ஏமாந்த தமிழக மக்களைப் பற்றி தி.மு.க சிந்திக்க வேண்டும். முதலில், பா.ஜ.க-வுக்கு எந்த ஊரிலும், எந்தக் கட்சியையும் அழித்துப் பழக்கமே கிடையாது. நாங்கள் எப்போதுமே கூட்டணி தர்மத்தை மதிக்கக்கூடியவர்கள். இந்த ஜனநாயகத்தைப் பின்பற்றக் கூடிய கட்சிகளைப் பற்றி, ஒரு குடும்பத்துக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துள்ள தி.மு.க-வினர் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.’’

வினோஜ் பி. செல்வம்
வினோஜ் பி. செல்வம்
பாபு முருகவேல்
பாபு முருகவேல்

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

``ஆடு நனைகிறது என்று ஓநாய் வருத்தப்படத் தேவையில்லை. அமைச்சர் நேரு, தனது பெரிய அண்ணன் மனப்பான்மையை அவர்கள் கட்சியில் மட்டும் வைத்துக்கொள்ளட்டும். அ.தி.மு.க-வில் நாட்டாமை செய்ய அவருக்கு உரிமையில்லை. அ.தி.மு.க-வில் நடப்பது உட்கட்சிப் பிரச்னை. இந்தக் குழப்பங்களுக்கு யார் காரணம் என்பதும், கட்சியைத் துண்டாட நினைப்பது ஓ.பி.எஸ்-தான் என்பதும் அனைவருக்கும் தெரியும். கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. பெரும்பான்மையான வழக்குகள் முடிவடைந்திருக்கும் நிலையில், அனைத்து வழக்குகளிலும் எடப்பாடி வெற்றிபெறுவார். இதில், பா.ஜ.க-வுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. இப்படி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி அ.தி.மு.க-வை பலவீனப்படுத்த வேண்டும் என்று தி.மு.க திட்டமிடுகிறது. உண்மையில் தற்போதைய நிலையில், தி.மு.க-தான் அதிக பலவீனமான கட்சியாக இருக்கிறது. பொதுமக்களிடமும் சரி, சொந்தத் தொண்டர்களிடமும் சரி... தி.மு.க பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க-வின் குறைகளை மறைக்கவும், பிரச்னைகளை மடை திருப்பவும் இப்படி அ.தி.மு.க குறித்துப் பேசிவருகிறார்கள். முதலில் அவர்கள் கட்சியில் இருக்கும் பிரச்னைகளை தி.மு.க சரிசெய்யட்டும்.

அ.தி.மு.க-வில் ஏற்படும் பிரச்னைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.’’