சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

ஒன் பை டூ

கரு.நாகராஜன், தமிழ் கா.அமுதரசன்
News
கரு.நாகராஜன், தமிழ் கா.அமுதரசன்

“பிரிட்டிஷ் அரசின் மிச்சம், எச்சம்தான் ஆளுநர் பதவி. அதைத் தூக்கிப் போடவேண்டிய காலம் வந்துவிட்டது” என்ற கனிமொழி கருணாநிதியின் விமர்சனம்?

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``மக்கள் பிரதிநிதியான கனிமொழி இப்படிப் பேசுவது இந்திய அரசியலமைப்பைக் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது. இதே தி.மு.க-வினர் மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும்போது, இங்கிருக்கும் ஆளுநர்களைப் போற்றி, புகழ்வார்கள். கடந்த ஆட்சியில் அ.தி.மு.க-வினர்மீது புகார் சொல்ல அடிக்கடி ஆளுநர் அலுவலகம் சென்றார்களே... அப்போது மட்டும் ஆளுநர் தேவைப்பட்டாரா... இவர்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்துகொண்டால் கவர்னர் நல்லவர், இல்லையென்றால் வேண்டாதவரா... தற்போதைய தமிழக கவர்னர் ஆற்றல் மிகுந்த வித்தகராக இருக்கிறார். தமிழ்நாட்டின் பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் போற்றுகிறார். அரசின் கைப்பாவையாக இல்லாத கவர்னர் என்பதால் அவர்மீது ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புகிறார்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆளுநரை இப்படிச் சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. உண்மையில் தி.மு.க அரசைத் தூக்கிப்போடவே மக்கள் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை மறைக்க ‘திராவிட மாடல்’ என்று தமிழக மக்களை மொட்டையடித்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

கரு.நாகராஜன், தமிழ் கா.அமுதரசன்
கரு.நாகராஜன், தமிழ் கா.அமுதரசன்

தமிழ் கா.அமுதரசன், மாணவரணி துணைச் செயலாளர், தி.மு.க

``உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் கனிமொழி அக்கா. ஒன்றிய அரசின் அதிகாரமற்ற ஏஜென்ட்தான் ஆளுநர்; அரசியல் பேசவோ, தனது சித்தாந்தக் கருத்துகளைப் பரப்பவோ அதிகாரம்கொண்டவரல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் முடிவுகளின்படியே ஆளுநர் நடக்க வேண்டும் என்றும், அரசியல் கருத்துகளைச் சொல்லவோ, அரசியல் கட்சிகளின் விவகாரங்களில் தலையிடவோ அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அரசியலமைப்பும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதிசெய்கின்றன. ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு ஆளுநர்கள் மூலம் மாநிலங்களில் ஓர் இணை அரசு நடத்தத் துடிக்கிறது. அதனாலேயே, ஆளுநர் ரவி, தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில், குறிப்பாக தி.மு.க-வுக்கு எந்த ஓர் ஆளுநரும் பாடம் நடத்திச் சென்றதாக வரலாறு இல்லை. இங்கிருந்து பாடம் படித்துச் சென்ற சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. காலனியாதிக்கத்தின் எச்சத்தையெல்லாம் அகற்றுவோம் என்றும், ‘ராஜ் பவனை லோக் பவனாக்குவோம்’ என்றெல்லாம் முழங்குகிறவர்கள், மானம், ரோஷம் இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதைப் பேசட்டும்!’’