Published:Updated:

சசிகலாவின் சட்டப் போராட்டம் சாத்தியமா?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

வெற்றிவேல் மறைந்ததால், அவர் தொடர்ந்த வழக்கு நீர்த்துப்போகாது. சிவில் வழக்குகளில் ஒருவர் மறைந்தால், அவரின் நாமினிகள் வழக்கை நடத்தலாம்.

“அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் சட்டரீதியாக அ.தி.மு.க-வை மீட்டெடுப்போம்.” - சசிகலா விடுதலைக்குப் பிறகு இப்படி அ.தி.மு.க-வுக்கு எதிராக சட்ட அஸ்திரத்தை ஏவியிருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். சட்டரீதியான வாய்ப்புகள் இருக்கின்றனவா?

கடந்த 2016, டிசம்பரில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. ஆனால், 2017-ல் நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதால், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி கேள்விக்குறியானது. இதையடுத்து, ‘சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அன்றைய அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல். சசிகலா தரப்பிலிருந்தும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமியும் இது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூன்று தரப்புக்கும் நெருக்கமானவர்கள், “கடந்த 2017, செப்டம்பர் 12-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு முன்பாகவே, அந்தக் கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென்றும், சசிகலாவின் பதவியைப் பறிக்க முடியாது என்றும் வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில், ‘பொதுக்குழு முடிவுகள், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும்’ என்று உத்தரவை வழங்கியது நீதிமன்றம். அதேபோல், சசிகலா தரப்பில் ‘பொதுக்குழுக் கூட்டம், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் புதிய நியமனங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கும், ‘அ.தி.மு.க தலைமைக் கழகத்திலுள்ள ஆவணங்கள், பொருள்கள், சொத்துகள் உள்ளிட்டவை கட்சியின் மேலாளர் பொறுப்பில் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவை வழங்கியது நீதிமன்றம்.

இந்த இரண்டு வழக்குகள் நிலுவையிலிருக்கும் நிலையில், சசிகலாவின் பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘அ.தி.மு.க-வின் சட்டவிதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளரை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும். சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி மட்டுமன்றி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் செல்லாது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மூன்று வழக்குகளுமே இப்போது சசிகலாவுக்கு ஆயுதமாகப் பயன்படும்” என்றார்கள்.

சசிகலாவின் சட்டப் போராட்டம் சாத்தியமா?

இது குறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டோம். “வெற்றிவேல் மறைந்ததால், அவர் தொடர்ந்த வழக்கு நீர்த்துப்போகாது. சிவில் வழக்குகளில் ஒருவர் மறைந்தால், அவரின் நாமினிகள் வழக்கை நடத்தலாம். அதன்படி வெற்றிவேல் வழக்கை அவரின் மகன் பரத் வெற்றிவேல் நடத்துவார். ‘கட்சியும் சின்னமும் மதுசூதனன் தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எடப்பாடி தரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், அந்த வழக்கில் சசிகலா தரப்பு இடம்பெறவில்லை. தினகரன் மட்டுமே அ.ம.மு.க கட்சிக்காக அந்த வழக்கை நடத்தியுள்ளார். ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குள் இடைக்கால உத்தரவுடன் நிற்கின்றன. இதை சசிகலா விடுதலைக்கு முன்பே வேகப்படுத்தத் திட்டமிட்டிருந்தோம். கொரோனா காரணமாக அது சாத்தியமாகவில்லை. இனி, சசிகலாவின் சட்டப் போராட்டம் தீவிரமடையும்” என்றார்.

கே.சி.பழனிசாமியிடம் கேட்டபோது “வெற்றிவேல், சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த வழக்கைவிட நான் தொடர்ந்த வழக்குதான் எடப்பாடிக்குச் சிக்கலை ஏற்படுத்தும். கட்சியின் அடிப்படை விதியையே மாற்றியிருக்கிறார்கள் என்பதே எனது வழக்கின் சாரம். எனது வழக்குடன் சசிகலா தரப்பும் சேர்ந்தால் அது எடப்பாடிக்குப் பெரும் சிக்கலாக உருவெடுக்கும்” என்றார்.

கே.சி.பழனிசாமி - ராஜா செந்தூர்பாண்டியன் - சி.வி.சண்முகம்
கே.சி.பழனிசாமி - ராஜா செந்தூர்பாண்டியன் - சி.வி.சண்முகம்

இந்த விவகாரம் குறித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “இப்போது, `நீதிமன்றத்துக்குச் செல்வேன், அ.தி.மு.க எங்களுடையது தான்’ என்று கூறிவரும் இதே தினகரன் தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். வழக்கிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். அதன் பிறகே ‘உண்மையான அ.தி.மு.க குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும்’ என்று இறுதித் தீர்ப்பு வெளியானது. அதை எதிர்த்து அன்றைய தினம் சிறையிலிருந்த சசிகலா சார்பாக தினகரனே உச்ச நீதிமன்றத்தில் மீண்டுமொரு மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அப்படி இருக்கும்போது இன்று சட்டவிரோதமாக அ.தி.மு.க-வின் கொடியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. ‘நாங்கள்தான்

அ.தி.மு.க’ என்று அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதுதான் இறுதித் தீர்ப்பு. வேறு எங்கும் வழக்கு இல்லை” என்கிறார் உறுதியுடன்!

சசிகலா களத்தில் இறங்கிய பிறகே இதற்கான விடை கிடைக்கும்!