Published:Updated:

தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே! - கடிவாளம் போடும் காங்கிரஸ்...

உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
உத்தவ் தாக்கரே

‘‘ஒளரங்காபாத் நகரத்தின் பெயரை மாற்றுவது கூட்டணி அரசு சேர்ந்து எடுத்த முடிவல்ல.

தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே! - கடிவாளம் போடும் காங்கிரஸ்...

‘‘ஒளரங்காபாத் நகரத்தின் பெயரை மாற்றுவது கூட்டணி அரசு சேர்ந்து எடுத்த முடிவல்ல.

Published:Updated:
உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் எப்போதுமே ‘பெரியண்ணணாக’ இருந்துவிட்டு, இப்போது அடுத்தவர்களின் கட்டுப்பாட்டில் சிவசேனாவால் இருக்க முடியவில்லை. அதனால்தான், ஊர்களின் பெயர் மாற்ற விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டு, தற்போது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் முரண்டுபிடிப்பதால் அதை அமல்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது சிவசேனா.

கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த சிவசேனா, குறைவான இடங்களைப் பெற்றாலும் (பா.ஜ.க - 105, சிவசேனா - 56) தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது. இதனால், இந்தக் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்ற நிலையிலும், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, இடையில் புகுந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் தயவால், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றார்.

தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே! - கடிவாளம் போடும் காங்கிரஸ்...

தேர்தலுக்குப் பிறகு உருவான இந்த ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் சேர ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி சம்மதிக்கவில்லை. கூட்டணியில் சேரவில்லையெனில் கட்சி உடைந்துவிடும் என்ற நெருக்கடியில், வேறு வழியில்லாமல் சரத் பவார் ஆலோசனையின்படி கூட்டணியில் இணைந்தது காங்கிரஸ். தற்போது உத்தவ் தாக்கரேவின் ஆட்சி ஓராண்டைக் கடந்துவிட்ட நிலையில், தன் தந்தையின் கனவை நிறைவேற்றும் முனைப்பில் இறங்கியிருக்கிறார் உத்தவ். அதன் ஒரு பகுதிதான் ஒளரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகர்களின் பெயர்களை மாற்றும் முயற்சி.

ஒருகாலத்தில் கட்கி என்றழைக்கப்பட்ட நகரத்தை மொகலாய மன்னர் ஒளரங்கசீப் கைப்பற்றி, 1653-ம் ஆண்டில் அதன் பெயரை ஒளரங்காபாத் என்று மாற்றினார். அத்துடன், 1689-ம் ஆண்டு சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியை சித்ரவதை செய்து கொன்று புதைத்ததும் அங்கேதான் என்பது வரலாறு. எனவேதான், 1988-ம் ஆண்டு ஒளரங்காபாத் மாநகராட்சியில் சிவசேனா வெற்றிபெற்றபோது, `அந்த நகரத்தின் பெயர் சாம்பாஜி நகர் என்று மாற்றப்படும்’ என்று மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்திருந்தார். 1995-ம் ஆண்டில் ஒளரங்காபாத் மாநகராட்சியும் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. முந்தைய ஐந்தாண்டுக்கால பா.ஜ.க - சிவசேனா கூட்டணி ஆட்சியிலும் இந்த நகரத்தின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில், இப்போது பிரச்னையைக் கையிலெடுத்துள்ளார் உத்தவ் தாக்கரே.

பாலா சாஹேப் தோரட்
பாலா சாஹேப் தோரட்

கடந்த ஜனவரி 6-ம் தேதி முதன்முதலாக ட்விட்டரில், ஒளரங்காபாத் நகரத்தின் பெயரை `சாம்பாஜி நகர்’ என்று குறிப்பிட்டு, பிரச்னையைத் தொடங்கிவைத்தது முதல்வர் அலுவலகம். தொடர்ந்து, உஸ்மனாபாத் நகரத்தின் பெயரையும் `தாராசிவ்’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார் உத்தவ் தாக்கரே. உடனடியாக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பாலா சாஹேப் தோரட், ‘‘ஒளரங்காபாத் நகரத்தின் பெயரை மாற்றுவது கூட்டணி அரசு சேர்ந்து எடுத்த முடிவல்ல. முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் கையாளும் தகவல் மற்றும் விளம்பரத்துறை தாங்களாக நகரத்தின் பெயரை மாற்றக் கூடாது. சமுதாயத்தில் நல்லிணக்கத்தைப் பராமரிக்க, நகரத்தின் பெயர்களை மாற்ற காங்கிரஸ் சம்மதிக்காது” என்றார். உஸ்மனாபாத் விவகாரத்திலும் அந்தக் கட்சி, ‘‘ஏழாவது நிஜாம் மன்னர் உஸ்மான் 14,000 ஏக்கர் நிலத்தை, நிலம் இல்லாத ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுக்க, வினோபா பாவே என்ற சமூக அமைப்புக்குக் கொடுத்திருக்கிறார். அத்துடன், 1965-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது ஐந்து டன் தங்கத்தை தேசிய பாதுகாப்புத்துறைக்குக் கொடுத்தார் உஸ்மான். எனவே, பெயரை மாற்றும் முன்பாக வரலாற்றை நன்றாகப் படிக்க வேண்டும்’’ என்று காட்டமாகக் கருத்து வெளியிட்டது.

சரத் பவார்
சரத் பவார்

இதற்கெல்லாம் பதிலடி கொடுத்த சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ‘‘அரசு ஆவணங்களில் சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் என்று குறிப்பிட்டது குற்றமா? இது மக்களின் உணர்வு. ஒளரங்காபாத்துக்கு, `சாம்பாஜி நகர்’ என்று மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே பெயர் வைத்துள்ளார். நகரங்களின் பெயர்களை மாற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார். உத்தவ் தாக்கரேவும், ‘‘மொகலாய மன்னர் ஒளரங்கசீப் மதச்சார்பற்றவர் கிடையாது. எனவே, மதச்சார்பற்றக் கொள்கை இதில் பொருந்தாது’’ என்றார்.

எல்லாவற்றிலும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆலோசனை சொல்லும் தேசியவாத காங்கிரஸ் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது. இது பற்றி சரத் பவாரிடம் கேட்டால், ‘‘இதையெல்லாம் நான் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அதனால்தான், இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

உத்தவ் தாக்கரேவின் பெயர் மாற்றப் பட்டியல் இன்னும் நீளுகிறது. அகமத் நகர், மாலேகாவ் உட்பட முஸ்லிம் பெயர்களில் இருக்கும் நிறைய நகரங்களைப் பெயர்களை மாற்றி, தன் தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கிறார் உத்தவ். தவிர, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் நடைபெறவிருக்கும் மாநகராட்சிகளுக்கான தேர்தலில் இந்துக்களின் ஓட்டுகளை அறுவடை செய்வதற்கு இது கைகொடுக்கும் என்று அவர் நம்புகிறார். ஆனால், வரலாற்றை மறு நிர்மாணம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது!