அலசல்
அரசியல்
Published:Updated:

ஒன் பை டூ

இராஜீவ் காந்தி, கோவை சத்யன்
பிரீமியம் ஸ்டோரி
News
இராஜீவ் காந்தி, கோவை சத்யன்

“முதல்வர் ஸ்டாலின் பாதி அண்ணாவாகவும், பாதி கருணாநிதியாகவும் மாறிவிட்டார்” என்ற அமைச்சர் துரைமுருகனின் கருத்து?

இராஜீவ் காந்தி, மாணவரணி மாநிலத் தலைவர், தி.மு.க

``அண்ணன் துரைமுருகன் சொல்வதில் ஆழ்ந்த உண்மை இருக்கிறது. ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைப்பதில் தொடங்கி, மாநில சுயாட்சி, மாநில உரிமை குறித்து தொடர்ந்து குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா. அதேபோலவே, `தமிழ்நாடு’ என்ற பெயர் குறித்து ஆளுநர் சர்ச்சைக் கருத்து சொன்னபோது ‘இது தமிழ்நாடுதான்’ என்று உரக்கச் சொன்னவர் முதல்வர் ஸ்டாலின். ஒன்றிய அரசின் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, மாநிலங்களுக்குச் சுயாட்சி இருக்க வேண்டும் எனச் செயலாற்றுகிறார். ‘ஆளுநர் பதவி தேவையா?’ என்றார் அண்ணா. ‘ஆளுநரின் அதிகாரம் குறித்த அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் திருத்தப்பட வேண்டும்’ என்கிறார் ஸ்டாலின். முத்தமிழறிஞர் கலைஞரைப் போலத் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எந்த ஒரு பிரச்னை வந்தாலும் முன்னின்று போராடுகிறார். பெண்கள், மாணவிகள், திருநங்கைகள், விளிம்புநிலை மக்களின் நலனின் அக்கறைகொண்டு பல புதிய சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துகிறார். புதிய முதலீடுகளைக் கொண்டுவருவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்று சமூக வளர்ச்சி மேம்பாட்டுக்காகவும் கலைஞர்போலவே செயலாற்றுகிறார். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஒன்றைத்தன்மையை நோக்கி அரசியல் சூழல் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் சமூகநீதிக் காவலனாகவும் செயல்படுகிறார் தளபதி ஸ்டாலின்.’’

இராஜீவ் காந்தி, கோவை சத்யன்
இராஜீவ் காந்தி, கோவை சத்யன்

கோவை சத்யன், கழகச் செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

``முதலில் அண்ணாவுக்கும் இன்றைய தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்... தி.மு.க எம்.பி-க்கள் பதவிப் பிரமாணம் எடுத்தபோது ‘பெரியார் மண்’ என்றுதானே சொன்னார்கள்... அண்ணாவை எங்கே பேசினார்கள்... ‘ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லாத ஒன்று’ என அன்று அண்ணா சொன்னது இன்றும் பொருந்தும். ஆனால் தி.மு.க., அண்ணாவை மட்டுமல்ல, ஆளுநரையும்கூட தேவைக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள்தான். தி.மு.க ஆட்சி அமைந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காக ஏதாவது ஓர் உருப்படியான திட்டம் கொண்டுவந்திருக்கிறதா...புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டனவா.... எதுவுமில்லை. கைதிகளின் பல்லைப் பிடுங்கி அராஜகம் செய்த போலீஸ் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க, காவல்துறையை கையில்வைத்திருக்கும் முதல்வருக்குத் திராணி இருக்கிறதா... வேங்கைவயல் விவகாரம் நடந்து எத்தனை நாள்களாகிவிட்டன... ஏதாவது நடவடிக்கை உண்டா... இந்த லட்சணத்தில் சமூகநீதி பற்றிப் பேச தி.மு.க-வினருக்கு என்ன அருகதை இருக்கிறது... வெறும் விளம்பரத்தில் மட்டும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க திராவிட மாடல், பாதி அண்ணா மீதி கலைஞர் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் மூன்றாண்டுகள் இந்தக் கொடுமைகளையெல்லாம் மக்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.’’