அரசியல்
அலசல்
Published:Updated:

ஒன் பை டூ

தமிழன் பிரசன்னா, கரு.நாகராஜன்
News
தமிழன் பிரசன்னா, கரு.நாகராஜன்

“இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம், உலக நாடுகளுக்கான சிறந்த மாடலாக விளங்குகிறது!” என்ற மோடியின் கருத்து?

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பாளர், தி.மு.க

“வெற்றுப் பேச்சு. கூட்டாட்சித் தத்துவத்துக்கான அடிப் படை அர்த்தம்கூட தெரியாதவர்கள் பா.ஜ.க-வினர். இந்தியா பன்முகக் கலாசாரம், பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட நாடு. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம் முதல் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் வரை, இந்தியா ஒரே நாடாக இருக்க முடியாது என்ற கருத்தையே அனைவரும் முன்வைத் தார்கள். வட்டமேசை மாநாட்டிலும் இந்தியா ஒரே நாடாக இருக்காது என்றும், இங்குள்ள ஒவ்வொரு பகுதி மக்களின் தனித்தன்மை பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டன. ஆனால், இன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்று இந்தியாவின் ஒட்டுமொத்த இறை யாண்மையையும் சிதைக்கப் பார்க்கிறார்கள். இங்குள்ள ஒவ்வோர் இனக்குழுவுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. இப்படிப் பலதரப்பட்ட மக்களிடம் அவர்களின் ஒருமைச் சித்தாந்தத்தைத் திணித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு முறை தமிழகம் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைத்தது. அவர்கள் நிராகரித்தது, 230 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை மட்டுமல்ல, 8.5 கோடி மக்களின் கோரிக்கையை. ஒரு மாநிலம் ‘வேண்டாம்’ என்று தீர்மானம் நிறைவேற்றும்போது, அதைப் புறக்கணிப்பதுதான் கூட்டாட்சியா... மாநிலத்தில் சுயாட்சியைப் பறித்துவிட்டு, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேச பா.ஜ.க-வினருக்கு என்ன அருகதை இருக்கிறது?!”

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா
கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், பொதுச்செயலாளர், தமிழக பா.ஜ.க

“உண்மையைப் பேசியிருக்கிறார். கொல்கத்தாவில் காளி கோயில் இருக்கிறது, தமிழ்நாட்டிலும் காளி கோயில் இருக்கிறது. காசியிலும் ராமர் கோயில் இருக்கிறது, ராமேஸ்வரத்திலும் ராமர் கோயில் இருக்கிறது. அங்கே கோதுமை விளைகிறது. இங்கு அரிசி விளைகிறது அவ்வளவுதான் வேறுபாடு. வேற்றுமை நிறைந்த நாடாக இருந்தாலும், ஒற்றுமையாக நாம் போராடியதால்தான் வெள்ளையனை வென்றெடுத்தோம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா பொருளாதாரம், ராணுவக் கட்டமைப்பு, ஏற்றுமதி என்று எல்லாவிதத்திலும் உலக அரங்கில் வளர்ந்து நிற்கிறது. நடைபெறும் பா.ஜ.க ஆட்சியில், இந்தியாவின் இறையாண்மை பேணிக் காக்கப்படுக்கிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று சொல்லும் தி.மு.க-வினர்தான், அவசரநிலையில் ஆட்சியைக் கலைத்த அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.க-வினர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள். தி.மு.க- வினருக்குக் கூட்டாட்சித் தத்துவம் குறித்துப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது... இந்தியா முழுவதும் மக்கள் ஏகமனதுடன் பா.ஜ.க-வின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரின் கூற்றில் இருப்பதெல்லாம் முழு உண்மை மட்டுமே.”