Published:Updated:

ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்! - எம்.பி-க்கள் நிதி உயர்த்தப்பட வேண்டுமா, வேண்டாமா?

பாராளுமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாராளுமன்றம்

வருடத்துக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு முழுமையாக ஒரு கோடியைக்கூடச் செலவழிக்க முடியவில்லை.

இரண்டு கோடி ரூபாயாக இருந்த எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை, 2011-ல் 5 கோடி ரூபாயாக உயர்த்தியது மத்திய அரசு. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக, கடந்த இரண்டு வருடங்களாக மேற்கண்ட நிதி நிறுத்திவைக்கப்பட்டு, 2019-20-ம் ஆண்டுக்கான நிலுவை நிதியே தற்போதுதான் விடுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஆண்டுக்கு 5 கோடி ரூபாயாக இருக்கும் இந்த நிதியை, 20 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. இதற்கு முன்பும் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் உள்ளிட்ட மற்ற எம்.பி-க்களும் இதே கோரிக்கையை எழுப்பியிருக்கின்றனர். உண்மையிலேயே இந்த நிதி உயர்த்தப்பட வேண்டுமா, வேண்டாமா... அதற்கான நியாயமான காரணங்கள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் எம்.பி-க்களிடமும், பொருளாதார நிபுணர்களிடமும் பேசினோம்.

ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்! - எம்.பி-க்கள் நிதி உயர்த்தப்பட வேண்டுமா, வேண்டாமா?
ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்! - எம்.பி-க்கள் நிதி உயர்த்தப்பட வேண்டுமா, வேண்டாமா?

“மக்களிடம் அதிருப்தி ஏற்படும்!” - செந்தில்குமார், தி.மு.க எம்.பி., தருமபுரி

``ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் சராசரியாக ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. வருடத்துக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு முழுமையாக ஒரு கோடியைக்கூடச் செலவழிக்க முடியவில்லை. அதனால், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. கொரோனாவைக் காரணம் காட்டி கடந்த இரண்டு வருடங்களாக (2020-21, 2021-22) அந்த நிதியும் வழங்கப்படவில்லை. தவிர, 2019-20-ம் ஆண்டுக்கான 5 கோடி ரூபாயிலும் பாதி மட்டுமே வந்திருக்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தினால் மட்டுமே, மக்களின் தேவைகளை ஓரளவுக்காவது பூர்த்திசெய்ய முடியும். இல்லையென்றால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.’’

ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்! - எம்.பி-க்கள் நிதி உயர்த்தப்பட வேண்டுமா, வேண்டாமா?

“விலைவாசி உயர்ந்துவிட்டது!” - ஜோதிமணி, காங்கிரஸ் எம்.பி., கரூர்

``உள்ளூர் வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில்தான் எம்.பி-க்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. என் தொகுதியிலுள்ள 6,800 ஊர்களில், 6,300 ஊர்களுக்கு நேரில் சென்றிருக்கிறேன். அங்கே, மூடப்படாமல் பல கிணறுகள் இருக்கின்றன. அதைச் சுற்றித்தான் குழந்தைகள் விளையாடுகிறார்கள். இதெல்லாம் பெரிய விஷயமா என்று தோன்றும்... ஆனால், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்தான் விபரீதம் உறைக்கும். இடிந்துபோய்க் கிடக்கும் பள்ளிகள், இடியும் நிலையிலிருக்கும் பள்ளிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு போதாமை எனத் தொகுதியில் பல பிரச்னைகள் இருக்கின்றன. 5 கோடி ரூபாயில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 80 லட்சம்தான் ஒதுக்க முடியும். நான்கு பள்ளிக்கூடங்களைச் சரிசெய்தாலே அந்தப் பணம் காலியாகிவிடும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு பேருந்து நிறுத்தம் கட்ட 4 லட்சம் ரூபாய் செலவானதென்றால் தற்போது விலைவாசி உயர்ந்துவிட்டதால் 8 லட்சம் ரூபாய் செலவாகிறது. எந்த வேலையை எடுத்துச் செய்தாலும் நிலைமை இதுதான். எனவே, எம்.பி-க்கள் நிதியையும் இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.”

ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்! - எம்.பி-க்கள் நிதி உயர்த்தப்பட வேண்டுமா, வேண்டாமா?

“ஆய்வு செய்ய வேண்டும்!” - பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., பா.ஜ.க

``எம்.பி-க்கள் நிதி 2 கோடி ரூபாயாக இருந்தபோதே, பலர் சரியாகப் பயன்படுத்தவில்லை. அடுத்து 5 கோடியாக உயர்த்தப்பட்டது. இப்போதும் சிலர் இதை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. உண்மையில் எம்.பி-க்களிடம் மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஏகப்பட்ட பணிகளும் செய்யவேண்டியிருக்கின்றன. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு வேண்டும். எம்.எல்.ஏ-க்கள் சொன்னால், கலெக்டர்கள் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்வார்கள். ஆனால், எம்.பி-க்கள் சொன்னால் செய்ய மாட்டார்கள். எனவே, எம்.பி-க்கள் தங்களது நிதியை முழுமையாக, முறையாகப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதைக் கணக்கெடுத்து ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகே இந்த நிதி உயர்த்தப்பட வேண்டுமா என்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்.”

ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்! - எம்.பி-க்கள் நிதி உயர்த்தப்பட வேண்டுமா, வேண்டாமா?

“ஜி.எஸ்.டி-க்கே ரூ.1 கோடி காலி!” - சுப்பராயன், சி.பி.ஐ எம்.பி., திருப்பூர்

``உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எம்.பி-க்களுக்கு நிதி ஒதுக்குவது அடிப்படையிலேயே தவறான விஷயம். சட்டம் இயற்றுவதுதான் எம்.பி-க்களின் அடிப்படையான பணி. உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை. அவற்றின் மூலம் பணம் செலவழிக்கப்படுவதுதான் சரியானது. ஆனால், நம் நாட்டில் நடைமுறை வேறு மாதிரியாக இருப்பதால், எம்.பி-க்களுக்கு நிதி என்பதை ஏற்கவேண்டியதாக இருக்கிறது.

எம்.பி தொகுதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட சில வேலைகள் இருக் கின்றன. மோசமான நிலையிலுள்ள பள்ளிக் கட்டடங்கள், குடிநீர்க் கட்டமைப்புகள், சமுதாய நலக்கூடங்கள் ஆகியவற்றைச் சரிசெய்ய வேண்டும். தற்போது எம்.பி-க்களுக்கு ஒதுக்கப்படும் 5 கோடி ரூபாயில், 18 சதவிகிதம் அதாவது, சுமார் ஒரு கோடி ரூபாய் ஜி.எஸ்.டி-க்கே போய் விடுகிறது. தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு வருடத்துக்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அதன்படி ஒரு எம்.பி-க்கு ஆறு சட்டமன்றத் தொகுதிகள் என்று வைத்துக்கொண்டால், 18 கோடி ரூபாய் வருகிறது. அந்தவகையில் திருமாவளவனின் கோரிக்கை நியாயமானதே.”

ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்! - எம்.பி-க்கள் நிதி உயர்த்தப்பட வேண்டுமா, வேண்டாமா?

“நாடு நிதி நெருக்கடியில் இருக்கிறது!” - நாகநாதன், முன்னாள் துணைத் தலைவர், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு

``ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இதற்காகக் குழு நியமிக்கப்பட்டு, நிபுணர்களின் கருத்துகள் பெறப்பட்டன. அதில், எம்.பி-க்கள் பலரும் தங்கள் நிதியில் 60 சதவிகிதத்துக்கு மேல் பயன்படுத்தவில்லை என்றே தெரியவந்தது. தவிர, எம்.பி-க்கள் தங்கள் நிதியை எளிதாகப் பயன்படுத்திவிட முடியாது. நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து, சரியான முயற்சிகளைப் பலர் எடுக்காததுதான் நிதியை முழுமையாகப் பயன்படுத்த முடியாததற்குக் காரணம். தற்போது இந்த நிதியை உயர்த்த வேண்டுமென்றால், பொருளாதார நிபுணர்களை வைத்து ஆராய வேண்டும். நாடு நிதி நெருக்கடியில் இருக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களே முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. எம்.பி-க்கள் அதை முதலில் வலியுறுத்த வேண்டும். தாங்கள் செலவு செய்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு இந்தக் கோரிக்கையை எழுப்பட்டும்.”