கட்டுரைகள்
Published:Updated:

தி.மு.க அணிகளில் புதிய நிர்வாகிகள்... ரேஸில் யார் யார்?

தமிழரசி, சல்மா,தமிழச்சி தங்கபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழரசி, சல்மா,தமிழச்சி தங்கபாண்டியன்

மகளிரணிச் செயலாளராக இருந்த கனிமொழி, தற்போது துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே, தற்போது அந்தப் பதவி காலியாக இருக்கிறது

தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் ஒரு வழியாக முடிந்துவிட்டது. தற்போது, அடுத்தகட்ட நடவடிக்கையாக அணிகளுக்குப் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடங்கியிருக்கிறது. ஒவ்வோர் அணிக்கும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவருகிறார்கள். விரைவில் மாநிலப் பொறுப்புகளுக்கும் நியமனங்கள் நடைபெறவிருக்கின்றன. இதில், யார் யாருடைய பதவி பறிபோகிறது, யாருக்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அறிய விசாரணையில் இறங்கினோம்...

தி.மு.க-வில் அமைப்புரீதியாக இளைஞரணி, மகளிரணி, தொண்டரணி என மொத்தம் 20 அணிகள் இருக்கின்றன. இந்த அணிகளில்தான் தற்போது நியமனங்கள் தொடங்கியிருக்கின்றன. இது குறித்து தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “தி.மு.க-வில் மிக முக்கியமான அணியாகப் பார்க்கப்படுவது இளைஞரணிதான். தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை பலரும் இளைஞரணியில் அங்கம் வகித்தவர்கள்தான். இதனால், இளைஞரணியில் பொறுப்பைப் பெறுவதற்குப் பெரிய அளவில் போட்டா போட்டியே நடக்கிறது. அணியின் மாநிலத் துணைச் செயலாளர்களாக இருந்த அன்பில் மகேஷ், முகம்மது அலி ஜின்னா ஆகியோர் அமைச்சர், மாவட்டச் செயலாளர் என ஒவ்வொரு பதவிக்கு மாறிவிட்டதால், அவர்களின் பதவி காலியாகியிருக்கிறது. அதைத் தங்கள் வாரிசுகளுக்கு வசப்படுத்த அமைச்சர்கள் எம்.ஆர்.காந்தி, தா.மோ.அன்பரசன், ஐ.பெரியசாமி ஆகியோர் காய்நகர்த்துகிறார்கள். அன்பில் மகேஷ் மூலம் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியும், மாநிலத் துணைச் செயலாளர் பொறுப்புக்குத் தீவிரமாக முயல்கிறார்.

தமிழரசி, சல்மா,தமிழச்சி தங்கபாண்டியன், ஹெலன் டேவிட்சன்
தமிழரசி, சல்மா,தமிழச்சி தங்கபாண்டியன், ஹெலன் டேவிட்சன்

மகளிரணிச் செயலாளராக இருந்த கனிமொழி, தற்போது துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே, தற்போது அந்தப் பதவி காலியாக இருக்கிறது. அந்தப் பொறுப்பை ஏற்க அமைச்சர் கீதா ஜீவனிடம் தலைமை சார்பில் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ‘தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். அந்தப் பொறுப்பே போதும். அதுதான் என் அப்பாவின் விருப்பமும்கூட...’ என சென்டிமென்ட்டாகத் தவிர்த்திருக்கிறார் கீதா ஜீவன். அதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு மகளிரணியின் தற்போதைய மாநிலத் துணைச் செயலாளர்களான முன்னாள் அமைச்சர் தமிழரசியும் சல்மாவும் முட்டி மோதுகிறார்கள். முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன், தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் தீவிரமாக மகளிரணிச் செயலாளர் பதவியைப் பெற முயல்கிறார்கள்.

ராஜீவ் காந்தி, மகேந்திரன்
ராஜீவ் காந்தி, மகேந்திரன்

தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரான டி.ஆர்.பி.ராஜா, கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் புதிய பொறுப்புகளைப் பெற, காய்நகர்த்துகிறார். அப்படி அவருக்குப் புதிய பொறுப்புகள் கொடுக்கப்படுமானால், தொழில்நுட்ப அணியின் தலைமைப் பதவிக்கு மகேந்திரன் நியமிக்கப்படலாம். தொழில்நுட்ப அணிக்கான மாவட்ட நிர்வாகிகள் நியமனம் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. இதுவரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் என்றிருந்த அணி தற்போது சேலம், கோவை, திருச்சி, மதுரை என மண்டலவாரியாகப் பிரிக்கப்பட்டு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்” என விவரித்தனர்.

மற்ற அணிகள் குறித்து நம்மிடம் பேசிய அறிவாலயத்தின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நிர்வாகி ஒருவர், “மற்ற அணிகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்கப்போவதில்லை. தற்போது இருக்கும் ஆட்களையே நியமிக்க, தலைமை முடிவு செய்திருக்கிறது. அணிப் பொறுப்புகளிலிருந்து மாவட்டப் பொறுப்புகளுக்குச் சென்றவர்களின் இடங்களில் மட்டும் மாற்றங்கள் இருக்கும்” என்றார்.

உட்கட்சித் தேர்தலிலேயே அதிக காலம் கடத்திவிட்டது தி.மு.க. தற்போது அணிகள் விவகாரத்திலும் காலதாமதம் செய்தால் அடுத்துவரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது கடினமாகிவிடும். எனவே, விரைவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேகம் காட்டுகிறதாம் அறிவாலயம்!