அலசல்
Published:Updated:

மீண்டும் புதிய தலைமை செயலக கோரிக்கை! - என்ன செய்யப்போகிறது தி.மு.க அரசு?

புதிய தலைமைச் செயலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய தலைமைச் செயலகம்

புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நானும் ஒப்புக்கொள்கிறேன். முதல்வரிடம் அதே கோரிக்கையை நானும் வைக்கிறேன்.

தெலங்கானாவில் 28 ஏக்கரில் 64,989 சதுர அடி பரப்பில் 11 மாடிக் கட்டடமாக புதிய தலைமைச் செயலகம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் இரு முறை முயன்று கைவிடப்பட்ட புதிய தலைமைச் செயலக கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது!

தேவைதான்... ஆனால்...

தமிழ்நாட்டின் முதல்வராக அதிக முறை அரியணை ஏறியவர்களான மு.கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே புதிய தலைமைச் செயலகம் கட்ட முயன்றவர்கள்தான். காரணம், தற்போது ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் இடம் ராணுவத்துக்குச் சொந்தமானது. அந்த வளாகத்தில் ஒரு சிறிய மராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டுமென்றாலும், ராணுவத்திடம் ஒப்புதல் வாங்க வேண்டும். கூடவே, இது ஆங்கிலேயர் காலத்துக் கட்டடம் என்பதால், சில வசதிக் குறைவுகளும் இருந்தன.

புதிய தலைமைச் செயலகம்
புதிய தலைமைச் செயலகம்

ஆனால், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக ஜெயலலிதா தேர்வு செய்த இடம் தி.மு.க-வுக்குப் பிடிக்கவில்லை. கருணாநிதி கட்டிய இடம் ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் 2001-2006 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகத் தேர்வுசெய்யப்பட்ட மெரினா ராணி மேரி அரசுக் கல்லூரி, கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடம் இரண்டையும் நிராகரித்துவிட்டு, ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.550 கோடியில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியது அடுத்து வந்த தி.மு.க அரசு. 2011-ல் முதல்வரான ஜெயலலிதா, “கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலக கட்டடம் சட்டமன்றத்துக்கு ஏதுவானதாக இல்லை” என்று சொல்லி, அங்கிருந்து அனைத்துத் துறைகளையும் ஜார்ஜ் கோட்டைக்கு உடனடியாக மாற்றினார். இப்போது அது, `ஓமந்தூரார் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை’யாகச் செயல்பட்டுவருகிறது.

இடம் மாறும் மருத்துவமனை?

2021-ல் மீண்டும் தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இது தொடர்பான கேள்விக்கு இதுவரை தி.மு.க-வைச் சேர்ந்த யாரும், ‘ஆம் - இல்லை’ என்று எந்த பதிலையும் சொல்லாமல், `தலைமை பதில் சொல்லும்’ என்று மழுப்பலாகவே பதிலளித்துக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையே கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் 230 கோடி ரூபாய் செலவில் 1,000 படுக்கை வசதிகளுடன் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைக் கட்டியது தி.மு.க அரசு. ‘கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையை, வரும் ஜூன் மாதம் திறப்பதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இதனால், ஓமந்தூரார் மருத்துவமனை அங்கு இடம்பெயரக்கூடுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

புதிய தலைமைச் செயலகம்
புதிய தலைமைச் செயலகம்

மீண்டும் உயிர்பெறும் கோரிக்கை!

சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், புதிய தலைமைச் செயலகம் தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நானும் ஒப்புக்கொள்கிறேன். முதல்வரிடம் அதே கோரிக்கையை நானும் வைக்கிறேன். விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய சட்டமன்றத்தைக் கட்டுவார். சென்னையில் ராஜ் பவன்... 700 ஏக்கர்கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் என எங்கு வேண்டுமென்றாலும் கட்டலாம்” என்றார்.

பிற கட்சிகளின் கருத்து என்ன என்று அந்தந்தக் கட்சிகளின் சட்டமன்ற கொறடாக்களிடம் பேசினோம். காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதரணி நம்மிடம், “தற்போதைய தலைமைச் செயலகமும், சட்டப்பேரவை வளாகமும் இட நெருக்கடி மிகுந்ததாக இருக்கின்றன. பெண் உறுப்பினர்களுக்கெனத் தனியறைகூட கிடையாது. சரியான கழிவறை வசதியும் கிடையாது. சபை நடைபெறும்போது மற்றவர்களை இடித்துக்கொண்டுதான் வெளியே போகவேண்டிய சூழல் இருக்கிறது. கண்டிப்பாகப் புதிய சட்டமன்றம் தேவைதான். ஏற்கெனவே தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட ‘புதிய தலைமைச் செயலக வளாகம்’ தலைமைச் செயலகத்துக்கென்றே பிரத்யேகமாகக் கட்டப்பட்டது. ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றிவிட்டனர். மீண்டும் அதைத் தலைமைச் செயலகமாக மாற்றினால் உண்மையிலேயே நன்றாக இருக்கும். இல்லையென்றால், பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லாத கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்தில், அனைத்து வசதிகளுடன் சட்டமன்ற துணைக்கோள் நகரத்தை ஏற்படுத்தலாம்” என்றார்

அ.தி.மு.க நிலைப்பாடு!

புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான தேவை இருக்கிறதா என்பது தொடர்பாக அ.தி.மு.க-வின் துணை கொறடா சு.ரவியிடம் பேசினோம். “தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் சட்டசபைக்கு ஏதுவானதல்ல. கூடவே, தற்போது அங்கு செயல்பட்டுவரும் மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அந்த இடத்தை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றினால், அது மக்களைக் கடுமையாக பாதிக்கும் என்பதால், அதை அ.தி.மு.க கடுமையாக எதிர்க்கும். தலைமைச் செயலகத்தை மாற்றியே தீருவோம் என்று இவர்கள் கருதினால், மக்களையும் மருத்துவமனையையும் பாதிக்காதவாறு புதிதாக வேறு எங்காவது கட்டிக்கொள்ளட்டும்” என்றார்.

விஜயதரணி, சு.ரவி, கோ.வி.செழியன்
விஜயதரணி, சு.ரவி, கோ.வி.செழியன்

இந்த விவகாரம் தொடர்பாக அரசு கொறடா கோ.வி.செழியனிடம் (தி.மு.க) பேசினோம். “புதிய சட்டமன்றத்துக்கான தேவை இருக்கிறது என்பதை எதிர்க்கட்சியினர் உட்பட அவையில் அமர்ந்திருக்கும் அனைவருமே ஒப்புக்கொள்வார்கள். எனவே புதிய தலைமைச் செயலகத்துக்கான அறிவிப்பு வரும் என்று அனைத்து உறுப்பினர்களும் காத்திருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் புதுமைகளையும் சாதனைகளையும் செய்துவரும் முதல்வர் புதிய சட்டமன்றம் குறித்த அறிவிப்பையும் விரைவில் வெளியிடுவார் என்று நம்புகிறோம்” என்றார்.

இதற்கு மட்டும் நிதி இருக்கிறதா என்கிற கேள்வி எழுமே?!