அரசியல்
அலசல்
Published:Updated:

சுருங்கிய நாடாளுமன்ற நாள்கள்! - மக்கள் வரிப்பணம் வீணடிப்பு

நாடாளுமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
நாடாளுமன்றம்

மைய மண்டபத்தில் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ராம்நாத் கோவிந்த் விடைபெற்றார்.

கூச்சல் குழப்பம், ஒத்திவைப்பு, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம், காரசார விவாதங்கள் என நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கிறது. ஜூலை 18-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர், மொகரம், ரக்‌ஷா பந்தன் ஆகிய விழாக்கள் காரணமாக, திட்டமிட்டதற்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே (ஆகஸ்ட் 12) கூட்டத்தொடர் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை மக்களவை 44 மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்றது. அதேபோல, மாநிலங்களவை 38 மணி நேரம் 47 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. `விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீது ஜி.எஸ்.டி வரி விதிப்பு, வேலையின்மை, அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஆரம்பத்திலேயே வலியுறுத்தினர். அதை ஆளும் தரப்பு ஏற்காததால், அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற நேரத்தில் அமலாக்கத்துறையின் செயல்பாடு உக்கிரமடைந்திருந்தது. சோனியா காந்தியிடம் பல மணி நேரம் விசாரணை, ‘யங் இந்தியா’ அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது ஆகிய விவகாரங்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தன.

சுருங்கிய நாடாளுமன்ற நாள்கள்! - மக்கள் வரிப்பணம் வீணடிப்பு

இந்த அமளி துமளிக்கு இடையே வேறு சில முக்கியக் காட்சிகளையும் நாடாளுமன்றம் கண்டது. மைய மண்டபத்தில் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ராம்நாத் கோவிந்த் விடைபெற்றார். அதேபோல, குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைந்ததால், அனைத்துக் கட்சி எம்.பி-க்களும் நெகிழ்ச்சியுடன் அவருக்கு விடைகொடுத்தனர். அப்போது பேசிய வெங்கைய நாயுடு, “ஜூலை 18-ம் தேதி கூடிய மாநிலங்களவை 38 மணி நேரத்துக்கு மேல் நடைபெறவில்லை. அமளி காரணமாக கிட்டத்தட்ட 16 மணி நேரத்தை இழந்திருக்கிறோம்; பொதுப் பிரச்னைகளை விவாதிப்பதற்கான வாய்ப்பை உறுப்பினர்கள் இழந்திருக்கிறார்கள்” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தொடரில், ஏழு மசோதாக்கள் மாநிலங்களவையிலும், ஐந்து மசோதாக்கள் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முக்கிய விவாதங்களின்போது, பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் அவையில் இல்லாதது விமர்சனத்துக்குள்ளானது.

திரௌபதி முர்மு - ராம்நாத் கோவிந்த் - வெங்கைய நாயுடு
திரௌபதி முர்மு - ராம்நாத் கோவிந்த் - வெங்கைய நாயுடு

நாடாளுமன்றம் நடைபெறும் காலமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிவருவதாக விமர்சனங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. “நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் நேரம், ஏழாவது முறையாகச் சுருக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் என்கிற மிகப்பெரிய அமைப்பை ‘குஜராத் ஜிம்கானா கிளப்’போல மோடியும் அமித் ஷாவும் மாற்றுவதைத் தடுப்போம்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான டெரிக் ஓ பிரையன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்துக்கு மக்களின் வரிப்பணம் ரூ.2.5 லட்சம் செலவிடப்படுகிறது. அதைப் பற்றிய சிந்தனை எம்.பி-களுக்கும், ஆளும் தரப்புக்கும் இல்லாதது வருத்தத்துக்குரிய செய்தி!