Published:Updated:

ஆபத்தானதா தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம்?

தனிநபர் தரவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தனிநபர் தரவுகள்

நீர்த்துப்போகும் ஆர்.டி.ஐ... மத்திய அரசுக்கு எல்லையில்லா அதிகாரம்!

தகவல் திருட்டு அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டும் மத்திய அரசு, அதைத் தடுப்பதற்காக ‘தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்ட’த்தை நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாட்டு மக்களை அதீத கண்காணிப்பில் வைத்திருக்கவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யவுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

‘ஸ்மார்ட்போன்’ உலகில் ‘அந்தரங்கம்’ என்கிற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல்போய்விட்டது. ‘இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்’ என்பதால் தனிநபர்கள் தொடர்பான தகவல்கள் திருட்டும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கருவிழி, கைரேகை உட்பட தனிநபர் தரவுகள் ஆதாரில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்கு, அலைபேசி எண் என எல்லாவற்றுடனும் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதையும் அரசு கட்டாயமாக்கிவிட்டது. ‘ஆதார் தரவுகள் ரகசியமாக இருக்கும்’ என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்திருந்தாலும், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட லட்சக்கணக்கான இந்தியர்களின் ஆதார் விவரங்கள் திருடப்பட்ட தேசத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதே யதார்த்தம்.

ஆபத்தானதா தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம்?

இந்தச் சூழலில்தான் 2017-ம் ஆண்டு, ‘தனிநபர் தகவல் பாதுகாப்பு ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை’ என்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, 2018-ல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. ஆனால், அந்த மசோதா தவறான பல அம்சங்களுடன் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. வரைவு மசோதாவை தயாரித்துக் கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவே, “மசோதாவில் ஆபத்தான அம்சங்கள் இருக்கின்றன” என்று விமர்சித்தார். அதாவது, ஸ்ரீகிருஷ்ணா தயாரித்துக் கொடுத்த பிறகு அதில் புதிதாக சில அம்சங்களைச் சேர்த்தது மத்திய அரசு!

இந்த எதிர்ப்பால் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மசோதா, தற்போது சில மாற்றங்களுடன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. ஆனாலும், ``ஆபத்தானவை என்று சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்கள் அகற்றப்படவில்லை; நாங்கள் சொன்ன ஆலோசனைகளும் மசோதாவில் இடம்பெறவில்லை” என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், மணீஷ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரையன், மஹுவா மொய்த்ரா உட்பட ஏழு எம்.பி-க்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“தனிநபர்களின் தகவல்களைப் பாதுகாப்பதைவிட, தகவல் உரிமைச் சட்டத்தைக் காலி செய்ய வேண்டும் என்கிற நோக்கமே இந்த மசோதாவில் இருக்கிறது” என்று குற்றம்சாட்டும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலச்சந்திரன் இது பற்றி நம்மிடம் தொடர்ந்து பேசினார்... “சி.பி.ஐ., ஐ.பி ஆகிய அமைப்புகளுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசின் எந்தவொரு துறைக்கும் அதேபோல விலக்கு அளிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், அரசை மேலும் பொறுப்புடைமை ஆக்கவும் கொண்டுவரப்பட்ட தகவல் உரிமைச் சட்டத்தை, ‘தனிநபர் தரவுகளைப் பாதுகாக்கப்போகிறோம்’ என்கிற பெயரில் நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சி இது. நாட்டின் இறையாண்மை, தேசப் பாதுகாப்பு என்ற பெயர்களில் மத்திய அரசுக்கு எல்லையில்லா அதிகாரத்தை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. பொதுமக்களை அதீத கண்காணிப்பில் வைத்துக்கொள்ளவும், தனிநபரின் அந்தரங்கத் தகவல்களை அவரது அனுமதி இல்லாமலேயே எடுத்துக்கொள்ளவும் அரசின் விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது இந்த மசோதா. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” என்றார் எச்சரிக்கும் தொனியில்!

பாலச்சந்திரன் - நாராயணன் திருப்பதி
பாலச்சந்திரன் - நாராயணன் திருப்பதி

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியோ, “தனிநபர்களின் தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அக்கறையுடனேயே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. தனிநபரின் தொலைபேசி எண்கள் உட்பட தகவல்கள் கசிந்து கொண்டேயிருக்கின்றன. இனி இதுபோல யாரும் தனிநபர் தகவல்களைத் திருட முடியாது; மீறினால் தண்டிக்கப்படுவார்கள். கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்களை இந்த மசோதா கட்டுப்படுத்துகிறது. வெளிநாடுகளில் இருந்துகொண்டு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சமூக வலைதள நிறுவனங்களும் இனி கட்டுப்பாடின்றிச் செயல்பட முடியாது. இந்த மசோதா, மத்திய அரசுக்கு சில அதிகாரங்களை வழங்கிவிடும் என்பதால் எம்.பி-க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், ‘தனிநபர் பாதுகாப்பு உரிமை என்பது பயங்கரவாதிகளுக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும் பொருந்தாது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை இந்த எம்.பி-க்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் தேவையற்ற முறையில் இந்த அரசு ஒருபோதும் பயன்படுத்தாது.

ஜனநாயக நாட்டில் வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் எது நல்லது, எது கெட்டது என்பதைத் தெரிந்துகொண்டு தேசப் பாதுகாப்புக்காகச் சில அதிகாரங்களை மத்திய அரசு கையிலெடுத்துக்கொள்வது தவறானது அல்ல. தேசத்துக்கு எதிராக ஒருவர் குற்றமிழைக்கிறார் என்றால் அவரது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்தையும் அரசு கண்காணிக்கத்தான் செய்யும். அந்த உரிமைகூட இல்லையென்றால் நாட்டின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது?” என்றார் உறுதியுடன்!

ஒவ்வொரு தனிநபரையும் உள்ளடக்கியதே தேசம். தேசப் பாதுகாப்புடன் தனிநபர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்!