பேராசிரியர். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க செய்தித் தொடர்பாளர்
“உயர்கல்வி விவகாரத்தில் அரசியல் செய்வது அண்ணாமலையும், மத்திய அரசும்தான். அருவருக்கத்தக்க அளவில்... தமிழகம் அல்ல, இந்தியாவே பார்த்திராத ஒரு கேவலமான அரசியலை ஆளுநர் முன்னெடுக்கிறார். ஆளுநர் செய்யும் முறையற்ற செயல்களுக்கு அண்ணாமலை ஒத்தூதிவருவதை வழக்கமாகவைத்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் அவருக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைத் தாண்டி, அவருக்கு இல்லாத அதிகாரங்களைக் கையிலெடுத்து வருகிறார் ஆளுநர். துணைவேந்தர்களின் மாநாட்டை யாரிடம் சொல்லிவிட்டு நடத்தினார்... அந்த மாநாட்டில் தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ-வை அழைத்துப் பேசவைத்த காரணம் என்ன... ஆளுநர் செல்லும் கான்வாயில் பா.ஜ.க-வின் கொடி பொருத்திய வாகனங்கள் செல்வது ஏன்? இப்படியிருக்க `உயர்கல்வித்துறையில் அரசியலைப் புகுத்தி, மாணவர்களின் நலனைக் கெடுக்க நினைக்கிறது தி.மு.க’ என்று அண்ணாமலை பேசுவது, தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மட்டுமே. ஒரு செய்தியை ஆழம், பரிமாணம், தாக்கம் என்று எதுவும் இல்லாமல், எதையாவது சொல்லிவிட்டுப் போவதுதான் அண்ணாமலையின் வழக்கம்!”

பேராசிரியர். கனகசபாபதி, பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்
“நிச்சயம் தி.மு.க அரசுதான். கடந்தகாலங்களில் இந்தியாவிலேயே அதிகமான துணைவேந்தர்கள், முதல்வர்கள், பதிவாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது தமிழகத்தில்தான். தமிழக ஆளுநராக வித்யாசாகர் வந்தது முதல் தற்போது வரை, துணைவேந்தர்கள் நியமனம் தகுதி, திறமை அடிப்படையில் நியாயமான முறையில் நடைபெறுகிறது. உயர்கல்வியில் நடைபெற்றுவந்த அரசியலையும், முறைகேடுகளையும் ஆளுநர் இப்போது தடுத்து நிறுத்தியுள்ளார். பேராசிரியர் நியமனத்துக்கான லஞ்சம் தொடங்கி கட்டடம் கட்டுவதிலான முறைகேடுகள் வரை பல்வேறு வகையில் நடக்கும் பல ஊழல்கள் ஒழிக்கப்பட்டிருக்கின்றன. நான் கல்வித்துறையில் இருப்பதால், இதுவரை எத்தனை முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தெரியும். அவை அனைத்துமே தற்போது முறைப்படுத்தப்பட்டு, உயர்கல்வித்துறை சரிசெய்யப்பட்டுவருகிறது. அதைப் பொறுக்க முடியாமல் தி.மு.க-தான் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறது!”