அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

இறுகும் பிடி... நெருக்கடியில் ராஜேந்திர பாலாஜி..!

ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேந்திர பாலாஜி

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருகிறது

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், பேட்டி கொடுத்தே எதிர்க்கட்சியினர் அனைவரையும் வாட்டியெடுத்தவர் அன்றைய பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. ஆட்சி மாறியதும் சொந்தக் கட்சிக்காரர்களே, அவர்மீது அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகப் புகாரளிக்க, ``வாங்க ராசா...’’ என்று அந்த வழக்கில் ஆளுங்கட்சி அதீத ஆர்வம் காட்ட, பயந்து மாநிலத்தைவிட்டே ஓடிப்போனார் கே.டி.ஆர். 20 நாள்கள் தலைமறைவு, எட்டு தனிப்படைகளின் தேடுதல் வேட்டை, கர்நாடகாவில் கைது, 10 நாள்கள் சிறைவாசம் என்று பரபரப்பாக நகர்ந்த இந்த வழக்கு, கடந்த ஓராண்டாகக் கிணற்றில் போட்ட கல்லாக அமிழ்ந்து கிடந்தது. இந்த வழக்கில், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

இறுகும் பிடி... நெருக்கடியில் ராஜேந்திர பாலாஜி..!

இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். “முன்னாள் அமைச்சர் கே.டி‌.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரின் உதவியாளர்கள்மீது அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்த விஜயநல்லதம்பி, வியாபாரி ரவீந்திரன் ஆகியோரே இந்தப் பண மோசடிப் புகாரைக் கொடுத்தனர். தன்மீது பதிவுசெய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராஜேந்திர பாலாஜி. அவருக்கு எதிரான சாட்சியங்கள் பதிவாகியிருப்பதால், முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய முடியாது என்றும், அடுத்த 45 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதனடிப்படையிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ராஜேந்திர பாலாஜி தப்பிச் செல்லவும், தலைமறைவாக இருக்கவும் உதவிய நான்கு பேர் கூடுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுகும் பிடி... நெருக்கடியில் ராஜேந்திர பாலாஜி..!

முதல் வழக்கில் விஜயநல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன், ஓசூரைச் சேர்ந்த பா.ஜ.க மாவட்டத் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், அவரின் ஓட்டுநர் நாகேஷ், ஓசூர் நகர பா.ஜ.க தலைவர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தொழில்நுட்ப அணிச் செயலாளர் பாண்டியராஜன், முத்துப்பாண்டியன் உள்ளிட்ட எட்டுப் பேர்மீது 28 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் வழக்கில் ராஜேந்திர பாலாஜி, பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டியன், பா.ஜ.க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ரமேஷ், ஓட்டுநர் நாகேஷ் ஆகிய ஏழு பேர்மீது சுமார் 150 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு வழக்குகளையும் சேர்த்து சாட்சிகள், சாட்சியங்கள் என 90 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன” என்றனர்.

வாதி தரப்பு வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டபோது, “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. கே.டி.ஆர் தலைக்கு மேல் தொங்கிய கத்தி, இன்னும் கொஞ்சம் கீழிறங்கியிருக்கிறது” என்றார்.

அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பேசியபோது, “முக்கியமான வேலையாக வெளியே போகிறேன். எதுவாக இருந்தாலும் பிறகு பேசலாம்” என்பதோடு நிறுத்திக்கொண்டார். அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை.

மறுபடியும் முதல்லருந்தா..?!