Published:Updated:

‘கட்சியா, கம்பெனியா?’

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

ரஜினி கேட்கும் அலை... ரசிகர்கள் கவலை!

‘கட்சியா, கம்பெனியா?’

ரஜினி கேட்கும் அலை... ரசிகர்கள் கவலை!

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி
இன்னொருவர் முதல்வர் ஆக, ரஜினி கைகாட்டும் கதைதான் ‘பாபா’ திரைப்படம். 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘பாபா’ படத்தில் சொன்ன கற்பனையைத்தான் இன்று நிஜமாக்க முயல்கிறார் ரஜினி.

தேவையான அளவுக்கு மட்டுமே கட்சிக்கு நிர்வாகிகள், தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு, கட்சி மற்றும் ஆட்சித் தலைமைகளைத் தனித்தனியாகப் பிரிப்பது... இந்த மூன்று அரசியல் மாற்றங்களை முன்னிலைப்படுத்தி ரஜினி நடத்திய திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு, ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்வியை இன்னும் வலுவாக்கியிருக்கிறது.

‘‘ஆட்சி மாற்றம் மட்டும் போதாது. அரசியல் நடத்தப்படும் முறையிலும் மாற்றம் வரவேண்டும். அப்போதுதான் நேர்மையான ஆட்சியைத் தர முடியும்’’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் ரஜினி. ‘அவர் சொல்லும் அரசியல் மாற்றங்கள் சாத்தியமா?’ என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க... ரஜினி இப்போது கேட்டிருக்கும் ‘மக்கள் அலை’ என்னும் மாயவலை, ரசிகர்களுக்குக் கவலை தரக்கூடியதாக மாறியிருக்கிறது.

2017 டிசம்பர் 31-ம் தேதி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதி களிலும் போட்டியிடுவோம்’’ என அறிவித்தார் ரஜினிகாந்த். இது ரசிகர்களின் உள்ளத்தில் புதுவெள்ளம் பாய்ச்சியது. ஜெயலலிதா, கருணாநிதி அடுத்தடுத்து மறைந்ததும், கமல் அதிரடியாக அரசியலுக்குள் நுழைந்தார். பிறகுதான் ரஜினியிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியானது. அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இடையில், நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, ‘‘எங்கள் இலக்கு சட்டமன்றத் தேர்தல்தான்’’ என்று சொன்னார் ரஜினி.

இந்தச் சூழலில்தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார் ரஜினி. பிறகு மீடியாக்களிடம் பேசிய அவர், ‘‘மாவட்டச் செயலாளர்களுடன் பேசியபோது எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தியில்லை... ஏமாற்றமே!’’ என்று சொன்னார். `கட்சிக்கு ரஜினியும் ஆட்சிக்கு இன்னொருவரையும் நியமிக்கும் ரஜினியின் யோசனையில் மாவட்டச் செயலாளர்கள் காட்டிய ரியாக்‌ஷன் அவருக்கு திருப்தியளிக்கவில்லை’ என்று செய்திகள் கசிந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘ரஜினி அரசியலுக்கு வருவதில் தடங்கல்’, ‘அரசியலில் இருந்து ஒதுங்குகிறார்’ என்றெல்லாம் செய்திகள் கிளம்பின. ‘கட்சிக்கு ஒருவர்... ஆட்சிக்கு இன்னொருவர்’ என்ற ரகசியத் திட்டம் விவாதப்பொருளாக மாற ஆரம்பித்தது. அதுபற்றி மக்களிடமே கேட்டுவிடலாம் என முடிவெடுத்தார் ரஜினி. அதற்காகத்தான் இந்தத் திடீர் பிரஸ்மீட். இதில், ‘கட்சியின் பெயரையோ அல்லது மாநாட்டுத் தேதியையோ அறிவிப்பார்’ என ரசிகர்கள் காத்திருக்க, ரஜினியின் அரசியல் மாற்றம் அறிவிப்பு அவர்களை கவலைகொள்ளவைத்துவிட்டது.

ரஜினி
ரஜினி

‘‘அரசியலுக்கு வருவதாக, கடைசிவரை சொல்லிக்கொண்டே இருந்திருக்கலாம். இப்போது ரஜினி சொன்ன விஷயங்கள், இன்னும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன’’ என்று ரகசியமாக காதைக்கடிக்கின்றனர் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள்.

‘தேவையான அளவுக்கு மட்டுமே கட்சிக்கு நிர்வாகிகள், தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு, கட்சி மற்றும் ஆட்சித் தலைமைகளைத் தனித்தனியாகப் பிரிப்பது’ என்ற மூன்று திட்டங்களை பிரஸ்மீட்டில் பட்டியல்போட்டார் ரஜினி. ‘‘சிஸ்டம் மாற வேண்டும்’’ என்று ரஜினி அடிக்கடி சொல்லிவந்தார். அந்த மாற்றத்தைத்தான் இப்போது மூன்று ஐடியாக்களோடு முன்வைத்திருக்கிறார்.

தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகளில் பலர் பதவியில் அமர்ந்துவிடத் துடிக்கிறார்கள் என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். ‘தன்னைப் பயன்படுத்தி அவர்கள் பதவி சுகம் காண விரும்புகிறார்கள். அதனால், அவர்கள் செய்யும் தவறுகள் தன்மீது விழும்’ என்ற அச்சம் ரஜினிக்கு எப்போதும் உண்டு. தன்மீது கறை விழுந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறார். அதனால்தான் ‘‘பணம், பதவி சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னிடம் வர வேண்டாம்’’ என்று முன்பே சொல்லியிருந்தார். இப்போது அதை வேறு மாதிரி சொல்லியிருக்கிறார்.

‘‘கட்சியில் 50 வயதுக்குமேல் இருப்பவர்களுக்கு சீட் இல்லை. வேறு கட்சியில் இருக்கும் நல்லவர் களுக்கும், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் வாய்ப்புகள் தரப்படும்’’ என்கிறார். இதன்மூலம் அரசியலில் நுழைந்து பணமும் பெயரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என நினைத்த ரசிகர்களின் கனவுக்கதவுகளை நிரந்தரமாகச் சாத்திவிட்டார் ரஜினி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அசுரபலத்தோடு இருக்கும் இரண்டு கட்சிகளுக்கு இடையே சினிமா புகழை மட்டுமே நம்பி கொள்கைகளைச் சொல்லி தேர்தலைச் சந்தித்துவிட முடியுமா? தேர்தல் ஒன்றும் சாதாரண விஷய மல்ல. அதற்கான திட்டங்களை முன்கூட்டியே சொல்லாமல் ரசிகர் களை தேர்தலில் பயன்படுத்தினால், என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்கியதுபோலாகிவிடும். அதனால்தான், முதலிலேயே சொல்லிவிடுகிறேன்’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் ரஜினி.

ரஜினி
ரஜினி

‘‘வேறு கட்சியில் இருப்பவர் களையும் மற்ற துறைகளில் இருக்கும் ஆளுமைகளையும் எம்.எல்.ஏ-கள் ஆக்குவதற்கு ரஜினி ஏன் பாடுபட வேண்டும்? அவரையே நம்பியிருக்கும் எங்களைப் போன்ற ரசிகர் களுக்குத்தானே அவர் பிளாட்பாரம் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ரஜினி ரசிகர்களாக இல்லாத அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆவதற்கு நாங்கள் ஏன் உழைக்க வேண்டும்?’’ என்று ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர்.

எம்.ஜி.ஆரின் ரசிகர்களாக இருந்த பலர்தான், அவர் கட்சி தொடங்கியபோது எம்.எல்.ஏ-க் களாகி, அமைச்சர்களாகவும் ஆனார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவருடைய ரசிகர்கள்தான் எம்.எல்.ஏ-களாக ஆனார்கள். அதுபோல் தங்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பியிருந்த ரசிகர்களின் ஆசையை மொத்தமாக கேள்விக்குறியாக்கி யுள்ளார் ரஜினி.

‘‘தேர்ந்தெடுக்கப்படும் ரசிகர்கள் சரியில்லாமல்போனால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே ரஜினி பயப்படுவது எதற்கு? மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் விஷயம் இது’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர்.

முதல்வர் பதவியை சி.இ.ஓ பதவியுடன் ஒப்பிட்டுப் பேசிய ரஜினியின் வார்த்தைகளை வைத்து, “அவர் தொடங்கப்போவது கட்சியா அல்லது கம்பெனியா?” என்ற கேள்வியையும் எழுப்பும் ரஜினி மன்ற நிர்வாகிகள், ‘‘ரஜினி தனது உரையில், ‘கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வாக்களித்தவர்கள் 70 சதவிகிதம் பேர். மீதி உள்ள 30 சதவிகிதம் பேர் கட்சிக்காக வாக்களித்தனர்’ என்று சொல்கிறார். அப்படியென்றால், ரஜினி என்கிற முகத்துக்காகத்தானே ஓட்டுகள் விழும். அவரோ வேறு ஒருவரை முதல்வர் ஆக்குகிறார் என்றால், எப்படி வாக்களிப்பார்கள்? ரஜினி சொன்ன வார்த்தைகளே முரண்பாடாக இருக்கின்றனவே’’ என்கின்றனர்.

‘‘இப்போது அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அப்படியான சூழலில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி எழுச்சி வந்தால், இரண்டு திராவிடக் கட்சிகளின் அசுரபலம், பணபலம் ஆள்பலம் எதுவுமே நிற்காது. அதைத்தான் நான் விரும்புகிறேன். அந்த அலை, அந்த மூவ்மென்ட் உண்டாக வேண்டும். அது வரும் என நம்புகிறேன். தமிழகம் புரட்சி மண். கடந்த காலங்களில் இங்கே புரட்சி நடந்திருக்கிறது. அது 2021-ல் நடக்க வேண்டும்.

அந்த அதிசயம், அற்புதம் நடக்க வேண்டும். இந்த அம்சங்கள் செயல்படுத்தப்பட்டால், இந்த யோசனைகள் மக்களிடம் எழுச்சி பெற்றால்... அப்போது வருகிறேன்’’
என்றார் ரஜினி.

இது இன்னும் குழப்பத்தை விதைக்கிறது. ‘‘தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் சூழலில், இந்த எழுச்சி எப்படி உண்டாகும்? அரசியலுக்கு வருவதாக ரஜினி சொன்ன 2017 டிசம்பர் 31-ம் தேதியன்றே இந்த எழுச்சி தேவையென்று பேச ஆரம்பித்திருக்கலாமே! அப்போது இதைச் சொல்லாத ரஜினி, இப்போது சொல்வதற்கான காரணம் என்ன... அவர் அரசியலுக்கு வர பயந்து இப்படிச் சொல்கிறாரா?’’ என்றெல்லாம் சமூக ஊடகங்களில் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

2017-ம் ஆண்டு இறுதியில் ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொன்ன பிறகு, எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது, ‘‘அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளை சரியாகச் செய்யாததால்தான் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் அரசியலில் இறங்கியிருக்கிறேன்’’ என்று சொன்னார். ‘‘தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை என்னால் நிரப்ப முடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார். ரஜினியின் இப்போதைய பேச்சுகளைப் பார்த்தால், அந்த நம்பிக்கை அவரைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க்கொண்டிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அதேசமயம், ‘‘இதான் வெற்றிடம்... இதான் நேரம்... 54 ஆண்டுகளாக இருந்த ஆட்சிகளை அகற்றுவதற்கு’’ என்று அடிவயிற்றிலிருந்து ரஜினி கொடுக்கும் அழுத்தம், யோசிக்கவைக்கிறது.

‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்’ என்பது ரஜினியின் பழைய பன்ச். ‘இப்போ இல்லனா... எப்பவும் இல்ல’ - இது ரஜினி அடித்த புது பன்ச்.

சாதிப்பாரா... பார்ப்போம்!

துரைமுருகன்

- தி.மு.க பொருளாளர்

``தன் ரசிகர்களை உற்சாகப்படுத்த, ரஜினி அப்படிப் பேசியிருக்கிறார். மற்றபடி, சாமர்த்தியம் இருந்தால் திராவிடக் கட்சிகளை வீழ்த்திப் பார்க்கட்டும்.’’

கே.பாலகிருஷ்ணன்

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர்

‘‘இன்றைக்கு நாட்டில் தலைவிரித்தாடும் பிரச்னைகளில் தன்னுடைய அணுகுமுறை என்ன என்பதைப் பற்றியெல்லாம் அவர் பேசவேயில்லையே. பிறகு எப்படி அது அரசியல் மாற்றம் ஆகும்?’’

துரைமுருகன் - கே.பாலகிருஷ்ணன் - டாக்டர் கிருஷ்ணசாமி - மல்லை சத்யா
துரைமுருகன் - கே.பாலகிருஷ்ணன் - டாக்டர் கிருஷ்ணசாமி - மல்லை சத்யா

டாக்டர் கிருஷ்ணசாமி,

- புதிய தமிழகம் கட்சித் தலைவர்

‘‘தமிழகத்தில், அரசியல் மாற்றம் வரவேண்டும் என்றுதான் இங்கே பலரும் முயற்சி எடுத்துவருகிறோம். அதைத்தான் ரஜினிகாந்த்தும் சொல்லியிருக்கிறார்.’’

மல்லை சத்யா

- ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர்

‘‘அரசியலுக்கு தான் லாயக்கில்லை என்பதை, மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.’’

வானதி சீனிவாசன்,

- தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர்

‘‘இப்போதும் மதில்மேல் பூனையாகத்தான் ரஜினிகாந்த் நிற்கிறார். தன்னுடைய அரசியல் இயக்கம் பற்றி முழுமையான ஒரு வடிவம் கொடுக்க, ஒருவிதமான தயக்கம் அவரிடத்தில் இருக்கிறது.’’

வானதி சீனிவாசன் - வன்னி அரசு - ஆர்.பி.உதயகுமார்
வானதி சீனிவாசன் - வன்னி அரசு - ஆர்.பி.உதயகுமார்

வன்னி அரசு

- வி.சி.க துணைப் பொதுச்செயலாளர்

‘‘மக்களுக்காக களத்தில் இறங்கிப் போராடி பாடுபட்டு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என நினைக்காமல், ‘நீங்கள் மாறுங்கள்... நான் வருகிறேன்’ என்று சொல்வது திட்டமிட்ட ஏமாற்று வேலை.’’

ஆர்.பி.உதயகுமார்

- வருவாய்த்துறை அமைச்சர்

‘‘தமிழ்நாட்டை முன்னுதாரண மாநிலமாக முன்னோக்கி எடுத்துச் சென்ற கட்சி அ.தி.மு.க. ஆனால் ரஜினிகாந்த், ‘அ.தி.மு.க-வை வீழ்த்த வேண்டும்’ என்று பேசுகிறார். அப்படியென்றால், பெண்ணுரிமை, சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்குத் தேவையில்லாத விஷயம் என நினைக்கிறாரா அவர்?’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism