Published:Updated:

இன்னொருவர் ஏற்படுத்துவதா எழுச்சி?

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

‘கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர்’

‘‘அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் இப்போது நடக்காவிட்டால் எப்போதும் நடக்காது’’ என்று முழக்கம் செய்திருக்கும் ரஜினிகாந்த், ‘‘மக்கள் எழுச்சி வெடிக்க வேண்டும்.

அதை எல்லோரும் செய்ய வேண்டும். எழுச்சி உருவானால் நான் வருகிறேன்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

மக்களே ஓர் எழுச்சியை உருவாக்கிவிட்டு, அதன் பிறகு ஒரு தலைவரை எதிர்பார்த்துக் காத்திருப்பது ஜனநாயக நாடுகளில் இதுவரை நிகழ்ந்ததில்லை. தலைமை இல்லாமல் நிகழ்ந்த எழுச்சிகளாக ‘அரபு வசந்தம்’ என்ற பெயரில் வளைகுடா நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த போராட்டங்களைச் சொல்லலாம். ஆனால், அந்தப் போராட்டங்களுக்குக்கூட மேற்கத்திய நாடுகளின் ஆதரவும், சொந்த நாட்டுப் பாதுகாப்புப் படைகளின் பக்கபலமும் தேவைப்பட்டன. நம் ஊரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும் தலைவர் என யாரும் கிடையாது. ஆனால், அது மேன்மையான ஓர் இலக்குடன் நிகழ்ந்த போராட்டம் என்பதால், அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் இருந்ததால், அது தலைமை இல்லாமலேயே வெற்றி பெற்றது. ஆனால், ‘சிஸ்டத்தை மாற்றுவது’ என்பது அப்படிப்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகத் தொடரும் ஒரு நடைமுறையைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் விஷயம். கையில் அதிகாரத்தையும் செல்வாக்கையும் வைத்திருக்கும் அத்தனை பேரையும் எதிர்த்துச் செய்ய வேண்டிய விஷயம். எளிய மக்கள் அதைச் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதற்கு ஒரு தலைவர் வேண்டும்.

‘கெட்டுப்போன சிஸ்டத்தை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்’ என்பதை நம் கண்முன்னே ஒருவர் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். உலகத்தின் மிக வல்லமை வாய்ந்த ஒரு சிஸ்டத்தை அவர் எதிர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் பெயர், பெர்னி சாண்டர்ஸ்.

‘நம்மை ஆள்பவர்கள் வெறும் முகமூடிகள், அவர்களுக்குப் பின்னால் இருந்தபடி கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் நம்மை ஆள்கின்றன’ என்ற கருத்து அமெரிக்காவில் வெளிப்படையான உண்மை. ஆயுத நிறுவனங்கள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவை வெளிப்படையாகவே வேட்பாளர்களுக்கு நன்கொடை வழங்கும்.

ரஜினி
ரஜினி

அமெரிக்கத் தேர்தல் முறை விநோதமானது. அங்கு குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் சார்பில் போட்டியிடுபவர்கள் தான் ஜெயிக்க முடியும். நம் ஊர்போல கட்சியின் தலைவரே ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பு ஏற்கும் நடைமுறை அங்கு இல்லை. கட்சியின் சார்பில் வேட்பாளராக நிற்பதற்கு நிறைய பேர் போட்டி போடுவார்கள். ‘இவர்களில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம்’ என்பதற்குக் கட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் மாகாணங்கள்வாரியாகத் தேர்தல் நடைபெறும். அதில் யார் அதிக ஆதரவைப் பெறுகிறாரோ, அவரே கட்சியின் வேட்பாளராக முடியும். அதன் பிறகு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இறங்க வேண்டும்.

இப்படிக் கட்சித் தேர்தலுக்கும், அதிபர் தேர்தலுக்கும் பிரசாரம் செய்வதென்பது நிறைய செலவு பிடிக்கும் சமாசாரம். அதற்காகப் பெரும் நிறுவனங்களைப் பலரும் சார்ந்திருப்பார்கள். இதனால், அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவையாக அந்தப் பெரும் நிறுவனங்கள் மாறுகின்றன.

இந்த முறை குடியரசுக் கட்சி சார்பில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் யார் போட்டியிடுவது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இப்போது உக்கிரமாக நடைபெற்று வருகிறது. முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனுடன் இந்தப் போட்டியில் மோதுகிறவர்தான் பெர்னி சாண்டர்ஸ்.

ரஜினியைப்போலவே ‘இப்போது விட்டால் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்கிற இளைஞர் இல்லை அவர். வயது 78. உடலில் ஏகப்பட்ட பிரச்னைகள். கடந்த அக்டோபரில் திடீர் மாரடைப்பு வந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். என்றாலும், ‘அமெரிக்காவின் அரசியலை மாற்றுவது, அதன் மூலம் உலக அரசியலை மாற்றுவது’ என்ற நோக்கத்துடன் அவர் இயங்கிவருகிறார். அவருக்கு சினிமா மூலம் கிடைத்த புகழோ, பெரும் ரசிகர் ஆதரவோ இல்லையென்றாலும், சிஸ்டத்தை மாற்றுவதற்காக அவர் முன்வைத்த யோசனைகளால் மட்டுமே அவர் புகழடைந்திருக்கிறார்.

அமெரிக்கா நடத்தும்
அமைதி போர்கள்

‘ஒரு சதவிகித பணக்காரர்களுக்கான ஆட்சியை நான் செய்ய மாட்டேன். எல்லோருக்குமான ஆட்சியே வேண்டும்’ என்கிற பெர்னி, பெரு நிறுவனங்களின் நன்கொடைகளை வெளிப்படையாக மறுத்துவிட்டார். சொல்லப்போனால், அவர் தரும் வாக்குறுதி களைப் பார்க்கும் பணக்காரர்கள் எவரும் அவருக்கு ஒரு டாலர்கூட நிதி தர மாட்டார்கள்.

‘அமைதியின் பெயரால் உலகெங்கும் அமெரிக்கா நடத்தும் போர்கள் நிறுத்தப்படும். பேச்சுவார்த்தைகள் மூலமே சர்வதேச உறவுகள் உறுதி செய்யப்படும்’ என அவர் சொல்வது அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. அத்தனை தேசங்களின் உள் விவகாரங்களிலும் தலையிட்டு, ‘உலகத்தின் போலீஸ்காரன்’ எனப் பெயர் வாங்கிய அமெரிக்காவின் இயல்புக்கு நேர் எதிரானது இது. என்றாலும், தயக்கமின்றி இந்தப் பிரசாரத்தை அவர் செய்கிறார்.

மருத்துவ இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பிடியில் சிக்கி அமெரிக்க மக்கள் தவிக்கிறார்கள். இன்ஷூரன்ஸ் செய்துகொள்ளாதவர்கள் படுக்கையில் கிடந்து சாக வேண்டியதுதான் விதி. ‘எல்லோருக்கும் மருத்துவ வசதியை அரசு உறுதி செய்யும்’ என பெர்னி கொடுக்கும் வாக்குறுதி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைத் திகைக்க வைத்திருக்கிறது.

வாங்கிய கல்விக்கடனைக் கட்டுவதற்கே பல ஆண்டுகள் வேலை பார்க்க வேண்டிய சூழலில் அமெரிக்க இளைய தலைமுறை உள்ளது. உயர்கல்வி அங்கு அவ்வளவு காஸ்ட்லியான விஷயம். ‘எல்லோருக்கும் இலவசக் கல்லூரிச் சேர்க்கை கிடைக்கும்’ என்கிறார் பெர்னி. இதேபோல குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவது, வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது என அவர் மேடைகளில் முழங்கும் பல வார்த்தைகளை அமெரிக்கா இதுவரை கேட்டதில்லை.

பெர்னி சாண்டர்ஸ்
பெர்னி சாண்டர்ஸ்

அமெரிக்கர்களுக்கு ‘கம்யூனிசம்’, ‘சோஷலிசம்’ போன்ற வார்த்தைகளே அலர்ஜி. ஆனால், ‘‘நான் ஒரு சோஷலிஸ்ட்’’ என்று வெளிப்படையாகச் சொல்கிற பெர்னியை அவர்கள் ஆதரிக்கிறார்கள். ‘நான் இல்லை, நாம்’ என்பதுதான் அவரின் தேர்தல் முழக்கம். ‘இந்த அரசியல் சிஸ்டம் இதுவரை யாருக்காகச் செயல்படவில்லையோ, அந்த அடித்தட்டு மக்களின் குரல் இவர். தாங்கள் ஒதுக்கப்பட்டதாக நினைக்கும் நடுத்தர மக்களின் பிரதிநிதி இவர்’ என அவரின் பிரசாரக்குழு பெர்னி சாண்டர்ஸை வர்ணிக்கிறது.

இப்படி வெளிப்படையாகவே பெரு நிறுவனங்களையும் பெரும் பணக்காரர்களையும் எதிர்க்கும் ஒருவரை என்ன செய்வார்கள் அவர்கள்... சிஸ்டத்தை மாற்றுவதற்கு அவரை விட்டுவிடுவார்களா... அவர் வாய்ப்பு கேட்டு காத்திருக்கும் ஜனநாயகக் கட்சியிலேயே அவரைப் பார்த்துப் பலரும் பதறுகிறார்கள். ‘அவருக்கு ஆதரவு தெரிவித்தால் பெரு நிறுவனங்களின் பகையை சம்பாதித்துக்கொள்ள நேரிடும்’ என்று கட்சிப் பிரதிநிதிகள் பலர் தெறித்து ஓடுகிறார்கள். கட்சிக்குள்ளேயே இருக்கும் பெரும் பணக்காரர்கள் அவரைத் தோற்கடிக்க முழு முயற்சி மேற்கொள்கிறார்கள். போட்டியில் இருந்த பலரை விலகவைத்து, அவர்கள் எல்லோரும் ஜோ பிடெனை ஆதரிக்குமாறு செய்திருக்கிறார்கள்.

‘பெர்னி சாண்டர்ஸ் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் சொல்வதையெல்லாம் செய்வதற்கு அரசிடம் நிதி இல்லை’ என்று அவரை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ‘என் அரசியல் திட்டம் இதுதான். நான் சொல்வதையெல்லாம் செய்வதற்கு இப்படி வருமானத்தை ஈட்டலாம்’ என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டு பிரசாரத்தைத் தொடர்கிறார் பெர்னி. இளைய தலைமுறையினர், அடித்தட்டு மக்கள் ஆகியோரின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. ‘‘உங்கள் பழைய அரசியலை வைத்துக்கொண்டு பெரும் பணக்காரரான ட்ரம்பை வீழ்த்த முடியாது. என் திட்டங்களால் அவரை வீழ்த்துவேன்’’ என்று கட்சிக்காரர்களுக்குச் சொல்கிறார் அவர்.

கடந்த முறையும் பெர்னி சாண்டர்ஸ் களத்தில் இருந்தார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஆவதில் ஹிலரி கிளின்டனுக்கும் அவருக்கும் கடும் போட்டி நிலவியது. கடைசி நேரத்தில் ஹிலரி முந்தியதால், போட்டியிலிருந்து பெர்னி விலக நேரிட்டது.

ஆனால், அந்தத் தோல்விக்குப் பிறகு அவர் ஒதுங்கிவிடவில்லை. ‘தான் ஜெயிப்பதைவிட, இந்த சிஸ்டத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே தன் இலக்கு’ என இயங்கி வருகிறார். வேறு யாரோ வந்து அதைச் செய்வார்கள் எனக் காத்திருக்கவில்லை. மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘Our Revolution’ என்ற அமைப்பை ஆரம்பித்தார். ‘மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களைத் தேர்வு செய்வது எப்படி’ என்பதை இந்த அமைப்பு வாக்காளர்களுக்கு விளக்கிவருகிறது.

இம்முறைகூட அவருக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் அல்லது வாய்ப்பு கிடைத்தாலும் ட்ரம்பை வீழ்த்த முடியாமல் போகலாம். ஏனெனில், ஒரு சிஸ்டத்தை எதிர்ப்பவர்களை அந்த சிஸ்டத்தில் இருப்பவர்கள் தலைதூக்க முடியாதபடி வீழ்த்த நினைப்பார்கள். ஆனால், அப்படி வீழ்ந்தாலும்கூட பெர்னி தொடர்ந்து அரசியலில் இயங்குவார்.

தேர்தலில் ஜெயிப்பதற்கு முன்பாகவே ‘அமெரிக்கத் தேர்தல் அரசியல் வரலாற்றில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல்வாதி’ என்று அவரைச் சொல்கிறார்கள். பல புதிய விஷயங்களை அவர் பேசி, மக்கள் அவை குறித்து விவாதிக்குமாறு செய்திருக்கிறார். அவர் கொடுத்த பல வாக்குறுதிகள், ஜனநாயகக் கட்சியின் கொள்கையாக மாறியிருக்கின்றன. காலப்போக்கில் இந்த சிஸ்டத்தில் சில மாற்றங்கள் நிகழ, அவரின் இப்போதைய பிரசாரம் காரணமாக இருக்கலாம்.

அவர் தன்னை நம்பும் இளைஞர் கூட்டத்திடம், ‘நீங்கள் போய் எழுச்சியை ஏற்படுத்துங்கள்’ என்று சொல்லவில்லை. தன் முதுமையையும் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், அமெரிக்காவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்கிறார். ‘வேறு யாரையோ பதவியில் அமர்த்துவேன்’ என்றும் சொல்லவில்லை. தன் கையில் பதவி இருந்தால்தான் சிஸ்டத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறார்.

உண்மையில் ரஜினி சொல்லும், ‘கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர்’ என்ற நடைமுறையே ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்தியாவில் பதவியையும் அதிகாரத்தையும் விரும்பாத தலைவர்களாக காந்தியும் ஜெயபிரகாஷ் நாராயணனும் மட்டுமே இருந்தனர். தங்கள் முயற்சியால் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் பலனாகக் கிடைத்த அதிகாரத்தைப் புறக்கணித்தவர்கள் அவர்கள். சோனியா காந்தி, பால் தாக்கரே, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் அரசுப் பதவியில் இல்லாவிட்டாலும், அதிகாரம் அவர்கள் கையில்தான் இருந்தது. நேரடியாக ஆட்சியில் இல்லாத ஒருவரிடம் அதிகாரம் இருப்பது ஆபத்தானது. அது ஜனநாயக விரோதம்.

‘கட்சிக்கு ஒரு தலைவர்,
ஆட்சிக்கு ஒரு தலைவர்’

‘தேர்தல் முடிந்ததும் கட்சிப் பதவிகள் தேவையில்லை’ என்று ரஜினி சொல்வதும் இதே போன்ற ஜனநாயக விரோதச் செயலே! இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சி மட்டும்தான் பகுதிநேர தன்னார் வலர்களைப் பயன்படுத் துகிறது. ஆனாலும், அந்தக் கட்சியிலும் உட்கட்சி அமைப்புமுறை உள்ளது. நிர்வாகிகள் உள்ளனர். ‘கட்சிப் பதவிகளில் நிறைய பேர் இருப்பதால், அவர்கள் மூலமாக ஊழல் நடக்கிறது’ என்கிறார் ரஜினி. கட்சி நிர்வாகிகளை இல்லாமல் செய்வது அதற்குத் தீர்வு அல்ல! நேர்மையானவர் களை கட்சி நிர்வாகி களாக்குவதே தீர்வு. நிர்வாகிகள் இல்லா விட்டால், மக்களுக்கும் கட்சிக்குமான தொடர்பு அறுந்துவிடும்.

அரசியலில் மலிந்து விட்ட ஊழலும் முறைகேடுகளும்தான் அரசாங்கத்தில் எதிரொலிக்கின்றன. சிஸ்டத்தைச் சரிசெய்வதென்றால், வெறுமனே அரசை மட்டும் புனிதப்படுத்துவது அல்ல, அரசியல் கட்சியையும் சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா வைரஸைவிட மிக மோசமாகவும் ஆழமாகவும் பரவியிருக்கும் முறைகேடுகளைச் சுத்தம் செய்வதற்கு `அரசியல் சூப்பர்ஸ்டார்’ அவதாரமே தேவைப்படுகிறது.