Published:Updated:

நெருக்கடி... துரோகம்... சூழ்ச்சி... பதுங்குகிறேன்! - வி.கே.சசிகலா

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

அட்டை ஓவியம்: ந. சீனிவாசன்

நெருக்கடி... துரோகம்... சூழ்ச்சி... பதுங்குகிறேன்! - வி.கே.சசிகலா

அட்டை ஓவியம்: ந. சீனிவாசன்

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

‘அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் சசிகலா. வெறும் 25 வரிகளில் அவர் வெளியிட்ட அறிக்கை, தமிழகத் தேர்தல் கணக்குகளையே தலைகீழாக மாற்றியிருக்கிறது. அ.தி.மு.க அணி புது உற்சாகத்துடன் களமாடுகிறது. ‘வெற்றி சுலபம்’ என கூட்டணிக் கட்சிகளைத் தவிக்கவிட்டபடி இருந்த தி.மு.க திரும்பவும் இறங்கிவருகிறது. பல தலைவர்களின் தேர்தல் உத்திகளை மாற்றவைத்திருக்கிறார் சசிகலா. யாருமே எதிர்பார்க்காத இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

நெருக்கடி... துரோகம்... சூழ்ச்சி... பதுங்குகிறேன்! - வி.கே.சசிகலா

07.03.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘மன்றாடிய எடப்பாடி... மனம் மாறுவாரா அமித் ஷா... நள்ளிரவில் நடந்தது என்ன?’ என்ற தலைப்பில், அ.தி.மு.க - சசிகலா இணைப்பு தொடர்பாக பேசப்பட்ட விஷயங்களை எழுதியிருந்தோம். பிப்ரவரி 28-ம் தேதி இரவு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘தேர்தலில் ஜெயிக்க வேண்டும். நீங்க எல்லாரும் பேசிவிட்டுச் சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியதைக் குறிப்பிட்டிருந்தோம். அடுத்த 72 மணி நேரத்தில் நடைபெற்ற அரசியல் காய்நகர்த்தல்கள் எல்லாம் விறுவிறு ஹாலிவுட் பட சேஸிங் ரகம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நெருக்கடி... துரோகம்... சூழ்ச்சி... பதுங்குகிறேன்! - வி.கே.சசிகலா

நள்ளிரவு போன் கால்... ரூட் மாற்றிய பா.ஜ.க!

அமித் ஷா டெல்லி கிளம்பியதும், அ.தி.மு.க-வைச் சமரசத்துக்கு இணங்கவைக்க கடுமையாக முட்டி மோதியிருக்கிறது பா.ஜ.க. ஆனால், எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை. இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர், “பேச்சு வார்த்தையின்போது, ‘சசிகலா யாரு? இது எங்க கட்சி. இதுல அவங்களுக்கு என்ன வேலை... எதற்காக அவங்களை மறுபடியும் எங்க கட்சிக்குள்ள இணைச்சு, புது தலைவலியை நாங்க ஏத்துக்கோணும்? நம்ம கூட்டணியை வெற்றியடைய வைக்க வேண்டியது என் பொறுப்பு. இதுக்கு சரின்னா மட்டும் மேற்கொண்டு பேசலாம்’ என்று எடப்பாடி கூறியது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. சசிகலா இணைப்புக்கு அழுத்தம் திருத்தமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எடப்பாடி. அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் குழப்பத்தில் இருந்தபோதுதான், டெல்லியிலிருந்து மார்ச் 1-ம் தேதி அந்த போன் கால் வந்தது.

பிரதமருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து பேசினார்கள். ‘அமித் ஜி-யிடம் பிரதமர் பேசிக்கொள்வார். சசியை ஒதுங்கச் சொல்லிவிட்டு, கூட்டணியை இறுதி செய்வதற்கான பணியைப் பாருங்கள்’ என்றனர். சில நிமிடங்களில் இதே கருத்தை பா.ஜ.க டெல்லி தலைமையும் வலியுறுத்தியது. தனக்கிருந்த தொடர்புகள் மூலமாக, சசிகலா இணைப்பு விவகாரத்தை பிரதமரின் கவனத்துக்கு எடப்பாடி கொண்டுசென்றிருப்பது அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. அதன் பிறகு ரூட்டை மாற்றினோம்.

பா.ஜ.க நெருக்கடி... எச்சரித்த ஆடிட்டர்!

சசிகலா குடும்ப பிரமுகர் ஒருவரை ஆடிட்டர் குருமூர்த்தி அழைத்துப் பேசினார். ‘தம்பி... சசிகலாவை மீண்டும் இணைச்சுக்க அ.தி.மு.க தயாரா இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது என்கிற நோக்கத்துல, ஏதாவது பாதிப்பு ஏற்படும்னு பா.ஜ.க தலைவர்கள் நினைக்குறாங்க. தேர்தல் முடியும் வரைக்கும் சசிகலாவை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்க. தேர்தலுக்குப் பிறகு அவர் என்ன செய்யணும்னு நினைக்கிறாரோ, அதைச் செய்துகொள்ளட்டும்’’ என்று பக்குவமாகச் சொல்லிவிட்டார் குருமூர்த்தி.

அவரைத் தொடர்ந்து சசிகலா தரப்பைத் தொடர்புகொண்ட, பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், ‘உங்களுக்காக எவ்வளவோ வாதாடிப் பார்த்தோம். ஆனால், உங்களை மீண்டும் சேர்க்கவே கூடாதுனு எடப்பாடி ஒற்றைக் காலில் நிக்கிறாரு. அ.ம.மு.க தனியா நின்றால், ஓட்டுகள் சிதறி எங்கள் கூட்டணியின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தும்னு கட்சி நினைக்குது. அப்படி நடந்துதுன்னா, பின்விளைவுகளை நீங்கதான் சந்திக்க வேண்டியிருக்கும். பேசாமல் ஒதுங்கியிருங்க’ என்று நெருக்கடி கொடுத்தார். அதன் பிறகுதான் சசிகலாவின் மனவோட்டத்தில் மாறுதல் ஏற்பட்டது” என்றார்.

எடப்பாடியின் துரோகம்... தளர்ந்த சசிகலா!

பா.ஜ.க-வின் நெருக்கடியையும் தாண்டி, எடப்பாடி தந்த துரோகவலிதான் சசிகலாவை சுக்குநூறாக நொறுக்கி விட்டதாகக் கூறுகிறார்கள் மன்னார்குடி உறவுகள். நம்மிடம் பேசிய ஒருவர், “அவர் எடப் பாடியைத் தன் விசுவாசி என நம்பினார். பெங்களூரு சிறையில் இருந்தபோதுகூட, ‘பா.ஜ.க கொடுத்த நெருக்கடிகளை அக்காவாலேயே சமாளிக்க முடியலை. பழனிசாமி என்ன பண்ணுவாரு பாவம்? அவரை குத்தம் சொல்லாதீங்க’ என்று சொல்வார். பா.ஜ.க சொல்லித்தான் தன்னை எடப்பாடி ஒதுக்கி வைத்திருப்பதாக அவர் நம்பினார்.

ஆனால், அந்த நம்பிக்கை ஜனவரி 19-ம் தேதி தகர்ந்துவிட்டது. அன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி, ‘சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும், அவரை அ.தி.மு.க-வில் இணைக்க 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை’ என்று சொன்னார். பா.ஜ.க தலைமையிடம் பேசிவிட்டுத்தான் இப்படிச் சொல்வதுபோல அவர் தோற்றத்தை உருவாக்கினார். உண்மையில், அப்போது அவர் சசிகலா விவகாரம் பற்றி டெல்லியில் யாரிடமும் பேசவே இல்லை.

ஏதேதோ தொடர்புகளைப் பிடித்து அமித் ஷா வரை நாங்கள் நெருங்கினோம். ‘சசிகலாவை அ.தி.மு.க-வுடன் இணைத்துக்கொள்ளுங்கள்’ என்று அவர் வாயாலேயே சொல்லவைத்தோம். அப்போது, ‘சசிகலா யாரு?’ என்று அவர் கேட்டது சசியை வேதனைப்படுத்தி விட்டது. ‘டெல்லி சொல்லித்தான் தன்னைச் சேர்க்கவில்லை’ என நம்பிக்கொண்டிருந்தவர், ‘டெல்லியே சொல்லியும் தன்னைச் சேர்க்க மறுக்கிறார்கள்’ என்ற உண்மை புரிந்து நொறுங்கிவிட்டார்” என்றார்.

நெருக்கடி... துரோகம்... சூழ்ச்சி... பதுங்குகிறேன்! - வி.கே.சசிகலா

தினகரன் சூழ்ச்சி... குழப்பிய உறவுகள்!

பா.ஜ.க-வின் நெருக்கடி, எடப்பாடியின் துரோகம்... இடையே அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் செய்ததும் சசிகலாவை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டதாம். ‘‘சசிகலாவை அடித்தளமாகவைத்து அ.ம.மு.க என்ற கட்சியைக் கட்டமைத்த தினகரன், அவருக்குப் பின்னிய சூழ்ச்சிவலைகள் அதிகம்’’ என்று கொதிக்கிறார்கள் சசிகலாவுக்கு மிக நெருக்கமானவர்கள்.

அ.ம.மு.க மண்டலப் பொறுப்பாளர் ஒருவர், “2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், ‘உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை அ.தி.மு.க-வினருக்குப் புரியவைக்கிறேன். அந்த வெற்றிக்குப் பின் அ.தி.மு.க தானாக உங்கள் கையில் வரும்’ என்று நம்பவைத்துத்தான், தேர்தலுக்குத் தேவையான சகல உதவிகளையும் சசிகலாவிடமிருந்து தினகரன் பெற்றார். ஆனால், தேர்தலில் அ.ம.மு.க-வுக்கு கிடைத்தது வெறும் 5.8 சதவிகிதம் வாக்குகள்தான். இது, சசிகலாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தந்தது. ‘உன்னைப் பயன்படுத்திக்கொண்டு, தனக்கென ஒரு கட்சியை தினகரன் உருவாக்குகிறார். அவரை நம்பாதே’ என்று உறவுகள் எச்சரித்தன. கடந்த சில மாதங்களாகவே தினகரனுடன் சசிகலாவுக்கு சுமுகமான உறவு இல்லை.

பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு சசிகலா பயணமான போதுகூட, டாக்டர் வெங்கடேஷைத்தான் தன் அருகில் வைத்துக்கொண்டார். சென்னைக்கு வந்த பிறகும், பலமுறை தினகரன் தன்னைச் சந்திக்க வந்தபோதும்கூட, அவரை சசிகலா பார்க்கவில்லை. ஒரு பக்கம் அ.தி.மு.க-வுடன் இணைப்புக்காக குடும்ப உறுப்பினர்கள் சிலர் டெல்லியில் பேசிவந்த நேரத்தில், ‘அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமையும்’ என்று தினகரன் தொடர்ந்து பேசி, இணைப்பு நடக்கவிடாமல் தடுத்தார்’’ என்றார்.

வெடித்த பஞ்சாயத்து... மனம் மாற்றிய கடிதம்!

அரசியலில் நீர்த்துப்போய்விடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது அறிக்கைகள்விட்டும், சில அரசியல் பிரபலங்களைச் சந்தித்தும் அதிர்வைக் கிளப்பிவந்தார் சசிகலா. அவரைத் தமிழகம் முழுக்க பிரசாரத்துக்கு வருமாறு தினகரன் அழைத்தார். சசிகலாவுக்கு இதில் விருப்பம் இல்லை. ‘‘பிரசாரத்துக்குப் போனால் என்ன பேசுவது... அக்கா வளர்த்த கட்சிக்கு எதிராக நான் எப்படிப் பேச முடியும்... இரட்டை இலைக்கு எதிராக ஓட்டுக் கேட்டுவிட்டு வந்து நான் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும்?” என்று தினகரனிடம் சீறியிருக்கிறார் சசிகலா.

இந்தத் தேர்தலில் அமைதியாக இருப்பதே தன்மீதான அச்சத்தைத் தக்கவைக்கும் என்பது அவர் கணக்கு. இந்தச் சூழலில்தான் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் சார்பில் சசிகலாவுக்கு ஒரு தகவல் வந்தது. ‘இந்தத் தேர்தலுக்கு நீங்க எங்ககூட இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம்மா. ஆனால், முதல்வர் லாபி உங்களை உள்ளேவிட மாட்டேங்குது. நீங்க நீதி கேட்டு பிரசாரம் செஞ்சா, அது தி.மு.க-வுக்கு ஆதரவாக மாறிடும். இங்கே பெரும்பான்மையா இருக்கற நம்ம சமூக வாக்குகளில் பெரும்பங்கு அ.ம.மு.க-வுக்குப் பிரிஞ்சு போயிடும். இதனால, அ.தி.மு.க-வுல இருக்குற உங்க தென்மாவட்ட விசுவாசிகள் யாரும் ஜெயிக்க முடியாது. நீங்க விலகி இருந்தால்தான், நாங்க ஜெயிக்க முடியும். வெற்றி பெற்றால்தான் உங்களுக்காக அ.தி.மு.க-வுக்குள்ள நாங்க குரல் கொடுக்க முடியும். நாங்க தோக்குறதுக்கு எடப்பாடி காய்நகர்த்துறார். அந்த சூழ்ச்சி தெரிஞ்சும் தினகரன் தன்னோட சுயலாபத்துக்காக எங்களை பலிகடா ஆக்குறார். நீங்க அதுக்குத் துணை போகாதீங்கம்மா. கட்சி தோற்றுப்போனா, உங்க மேல மொத்தப் பழியும் வந்துடும்’ என்று உருக்கமாகக் கூறியிருந்தனர்.

பா.ஜ.க-வின் நெருக்கடி, எடப்பாடியின் துரோகம், தினகரனின் சூழ்ச்சி என்று மும்முனைத் தாக்குதலில் சிக்கியிருந்த சசிகலாவை, இந்தத் தகவல் ரொம்பவே உலுக்கிவிட்டது. விரக்தியின் உச்சியில், ‘‘இன்னும் ஒரு வருஷம் நான் ஜெயில்லயே இருந்திருக்கலாம்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னாராம். அதன் பிறகே அவருக்கு அறிக்கை ஐடியா வந்திருக்கிறது.

நெருக்கடி... துரோகம்... சூழ்ச்சி... பதுங்குகிறேன்! - வி.கே.சசிகலா

முதல் அறிக்கையும் தினகரனால் வந்த திருத்தமும்!

சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் சசிகலாவின் அறிக்கைகளெல்லாம் எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன், அ.தி.மு.க கொடியுடன், `கழகப் பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம்’ என்ற அடையாளத்துடன்தான் வெளிவந்தன. ஆனால், முதன்முறையாக வெறும் தாளில் ‘செய்திக் குறிப்பு’ என சசிகலாவின் கையெழுத்துடன் வெளியாகியிருப்பது, ‘அரசியல் ஒதுங்கல்’ அறிக்கைதான்.

முதலில், ‘இந்தத் தேர்தலில் நான் ஒதுங்கி இருக்கப்போகிறேன்’ என்ற வாசகத்துடன் மட்டுமே இந்த அறிக்கை தயாராகியிருக்கிறது. விஷயம் தெரிந்து தினகரன், பதறியடித்துக்கொண்டு தி.நகரில் சசிகலா தங்கியிருக்கும் கிருஷ்ண ப்ரியாவின் வீட்டுக்கு வந்திருக்கிறார். சுமார் அரை மணி நேரம் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் நடைபெற்றிருக்கிறது. ‘இந்தத் தேர்தலில் ஒதுங்கிவிடுவோம். நிலைமை சரியில்லை’ என்று சசிகலா கூறியதை தினகரன் ஏற்கவில்லை என்கிறார்கள். ஒருகட்டத்தில், ‘‘ஒதுங்குவதாக இருந்தால் நீங்கள் ஒதுங்கி இருந்துவிடுங்கள். இது என் கட்சி, நான் நடத்திக்கொள்கிறேன்’’ என தினகரன் கூற, சசிகலா ஷாக் ஆகிவிட்டாராம். கிட்டத்தட்ட எடப்பாடி சொன்ன அதே வார்த்தைகளை தினகரனும் சொன்ன அதிர்ச்சி யிலிருந்து சசிகலாவால் மீள முடியவில்லை. உடனடியாக, ‘நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருக்கிறேன்’ என்ற வாசகத்தைச் சேர்த்து அறிக்கையை வெளியிடச் சொல்லிவிட்டார்.

ஒதுங்கலா... பதுங்கலா?

சசிகலாவின் இந்த அறிக்கையே ஒரு புதிரைப் போட்டிருக்கிறது. அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாகத்தான் அறிவித்திருக்கிறாரே தவிர, விலகியிருப்பதாகச் சொல்லவில்லை. இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர், “இப்போதைக்கு பா.ஜ.க-வின் மறைமுகத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கத்தான் ஒதுங்கியிருப்பதாக சசிகலா அறிவித்திருக்கிறார். ரஜினிபோல அரசியலுக்கு முழுக்குப் போடவில்லை. தேர்தலுக்குப் பிறகு தனக்கான வாய்ப்பு அமையும் என்று காத்திருக்கிறார். ஜெ. மறைவுக்குப் பிறகு எப்படி மூத்த நிர்வாகிகள் சசியைச் சந்தித்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றார்களோ, அதேபோல் சிலரை சசிகலாவின் ஸ்லீப்பர் செல்கள் கேட்கவைப்பார்கள். தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டு, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்குச் செல்லும் திட்டம் சசிகலாவிடம் இருக்கிறது. அங்கேயிருந்து சென்னை வரை பேரணி நடத்தவிருக்கிறார். இது மிகப்பெரிய பிரளயத்தைக் கட்சிக்குள் உருவாக்கும். தேர்தலுக்கு முன்பாக என்னவெல்லாம் செய்ய நினைத்திருந்தாரோ, அவை அனைத்தையும் தேர்தலுக்குப் பிறகு செய்வார். ஒதுங்குவது பதுங்கிப் பாய்வதற்காக மட்டுமே!” என்றார்.

சசிகலா ஒதுங்குவது வேட்டைக்கா அல்லது ஓய்வுக்கா என்பது மே 2-ம் தேதி தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகுதான் தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism