Published:Updated:

சூடாகும் ஆடுகளம்! - ரெய்டு... யாத்திரை... கலகம்... எஸ்கேப்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

ரெய்டு அஸ்திரம்... தூக்கம் தொலைத்த அ.தி.மு.க!

பிரீமியம் ஸ்டோரி

டகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இந்த மழையையும் தாண்டி தமிழகத்தில் தேர்தல் ஆடுகளம் சூடுபிடித்துவிட்டது. தி.மு.க-வில் மாவட்டப் பிரிப்புகள், மாவட்டச் செயலாளர் மாற்றங்கள் எனக் கட்சியைக் கலைத்துப்போட்டு ஆடும் சதுரங்கக் காட்சிகளால் கோஷ்டித் தகராறுகள் வெடிக்கத் தொடங்கியிருக் கின்றன. மறுபக்கம் ஆளுங்கட்சியைக் குறிவைத்து, நடத்தப்படும் ஐ.டி ரெய்டுகளில் அனல் பறக்கின்றன.

இன்னொரு முனையில், தனது வழக்கமான ‘யாத்திரை’ யுக்தியைக் கையிலெடுத்து தமிழகத்தில் ‘யுத்தம்’ செய்யக் காத்திருக்கிறது பா.ஜ.க. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான முருகன், பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6-ம் தேதியில் ‘வெற்றிவேல்’ யாத்திரையை நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கும் நிலையில், ‘யாத்திரையில் என்னவெல்லாம் நடக்குமோ?’ என்று அச்சத்துடன் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இவர்களுக்கு நடுவே ‘நான் வருவேனா... வர மாட்டேனா?’, ‘அறிக்கையில் சொன்னது நான்தானா?’ என்கிறரீதியில் குறுக்கும் நெடுக்குமாக, போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருக்கிறார் ரஜினி!

சூடாகும் ஆடுகளம்! - ரெய்டு... யாத்திரை...  கலகம்... எஸ்கேப்...

ரெய்டு அஸ்திரம்... தூக்கம் தொலைத்த அ.தி.மு.க!

அக்டோபர் 28-ம் தேதி, மதியம் 3 மணி. மருத்துவ நிபுணர்களுடன் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா முன்தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். திடீரென அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. பதறியடித்துக்கொண்டு கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிய எடப்பாடி, நேராகத் தனது அலுவலக அறைக்குள் சென்று யாரிடமோ பதற்றத்துடன் பேசினாராம். அன்று முழுவதும் அவர் முகம் வாட்டமாகவே இருந்திருக்கிறது. அன்று மாலை தன் உதவியாளர் திருமண விழாவுக்காக சென்னை வந்திருந்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, மனம்விட்டுப் பேசியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, நெடுஞ்சாலைத்துறையில் முதல்வர் மீதிருக்கும் வழக்குகள் தொடர்பாகவும் பேசப்பட்டதாம். அன்றைய தினம் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு, ஆளும்தரப்பைக் கலங்கடித்து விட்டது என்கிறது கோட்டை வட்டாரம்.

கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையால், அதிகம் அரண்டுபோயிருக்கிறது ஆளும்கட்சி. இரண்டு மாதங்களுக்கு முன்னர், வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் இல்லத் திருமணவிழா சென்னையில் நடைபெற்றது. இதில், டெல்லியி லிருந்து வந்த சில உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, சில முக்கியப் புள்ளிகள் பற்றிய விவரங்களை டெல்லி தரப்பு கேட்டறிந்ததாம். அதன் தொடர்ச்சியாக, பத்து நாள்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்திலுள்ள ஆயக்கர் பவனுக்கு சில குறிப்புகள் டெல்லியிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்புக்குமே செக் வைக்கும்விதத்தில் சோதனைப் பட்டியல் இருந்ததால், சில நேர்மை யான அதிகாரிகள் மட்டுமே அந்த குறிப்புகளின் அடிப்படையில் ரெய்டை நடத்தியிருக்கிறார்கள்.

சூடாகும் ஆடுகளம்! - ரெய்டு... யாத்திரை...  கலகம்... எஸ்கேப்...

மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியங்களில் அரசு ஒப்பந்ததாரராக இருக்கும் சத்தியமூர்த்தியின் நாமக்கல் வீட்டிலிருந்து, பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ள வருமான வரித்துறை, ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி அதிபர் சண்முகத்தின் வீடு, பள்ளி, கல்லூரிகளிலும் சல்லடை போட்டது. “அமைச்சர்கள் பலரின் பணம் சண்முகத்தின் கல்லூரியில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். 150 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள், ஐந்து கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆளும்தரப்பில் பெரிய மீன்கள் சிக்குவதற்குத் தூண்டில் போட்டிருக்கிறோம். ஒருவரும் தப்ப முடியாது” என்று கண்சிமிட்டுகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

தி.மு.க கோவை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா கவுண்டர், அ.தி.மு.க-வுடன் தொழில்ரீதியாக நெருக்கம் காட்டுவதை உறுதி செய்துகொண்ட பிறகே அவர்மீதும் ரெய்டு அஸ்திரம் ஏவப்பட்டதாம். இந்த திடீர் ரெய்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பிரமுகர் ஒருவரும், உச்சத் தலைமைப் பிரமுகர் ஒருவரும் மிரட்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனவரிக்குள் ஐந்து அமைச்சர்களைக் குறிவைத்து அஸ்திரம் ஏவப்போவதாக பா.ஜ.க தரப்பு பரப்பிவிடும் கதைகள் உண்மையாக இருக்குமோ எனத் தூக்கத்தை தொலைத்திருக்கிறார்கள் கிரீன்வேஸ் சாலைவாசிகள் சிலர்.

‘வெற்றிவேல்’ யாத்திரை! - யுத்தம் செய்யப்போகிறதா பா.ஜ.க?

நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்கும் பா.ஜ.க தலைவர் எல்.முருகன், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நாளான டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார். முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தையும் தொட்டுச் செல்லும் வகையில் இந்த யாத்திரையின் பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், ‘இதில் பா.ஜ.க முக்கியத் தலைவர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்’ என வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை தொடர்பாக, கடந்த வாரம் பெருந்துறையில் நடந்த 12 மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. ‘தி.மு.க-வை மையமாகவைத்து விமர்சனங்கள் இருக்க வேண்டும். யாத்திரைப் பயணத்தின் நடுவே தி.மு.க-விலிருந்து ஏராளமானோரை பா.ஜ.க-வில் சேர்க்க வேண்டும்’ என்று கூட்டத்தில் முடிவெடுத்தி ருக்கிறார்கள்.

யாத்திரையின்போது திருமாவளவனின் மனு சாஸ்திரம் தொடர்பான பேச்சை முன்வைத்து, ‘இந்துப் பெண்களை இழிவுப்படுத்திவிட்டார் திருமாவளவன். தி.மு.க-வும் இதற்கு உடந்தை. அவர்களை அப்புறப்படுத்துவதற்கான போராட்டத்தில் மானமுள்ள இந்துக்கள் கைகோக்க வேண்டும்’ என்கிறரீதியில் வார்த்தைத் தீயைப் பற்றவைத்து, பெரும் யுத்தத்தையே நடத்தத் தீர்மானித்திருக்கிறதாம் முருகன் தரப்பு.

ஆனால், தமிழக பா.ஜ.க-விலேயே மூத்த தலைவர்கள் சிலரோ, “யாத்திரைகளை முன்வைத்து அரசியல் செய்துதான் பா.ஜ.க வளர்ச்சி அடைந்தது. அதை மறுப்பதற்கில்லை. 1990, செப்டம்பரில் அத்வானி முன்னெடுத்த ராமர் ரத யாத்திரையே இதற்கு உதாரணம். அதுமட்டுமல்ல... 2011-ல் காஷ்மீர், நகரில் ‘ராஷ்ட்ரிய ஏக்தா’ யாத்திரையை மேற்கொள்ள முயன்ற அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் காஷ்மீர் எல்லையிலேயே தடுக்கப்பட்டு, கைதாகினர். 2017-ல் கேரளாவில் அமிஷ் ஷா தொடங்கிவைத்த ‘ஜன ரக்‌ஷா’ யாத்திரையில் உத்தரப்பிரதேச முதல்வர் உட்பட ஐந்து மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டார்கள்.

அதுபோன்ற யாத்திரைகளின்போது மக்களின் மத உணர்வை முன்வைத்து பிரசாரம் செய்யும் யுக்தி வடமாநிலங்களில் வேண்டுமானால் எடுபடலாம். ஆனால், தமிழகத்தில் களநிலவரமே வேறு. இங்கு மதம், கலாசாரம், மொழி, கடவுளர்கள் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, யாத்திரைகளை முன்வைத்து அரசியல் செய்வது இங்கு எடுபடாது. அந்த விஷயத்தில் மக்கள் ஏமாறமாட்டார்கள். முருகன் இதை உணர வேண்டும்” என்கிறார்கள்.

யாத்திரையை முன்வைத்துப் பேசும் அரசியல் பார்வையாளர்களோ, “ரத யாத்திரையை நிறைவு செய்ய இவர்கள் திட்டமிட்டிருக்கும் டிசம்பர் 6-ம் தேதியே பிரச்னைக்குரிய நாளாக இருக்கிறது. போதாக்குறைக்கு, ‘யாத்திரையில் பா.ஜ.க-வின் முக்கியமான தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது’ என்று அறிவுறுத்தியிருப்பதிலும் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் அச்சப்படுகிறோம். தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்து ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. கொரோனா ஊரடங்கு, வேலையிழப்பு என வாழ்வாதாரங்கள் நசிந்துபோயிருக்கும் சூழலில், அது சார்ந்த மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல், மதத்தை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் இது போன்ற யாத்திரைகளின்போது மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்” என்றார்கள் எச்சரிக்கும் தொனியில்.

சூடாகும் ஆடுகளம்! - ரெய்டு... யாத்திரை...  கலகம்... எஸ்கேப்...

எம்.ஜி.ஆர் அரசியல்!

இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் வீடியோவில் எம்.ஜி.ஆர் படம் இடம்பெற்றிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. “எம்.ஜி.ஆர் போலவே மோடியும் நல்லது செய்துவருகிறார். பெண்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆதரவு மோடிக்கும் இருக்கிறது” என்று பா.ஜ.க தலைவர் முருகன் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க கட்சியே எம்.ஜி.ஆரை மறந்துபோன சூழலில், முருகன் இவ்வாறு பேசவும் திடுக்கென தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டனர் அ.தி.மு.க-வினர். “எம்.ஜி.ஆர் புகைப்படத்தை அ.தி.மு.க-வைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது” என்று பதிலுக்கு உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார் அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன்.

பூசலைத் தீர்க்குமா பதவி மாற்றம்?

தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப்பூசலைச் சரிக்கட்ட, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற சமரச சாமரத்தைக் கையிலெடுத்திருக்கிறது அறிவாலயம். தேனி மாவட்டத்தை இரண்டாக வகுந்து, கம்பம் செல்வேந்திரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் பந்தியைப் பகிர்ந்தளித்திருக்கிறது கட்சித் தலைமை. பெரிய விருந்தையே எதிர்பார்த்திருந்து காத்திருந்த முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் எம்.ஜெயக்குமாருக்குப் பந்திக்கு அழைப்புகூட விடுக்கப்படவில்லை. அதிருப்தியின் உச்சத்திலிருக்கும் அவர் எப்போது பந்தலைக் கிழிப்பார் என்று தெரியவில்லை!

தருமபுரி மாவட்டத்தில் தடங்கம் சுப்ரமணிக்கும் இன்பசேகரனுக்கும் இடையிலான கோஷ்டிச் சத்தம் தலைநகரம் வரை தலை கிறுகிறுக்கவைக்கிறது. தடங்கம் சுப்ரமணிக்கு ஆதரவாக மாவட்டத்தைப் பிரிக்கலாம் என்று கட்சித் தலைமை முடிவெடுக்க... கிச்சனிலிருந்து பலமாகக் கேட்டது கரண்டிச் சத்தம். அப்படியே யூ டர்ன் போட்டு பின்வாங்கிவிட்டது தலைமை. இப்போது வேறு வழியில்லாமல் இன்பசேகரனை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது தலைமை.

திருநெல்வேலி மாவட்டத்தில், ஆவுடையப்பனின் மகன் பிரபாகரனை மாவட்டப் பொறுப்பாளராக்க முடிவெடுத்திருக்கிறது தலைமை. “இது என்ன மன்னராட்சியா... ஆலங்குளம், அம்பாசமுத்திரத்தில் இவர்கள் ராஜ்ஜியம்தான் இருக்க வேண்டுமா? அப்படி யென்றால், ஆவுடையப்பனுக்கு உயர்மட்டக்குழுவில் இடமளிக்கக் கூடாது” என்று இப்போதே அனல் தெறிக்கவிடுகிறது ஆவுடையப்பனின் எதிர் கோஷ்டி.

திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப்பை பொறுப்பிலிருந்து நீக்கியே தீர வேண்டுமென்று, அவருக்கு எதிர்கோஷ்டியான துரை மற்றும் மொய்தீன்கான் தரப்பினர் முஷ்டியை முறுக்குகிறார்கள். “பாளையங்கோட்டை தொகுதியில் சிறுபான்மையினர் அதிகமாக உள்ளனர். தி.மு.க சார்பாக யார் போட்டியிட்டாலும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பது உறுதி. இந்த முறையும் மொய்தீன்கானே இந்தத் தொகுதியில் போட்டியிட்டால், கண்டிப்பாக ஜெயித்து அமைச்சராகிவிடுவார். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் தரமாட்டோம்” என்று வாள்வீசுகிறது அப்துல் வஹாப் கோஷ்டி.

சூடாகும் ஆடுகளம்! - ரெய்டு... யாத்திரை...  கலகம்... எஸ்கேப்...

திருப்பூர் கிழக்கு மாவட்டத்துக்கு சாமிநாதனை பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள். அதேநேரம், சாமிநாதன் எதிர்பார்க்கும் காங்கேயம் தொகுதியை வேறொருவருக்கு ஒதுக்க உதயநிதி தரப்பு காய்நகர்த்துகிறது. இதனால் சாமிநாதன் கடும் அப்செட் என்கிறார்கள். ஆலங்குளம் தொகுதியை பூங்கோதை ஆலடி அருணாவுக்கு ஒதுக்கக் கூடாது என்று செனடாப் சாலையில் பட்டிமன்றமே நடக்கிறது.

கோவை மாவட்ட சீனியரான பொங்கலூர் பழனிசாமியிடம் அவருக்கு சீட் கிடைப்பதும் கஷ்டம் என்பதை மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறது தலைமை. “கட்சியை வளர்த்தது நான். கடைசியில் எனக்கு எதிரானவர்களுக்கே பதவியைக் கொடுத்து என்னை ஒரங்கட்டப் பார்க்கிறார்களா? இதை சும்மாவிட மாட்டேன்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கர்ஜித்திருக்கிறார் அவர்.

மேற்கண்ட மாவட்டங்களில் மட்டுமல்ல... ராமநாதபுரத்தில் சுப.த.திவாகரன், நாமக்கல் மேற்கில் ஜி.செல்வராஜ், சேலத்தில் வீரபாண்டி ராஜா, ஈரோட்டில் என்.கே.கே.பி.ராஜா, கிருஷ்ணகிரியில் மதியழகன், திருவள்ளூர் கிழக்கில் சி.ஹெச்.சேகர் எனப் பலரும் மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிக் கலகம் உச்சத்தில் இருப்பதால், விழிபிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.

இந்தப் பிரச்னைகளெல்லாம் போதாதென்று, கட்சிப் பதவிக்குப் பணம் பெறுவதாக வரும் குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி எம்.பி சீட்டுக்கு ஞானதிரவியமும் கிரஹாம் பெல்லும் மோதினார்கள். கட்சிக்கு நிதியளித்து சீட் வாங்கி ஜெயித்துவிட்டார் ஞானதிரவியம். ஆனால், கிச்சன் கேபினெட்டை வெயிட்டாக கவனித்த கிரஹாம் பெல் வெறும் கையோடுதான் திரும்பினார். இதைச் சரிக்கட்ட கிரஹாம் பெல்லுக்குத் தற்போது நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்க முடிவெடுத்திருக்கிறதாம் கட்சித் தலைமை. இதற்கிடையே, முன்னணித் தலைவர் ஒருவருக்கு இரண்டு பெரிய ஸ்வீட் பாக்ஸைக் காணிக்கையாகக் கொடுக்க கிரஹாம் பெல் சம்மதித்ததாகவும், முதற்கட்டமாக 60 ஸ்வீட்கள் அடங்கிய பெரிய பாக்ஸ் சென்றுவிட்டதாகவும் பரவும் தகவல் திருநெல்வேலி அரசியலை தகிக்கவைத்திருக்கிறது. இது ஓர் உதாரணம்தான். சிறிதாகவும் பெரியதாகவும் கரன்ஸி பிரச்னைகள் பற்றி அறிவாலயத்தில் அன்றாடம் குவிகின்றன புகார்கள்!

“எவன் பார்த்த வேலைடா இது...” - கிரேட் எஸ்கேப் ரஜினி!

தமிழக அரசியல் களம் இவ்வளவு சூடேறிக்கிடக்க... ‘என் பெயரில் வந்த அறிக்கை பொய். ஆனால், அதில் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை’ என்று ட்வீட் தட்டியிருக்கிறார் ரஜினி. இதை முன்வைத்து, “ரகசியமா வெச்சிருந்த தகவல்களெல்லாம் எப்படி வெளியே போச்சு... எவன் பார்த்த வேலைடா இது?” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் ரஜினி.

ஏற்கெனவே, ஒரு மாதத்துக்கு முன்பாக, ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்கிறரீதியில் ரஜினி தயார்செய்து வெளியிடாமல் வைத்திருந்த அறிக்கையை முன்வைத்து, தமிழகத்தில் கராத்தே தியாகராஜன், தமிழருவி மணியன் மற்றும் திராவிடக் கட்சிகளில் ‘போணி’யாகாத தலைவர்கள் என ஒரு படையே பெரும் கனவில் காத்திருந்தது. இப்போது தன் ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உட்பட தன்னை நம்பிக் காத்திருந்த அனைவரின் கனவிலும் மண் அள்ளிப் போட்டிருக்கிறார் ரஜினி.

கடந்த 1996-ம் ஆண்டிலிருந்தே அரசியல் பட்டாசைக் கொளுத்துவதும், பிறகு ஏதாவது ஒரு காரணம் சொல்லி அது வெடிக்கப் போகும்போது தண்ணீர் ஊற்றி அணைப்பதுமாக தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார் ரஜினி. பாவம், இவரை நம்பி முதலீடு செய்தவர்கள்தான், பரிதாப நிலையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “மணியான அமைச்சர்கள் இருவர் கூலான அரசியல் பிரமுகர் மூலம் ரஜினியிடம் சில அரசியல் டீல்களைப் பேசினர். அப்போது ரஜினி எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை. இப்போதும், அதே கூலான பிரமுகர்தான் ரஜினியைக் குழப்பிவருகிறார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஜனவரிக்குள் அவர் வருவார் என்றும் நம்புகிறோம்” என்றனர்.

அரசியல் கட்சிகள் பலவும் பட்டாசு திரியைப் பற்றவைத்துள்ளன. அநேகமாக தீபாவளிக்கு முன்னதாகவே வெடிக்கத் தொடங்கும் ஆயிரம் வாலா வெடிகள், மே மாதம் வரை தீப்பொறியைப் பறக்கவிடலாம். அரசியல் தீபாவளி ஸ்டார்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு