Published:Updated:

பதறும் தி.மு.க... திணறும் அ.தி.மு.க... மிரளும் இதர கட்சிகள்... உள்ளாட்சி உச்சகட்டம்!

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

“ஆட்சி அமைந்து என்ன பலன்?” - குமுறும் தி.மு.க தொண்டர்கள்!

பதறும் தி.மு.க... திணறும் அ.தி.மு.க... மிரளும் இதர கட்சிகள்... உள்ளாட்சி உச்சகட்டம்!

“ஆட்சி அமைந்து என்ன பலன்?” - குமுறும் தி.மு.க தொண்டர்கள்!

Published:Updated:
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசிய பேச்சுதான் தேர்தல் களத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில், செப்டம்பர் 28-ம் தேதி தி.மு.க நிர்வாகிகளிடையே பேசிய துரைமுருகன், “எத்தனை காலத்துக்கு துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன் பிறகு எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம். இனிமேல் அப்படிப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கட்சிக்கு துரோகம் செய்பவர்கள், கட்டம்கட்டித் தூக்கி எறியப்படுவார்கள்” என்று சீறினார். இந்தச் சீற்றத்தின் பின்னணியில், கட்சிக்குள் நிலவும் பதற்றமும் முக்கியக் காரணமாக முன்வைக்கப்படு கிறது. இதுவொரு பக்கமென்றால், நிதிநிலை கையைக் கடிப்பதால் திண்டாடுகிறது அ.தி.மு.க. தனித்துக் களமிறங்கிய கட்சிகளோ வேட்பாளர்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் மிரண்டுபோய் நிற்கின்றன. அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் சூடு உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது!

பதறும் தி.மு.க... திணறும் அ.தி.மு.க... மிரளும் இதர கட்சிகள்... உள்ளாட்சி உச்சகட்டம்!

பதற்றத்தில் தி.மு.க!

ஆளுங்கட்சி என்கிற ‘பவர்’ இருப்பதால் ஒருபக்கம் தெம்பாக இருந்தாலும், இரண்டு காரணங்களுக்காக தி.மு.க-வில் தடுமாற்றமான சூழல் நிலவுகிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகித வெற்றியை முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். ஆளுங்கட்சியாக இருப்பதால், தேர்தலைச் சந்திப்பதில் நிதிச் சிக்கல் ஏதுமில்லை. வெற்றியை அடைவதற்கு உண்டான பலத்தோடுதான் தி.மு.க-வும் இருக்கிறது. ஆனால், தடுமாற்றத்துக்கான முதல் காரணம், வேட்பாளர் சீட் கிடைக்காதது, தங்களை மீறி யாரும் வளர்ந்துவிடக் கூடாதென முட்டுக்கட்டை போடுவது, பிரசாரத்துக்குள் குழப்பத்தை விளைவிப்பது, கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததால் அவர்கள் தேர்தல் வேலை பார்க்காமல் இருப்பது... எனப் பல்வேறு குளறுபடிகளைக் கட்சிக்கு எதிராகவே சில தி.மு.க நிர்வாகிகள் செய்வதால், வெற்றிக்கான இலக்கை அடைவது கடினமாகியிருக்கிறது.

உதாரணத்திற்கு, காட்டாங்குளத்தூர் ஒன்றியச் சேர்மன் பதவிக்கு கே.எஸ்.ரவிக்கும், அருள்தேவிக்கும் இடையே தி.மு.க-வுக்குள் கடுமையான போட்டி நடைபெறுகிறது. ரவிக்கு காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆறாமுதனும், அருள்தேவிக்கு காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் தண்டபாணியும் ஆதரவாக இருக்கிறார்கள். ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றிபெற்றால்தான், ஒன்றிய சேர்மனாக முடியும் என்பதால், ரவி கவுன்சிலராகக்கூட தேர்வாகிவிடக் கூடாதென அவருக்கு எதிராக தண்டபாணி டீம் உள்ளடி வேலை பார்க்கிறது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், 18-வது வார்டில் தி.மு.க வேட்பாளராக எழில்வாணன் போட்டியிடுகிறார். மறைந்த அமைச்சர் ஆலடி அருணாவின் மகனான இவருக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் பதவியை அளிக்க கட்சித் தலைமையும் தீர்மானித்திருக்கிறது. இது பிடிக்காத எழில்வாணனின் சொந்தச் சகோதரியும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை, எழில்வாணனுக்கு எதிராக இரண்டு வேட்பாளர்களைச் சுயேச்சைகளாகக் களமிறக்கியிருக்கிறார். இதுபோக எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு மறைமுகமாக உதவுகிறது பூங்கோதைத் தரப்பு. ஒன்றிய கவுன்சிலராக எழில்வாணன் வெற்றிபெறக் கூடாது என்பதில் தீவிரமாக அரசியல் செய்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில், தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக மானூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அருள்மணி போட்டி வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார். இது பற்றி மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்புக்குத் தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இவையெல்லாம் சிறிய உதாரணங்கள்தான்.

“ஆட்சி அமைந்து என்ன பலன்?” - குமுறும் தி.மு.க தொண்டர்கள்!

இரண்டாவது காரணம், ஆட்சியமைந்ததிலிருந்து எந்தவிதமான ‘பலாபலனும்’ கிடைக்காத தொண்டர்கள் சுணங்கிப்போயிருக்கிறார்கள். ஒன்பது மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, சமீபத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலுவிடம், ‘எங்க குறையை யார் கேக்குறீங்க? கட்சிக்காரங்க ஏதாவது கோரிக்கையோட வந்தா விரட்டிவிடுறீங்க. தேர்தல் வரும்போது மட்டும்தான் உங்க கண்ணுக்கு நாங்க தெரியுறோம். இதுவரை ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை எந்த அமைச்சர்கள் நிறைவேற்றியிருக்காங்க, சொல்லுங்க?’ என்று பிடிபிடியென பிடித்திருக்கிறார்கள் தொண்டர்கள். அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குள் வேலு திண்டாடிவிட்டார். கள்ளக்குறிச்சியில் தன் ஆதரவாளரான வசந்தம் கார்த்திகேயனின் கை ஓங்குவதற்காகவே, அந்த மாவட்டப் பொறுப்பை வேலு கேட்டுப் பெற்றிருக்கிறார். ஆனால், பொன்முடியின் ஆதரவாளர்கள் தேர்தல் வேலை செய்ய மறுப்பதால், கள்ளக்குறிச்சி தி.மு.க திண்டாடுகிறது.

திருநெல்வேலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘கூட்டுறவு சொசைட்டிகளில்கூட இன்னமும் அ.தி.மு.க-வினர்தான் பதவியில் இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியமைந்து கட்சிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கிறது?’ என்று அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தொண்டர்கள் குமுறியிருக்கிறார்கள். அதற்கு பெரியசாமி, ‘என்கிட்ட ஏம்ப்பா சொல்றீங்க? நான் சொல்லி கேக்குற நிலைமையிலா சூழல் இருக்குது?’ என்று தன் ஆற்றாமையை அவர்களிடம் வெளிப்படுத்தி யிருக்கிறார். இவையெல்லாம் சிறு உதாரணங்கள் தான். ஒருபக்கம் உள்ளடி வேலை, மறுபக்கம் சுணங்கிப்போயிருக்கும் தொண்டர்கள்... இந்தக் காரணங்களால் தி.மு.க-வினரிடையே ‘100 சதவிகித வெற்றியை எட்ட முடியுமா?’ என்கிற பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. ‘வெற்றியை ஈட்டித் தரவில்லையென்றால் கட்சிப் பதவி காலியாகிவிடுமோ’ என்ற கூடுதல் பதற்றத்திலிருக்கிறார்கள் நிர்வாகிகள். இந்தப் பதற்றங்களைத் தணிக்க அறிவாலயம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்” என்றனர்.

பதறும் தி.மு.க... திணறும் அ.தி.மு.க... மிரளும் இதர கட்சிகள்... உள்ளாட்சி உச்சகட்டம்!

‘‘காசைப் பார்க்கவே முடியலை!’’ - திண்டாடும் அ.தி.மு.க!

உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில், ஆளுங்கட்சி வேகத்தில் பாதிகூட அ.தி.மு.க நிர்வாகிகளிடம் இல்லை. கூட்டணியிலிருந்த பா.ம.க-வும் தனித்துக் களமிறங்கிவிட்டதால், வடமாவட்டங்களில் தி.மு.க-வுக்கு நிகராக ‘டஃப் ஃபைட்’ கொடுக்க முடியாமல் அ.தி.மு.க திண்டாடுகிறது. பா.ஜ.க-வினர் தென் மாவட்டங்களில் மட்டும் கவனம் செலுத்துவதால், வடமாவட்டங்களில் அவர்களால் அ.தி.மு.க-வுக்குப் பெரிய லாபம் இல்லை. இதற்கெல்லாம் மேலாக, தேர்தல் செலவுகள் கையைக் கடிக்கின்றன என்று புலம்புகிறது அ.தி.மு.க வட்டாரம். நம்மிடம் பேசிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் சிலர், “ஆளும் கட்சி நல்லா செலவு செய்யறாங்க. ஒவ்வொரு அமைச்சரும் ஆலோசனைக் கூட்டம் போடும்போது, நிர்வாகிகளுக்கு தாராளமாக ஸ்வீட் பாக்ஸ் தர்றாங்க. காங்கிரஸ் கட்சியில்கூட ஒரு ஒன்றிய கவுன்சிலருக்கு 50,000 ரூபாய் வரை தேர்தல் செலவுக்குக் கொடுத்திருக்காங்க. ஆனால், அ.தி.மு.க-வுல மட்டும்தான் காசைக் கண்ணுல பார்க்கவே முடியலை. ‘இருந்த பணத்தையெல்லாம் சட்டமன்றத் தேர்தல்ல செலவு பண்ணிட்டோம். கடன் வாங்கியாவது முதல்ல ஜெயிச்சு வாங்க, பிறகு தலைமைகிட்ட பேசி ஏதாவது பண்ண முடியுதா பார்ப்போம்’ என்று மாவட்டச் செயலாளர்களும் கையை விரிக்கிறார்கள். ‘கடந்த பத்து ஆண்டுகளாகச் சம்பாதித்த முன்னாள் அமைச்சர்கள் சும்மா இருக்கும்போது, நாங்கள் ஏன் கல்லாவைத் திறக்க வேண்டும்?’ என்பதே மாவட்டச் செயலாளர்களின் கொந்தளிப்பாக இருக்கிறது.

திருப்பத்தூர் ஆலோசனைக் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தபோது, அவரிடமே சில நிர்வாகிகள் இந்தப் பிரச்னை குறித்துப் பேசினார்கள். ‘சரிசெய்யச் சொல்கிறேன்’ என்றதோடு அவர் கழன்றுகொண்டார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அச்சிறுப்பாக்கம், மாம்பாக்கம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியங்களில் தொண்டர்களுக்கு ‘டீ’ வாங்கிக் கொடுக்கவே முடியாத சூழலில்தான் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரளவு அ.தி.மு.க-வுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், இந்த மாவட்டங்களில் மொத்தமுள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றுக்குக்கூட தேர்தல் செலவுக்காக அ.தி.மு.க தலைமை பர்ஸைத் திறக்கவில்லை. நிதிச்சுமையால் திண்டாடும் வேட்பாளர்கள், கடைசி நேரத்தில் குதிரைப் பேரத்துக்கு பலியாகவும் வாய்ப்பிருக்கிறது. இதை அ.தி.மு.க தலைமை உணர்ந்ததாகத் தெரியவில்லை” என்றனர்.

தன் மனைவியின் 30-ம் நாள் காரிய சம்பிரதாயச் சடங்குகளை முடித்த கையோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்துக்கும் ரூட் போட்டிருக்கிறாராம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். ‘அவர் பிரசாரத்துக்கு வரும்போதாவது ஏதாவது படியளப்பாரா?’ என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது அ.தி.மு.க வேட்பாளர்கள் தரப்பு.

மிரளும் இதர கட்சிகள்... மிரட்டப்படும் வேட்பாளர்கள்!

தி.மு.க., அ.தி.மு.க-வின் உள்ளாட்சி களேபரம் ஒருபக்கமென்றால், தனித்துக் களமிறங்கியிருக்கும் இதர கட்சிகளெல்லாம் தங்கள் வேட்பாளர்களைக் காப்பாற்றும் போராட்டத்தில் மிரண்டுபோய் நிற்கின்றன. வடமாவட்டங்களில் ‘நாம் தமிழர் கட்சி’ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த பலருக்கு, ‘வேட்புமனுவை வாபஸ் வாங்குங்க. உங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கிக்கோங்க’ என்று தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க கட்சியினரிடமிருந்து தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அழுத்தத்துக்கு வேட்பாளர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக, வேட்புமனு வாபஸ் வாங்கும் நாள் வரை பாதுகாப்பான இடங்களில் வேட்பாளர்களை அடைகாத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. தங்கள் வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அக்கட்சியின் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், “தேர்தல் பிரசாரத்திலும் நாம் தமிழருக்குக் குடைச்சல் கொடுக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ‘ஒரே நேரத்தில் பிரசாரத்துக்குச் சென்றால், தேவையற்ற சச்சரவுகள் நம் தொண்டர்களுக்குள் எழும். அதனால், காலையில் நாங்கள் பிரசாரம் செய்கிறோம், மாலையில் நீங்கள் செய்யுங்கள்’ என தி.மு.க-வினர் ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ போட்டனர். ஆனால், சில காவல் அதிகாரிகளைக் கையில் வைத்துக்கொண்டு, ஒப்பந்தத்துக்கு மாறாகக் குடைச்சல் கொடுக்கிறார்கள். களத்தில் எங்கள் வேகத்தைக் கண்டு தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க கட்சிகள் பயப்படுகின்றன. எனவே, பலவகைகளில் எங்களை மிரட்டுகிறார்கள். இதைத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் தடுப்பதில்லை” என்றார்.

பதறும் தி.மு.க... திணறும் அ.தி.மு.க... மிரளும் இதர கட்சிகள்... உள்ளாட்சி உச்சகட்டம்!

“ஜஸ்ட் பிரசாரம் செய்துவிட்டுப் போகிறேன்!” - விரக்தியில் கமல்

மற்றவர்களைக் காட்டிலும் ‘மக்கள் நீதி மய்யம்’ ரொம்பவே மிரண்டுதான் போயிருக்கிறது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், ம.நீ.ம சார்பில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளரை மிரட்டி, வேட்புமனுவை வாபஸ் பெற வைத்திருக்கிறதாம் ஆளும்தரப்பு. இதுபோலப் பல இடங்களில் ம.நீ.ம-வின் வேட்பாளர்கள் மிரட்டப்படுவதால், அக்கட்சியின் சார்பில் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது. நம்மிடம் பேசிய ம.நீ.ம மாவட்டச் செயலாளர் ஒருவர், “ஆரம்பத்தில், கட்சிரீதியிலான 1,521 பதவிகளுக்குப் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை என்பது கமல் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதுமே அப்செட்டாகி விட்டார். ‘நான் பிரசாரம் செய்ய வேண்டுமென்றால் சொல்லுங்கள், ஜஸ்ட் செய்துவிட்டுப் போகிறேன்’ என்று விரக்தியாகச் சொல்லிவிட்டார். கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தாமல் போனதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம்” என்று புலம்பினார்.

தனித்துப் போட்டியிடும் கட்சிகளில் பா.ம.க வடமாவட்டங்களிலும், அ.ம.மு.க தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஓரளவு தெம்போடு இருக்கின்றன. அந்தக் கட்சிகளின் தலைமையிலிருந்து ‘நிதி’ கிடைக்கவில்லை என்றாலும், சுய செல்வாக்குகொண்ட வேட்பாளர் களால் ஓரளவுக்கு அந்தந்த மாவட்டங்களில் இவ்விரு கட்சிகளும் நிற்கின்றன. இவர்களோடு ஒப்பிடும்போது, தே.மு.தி.க களத்திலேயே இல்லை. தி.மு.க கூட்டணியோடு போட்டியிடும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சுயபலத்தில் சுறுசுறுப்பாகியிருக்கின்றன.

இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 169 ஊராட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடுகிறார்கள். விஜய் படத்தையும், இயக்கத்தின் கொடியையும் வைத்து இவர்கள் பிரசாரம் செய்வது இதர அரசியல் கட்சிகளிடையே கடுப்பை உண்டாக்கியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே களேபரங்களும், அடாவடிகளும், குதிரைப் பேரங்களும் நடப்பது சர்வ சாதாரணம். இந்த உள்ளாட்சித் தேர்தலில் கெளரவத்தைத் தக்கவைக்க தி.மு.க பதற்றத்தோடு இருப்பதும், செலவைச் சமாளிக்க முடியாமல் அ.தி.மு.க திண்டாடுவதும் களத்தை மேலும் சூடாக்கியிருக்கின்றன. பெரிய கட்சிகளின் ஆக்டோபஸ் கரங்களின் ஆட்டத்தைக் கண்டு, இதர கட்சிகளெல்லாம் மிரண்டு ஒதுங்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இவற்றுக்கு மத்தியில் தேர்தல் நியாயமாகவும் சுமுகமாகவும் நடைபெற வேண்டுமென்பதே அனைவரது விருப்பம்!