கட்டுரைகள்
Published:Updated:

மூன்றாம் அணி ’ஹாட் டாபிக்' - ரூட் மாறும் தேசிய அரசியல்...

மம்தா, ராகுல் காந்தி, கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
News
மம்தா, ராகுல் காந்தி, கெஜ்ரிவால்

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸிடம் தோற்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில், ‘எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்றால் மட்டுமே பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியும்' என்கிற கருத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்்கட்சிகள் அழுத்தமாக முன்வைத்துவருகின்றன. அதேசமயம், ‘மூன்றாவது அணி' என்றபடி இந்த முறையும் ஒருசில எதிர்க்கட்சிகள் வேறு ரூட் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

அண்மையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, ‘தனித்துப்போட்டி' எனப் போட்டுடைத்தார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மாநிலங்

களின் முதல்வர்களை நோக்கிக் குரல் கொடுக்கிறார். தன்னுடைய டி.ஆர்.எஸ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி) கட்சிக்கு, பி.ஆர்.எஸ் (பாரத் ராஷ்டிர சமிதி) என்று ‘தேசிய சாயம்' பூசிக்கொண்டு தன் பங்குக்கு, பிற மாநிலக் கட்சித் தலைவர்களைக் கரைத்துக்கொண்டிருக்கிறார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். இதற்கிடையே, ‘எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வாய்ப்பில்லை' என ஆரூடம் சொல்கிறார் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்.

மம்தா, ராகுல் காந்தி, கெஜ்ரிவால்
மம்தா, ராகுல் காந்தி, கெஜ்ரிவால்

என்னதான் நடக்கிறது நாட்டில்? -கொதிக்கும் மம்தா!

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸிடம் தோற்றார். கொதித்தெழுந்த மம்தா, `மக்களவைத் தேர்தலில் தனித்துப்போட்டி’ என்று அறிவித்தார். ஏற்கெனவே, காங்கிரஸும் பா.ஜ.க-வும் முறைகேடாகக் கூட்டுவைத்திருக்கிறார்கள் என்று தாக்கியிருந்தார் மம்தா. தற்போது, ‘‘ராகுல் காந்திதான் எதிர்க்கட்சிகளின் முகம் என்றால், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியாது. ராகுல்தான் மோடியின் டி.ஆர்.பி'' எனச் சாடியிருக்கிறார். காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையில், தனித்துப்போட்டி என்று மம்தா அறிவித்திருந்தபோதும், கூட்டணி என்பதை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. சமீபத்தில், உ.பி மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடிக் கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் ஆகியோரைச் சந்தித்து அரசியல் பேசியிருக்கிறார் மம்தா.

பிரஷாந்த் கிஷோர்,  தராசு ஷ்யாம்
பிரஷாந்த் கிஷோர், தராசு ஷ்யாம்

அச்சாரமிடும் அரவிந்த் கெஜ்ரிவால்!

‘பாரத் ஜோடா' யாத்திரை நிறைவு விழாவுக்கு 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து, கெஜ்ரிவாலை மட்டும் புறக்கணித்தது காங்கிரஸ். மேலும், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைதானதை காங்கிரஸ் வரவேற்றிருந்தது. இந்த நிலையில், காங்கிரஸுக்கு எதிரான போக்கைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில், பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு அவர் எழுதிய கடிதம், கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜியையும் கெஜ்ரிவால் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தகவல்.

மூன்றில் இரண்டு... பிரசாந்த் கிஷோர்!

அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், ‘‘இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சித் திட்டங்கள் ஆகிய மூன்று அம்சங்களைக்கொண்டே பா.ஜ.க அரசியல் செய்கிறது. எதிர்க்கட்சிகள் அவற்றில் இரண்டிலாவது முந்தினால்தான் பா.ஜ.க-வுக்குச் சவால்விட முடியும். எதிர்க்கட்சிகள் கருத்தியல்ரீதியில் ஒன்றுபடாவிட்டால், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க எந்த வழியும் இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கடினம்” என்று பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம். ‘‘திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸை எதிர்த்து அந்தந்த மாநிலங்களில் அரசியல் செய்துவருபவை. எனவேதான், காங்கிரஸுடன் கூட்டணி என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இதுதான் எதிர்க்கட்சிகளின் மிக முக்கியமான சிக்கல். மூன்றாம் அணி என்ற வாதம் செயல் வடிவம் பெற்றால், அது பா.ஜ.க-வுக்கு நேரடியாக உதவுவதாக மட்டுமே இருக்கும்” என்று தன் பார்வையை முன்வைத்தார்.

மூன்றாம் அணி எது என்பதுதான் இப்போதைக்கு நேஷனல் ஹாட் டாபிக்!