Published:Updated:

அமையுமா மூன்றாவது அணி?

கமல் - ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
கமல் - ராகுல் காந்தி

கொங்கு மண்டலத்தில் தி.மு.க வீக்காக இருப்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான், அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்து ராகுலின் பிரசாரத்தை நடத்தினோம்.

தேர்தல் வந்துவிட்டாலே மூன்றாவது அணி குறித்த பேச்சுகள் களைகட்ட ஆரம்பித்துவிடும். குறிப்பாக, கடைசி நேரத்தில் பா.ம.க போன்ற கட்சிகள் நடத்தும் களேபரங்களுக்குப் பஞ்சமிருக்காது. இந்தமுறையும் அதில் விதிவிலக்கு இல்லை... பா.ம.க-வின் பேரமும் தேவையும் அதிகமாக இருப்பதால், அவற்றையெல்லாம் அ.தி.மு.க ஒப்புக்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. தி.மு.க கூட்டணியிலும் மனக்கசப்புக்குப் பஞ்சமில்லை. புதுச்சேரி ‘கச்சேரி’யைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை வைத்து கொங்கு மண்டலத்தில் தனி ஆவர்த்தனம் செய்திருக்கிறது காங்கிரஸ். இன்னொரு பக்கம் கமல்ஹாசன், தினகரன் உள்ளிட்டவர்கள் தகுந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். எந்தப் பக்கம் சாய்வார்கள் என்பதை அரசியல் சூழலே முடிவு செய்யும். இதையெல்லாம் முன்வைத்து, தமிழகத்தில் ஒருவேளை மூன்றாம் அணி அமைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

பா.ம.க தலைவர் கோ.க.மணி, ‘‘வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை தி.மு.க ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் கூட்டணி குறித்துப் பேசுவோம்’’ என்று சொல்லியிருக்கிறார். “பா.ம.க இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று வெளிப்படையாகச் சீறியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இந்தச் சூழலில், தேர்தல் களத்துக்குள் புதிய சக்தியாக கமல்ஹாசன் நுழைந்திருப்பது மூன்றாவது அணி அமைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தியிருக்கிறது. கமலை வைத்து தங்கள் பேரத்தை இறுக்க சிறிய கட்சிகள் முயற்சி செய்கின்றன. இந்தநிலையில்தான் அரசியல் வல்லுநர்கள், கட்சிகளின் சீனியர்கள் என்று பல தரப்பினரிடமும், “மூன்றாவது அணி அமைவது சாத்தியமா?” என்ற கேள்வியை முன்வைத்துப் பேசினோம்.

அமையுமா மூன்றாவது அணி?

கர்ஜிக்கும் காங்கிரஸ்!

மூன்று நாள்களாக ராகுலின் கொங்கு மண்டல விசிட், காங்கிரஸ் கட்சியினரை உண்மையிலேயே உற்சாகப்படுத்தியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ராகுலின் பேச்சில் தி.மு.க-வைப் பெரிதாக எங்குமே தொடவில்லை. ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை’ என்று மட்டும் பொத்தாம்பொதுவாகப் பேசினார். பொதுவாகவே கூட்டணி எல்லாம் முடிவான பிறகே, ஒரே மேடையில் கூட்டணித் தலைவர்கள் பிரசாரம் செய்ய தலையைக் காட்டுவது வழக்கம். ஆனால், இந்தமுறை ராகுலின் விசிட் முழுக்க முழுக்க காங்கிரஸின் தனி ஆவர்த்தனமாகவே பார்க்கப்படுகிறது. பீகார் தேர்தலுக்கே சரியாகப் பிரசாரத்துக்குப் போகாதவர், தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பிரசாரத்துக்கு வந்துவிட்டார். அதனால்தான், காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், ‘‘இப்போதாவது தனித்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் முடிவெடுத்தது பாராட்டுக்குரியது’’ என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறார். இது ஏற்கெனவே புகைந்துகொண்டிருக்கும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிப் பஞ்சாயத்துக்குள் பெட்ரோலை ஊற்றியிருக்கிறது.

தி.மு.க-விடம் தங்கள் பலத்தை நிரூபிக்கும் விதத்திலேயே ராகுலின் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி கட்டமைத்ததாகக் கூறுகிறார்கள் கதர்ச்சட்டைகள். இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் சீனியர் தலைவர் ஒருவர், ‘‘சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியை தி.மு.க கிள்ளுக்கீரையாகவே பார்க்கிறது. புதுச்சேரியில் எங்களைச் சீண்டிவிட்டு, தமிழகத்தில் எங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களைக் குறைக்க திட்டமிட்டார்கள். ராகுலின் நேரடித் தலையீட்டால் அதற்குக் குட்டுவைக்கப்பட்டது. ஏற்கெனவே கார்த்தி சிதம்பரம், ‘நூறு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்’ என்று சொல்லியிருந்தார். அதுவே தி.மு.க-வுக்கு மறைமுகமாக விடப்பட்ட எச்சரிக்கைதான். ஆனால், இப்போதுவரை காங்கிரஸுக்கு அதிகபட்சம் 25 தொகுதிகள் தர முடியும் என்கிற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது தி.மு.க.

அமையுமா மூன்றாவது அணி?

கொங்கு மண்டலத்தில் தி.மு.க வீக்காக இருப்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான், அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்து ராகுலின் பிரசாரத்தை நடத்தினோம். ராகுலுக்காகத் திரண்ட கூட்டத்தின் மூலமாக, எங்கள் பலத்தையும் நிரூபித்திருக்கிறோம். 40 தொகுதிகள் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. குறைந்த தொகுதிகளை எங்கள் தலையில் கட்டினால், மாற்று வழியெடுத்து ஆழ்வார்பேட்டைக்குச் செல்லவும் நாங்கள் தயங்க மாட்டோம். ஏற்கெனவே ராகுல், கமல் இடையே நல்ல நட்பு இருக்கிறது. கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் போட்ட ட்வீட்டில் அடங்கியிருக்கிறது உள் அரசியல்’’ என்றார்.

இதையெல்லாம் உணர்ந்துதான், ‘காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தால், கமலுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்’ என்று கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்தார் என்கிறார்கள்.

பதுங்கிப் பாயும் பா.ம.க!

எதிர்முனையான அ.தி.மு.க கூட்டணியில், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி வந்தபோது, ‘உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை விட்டுத்தர முடியாது’ என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி அனுப்பிவிட்டார் ராமதாஸ். அ.தி.மு.க தரப்பிலிருந்து ஏதாவது ரியாக்‌ஷன் வருமென எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தைலாபுரத்தைக் கண்டுகொள்ளாமல் பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டார் எடப்பாடி. ஆத்திரமான மருத்துவர், ‘ஜனவரி 25-ம் தேதி உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும்’ என்று அறிவிப்பை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார். ஒருவழியாக அ.தி.மு.க தரப்பிலிருந்து இதற்கு ரியாக்‌ஷன் வந்ததும், நிர்வாகிகள் கூட்டத்தை ஜனவரி 31-ம் தேதிக்குத் தள்ளிவைத்திருக்கிறார் மருத்துவர்.

அமையுமா மூன்றாவது அணி?

இது பற்றி தைலாபுரத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். ‘‘நாற்பது சீட் வரை பா.ம.க எதிர்பார்க்கிறது. ஒன்றிரண்டு சீட்டுகளைக் குறைத்துக்கொள்ள அவர்கள் தயார் என்றாலும், தேர்தல் செலவுகளை எங்கள் தலையில் கட்டப்பார்க்கிறார்கள். இதுபோக உள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அரசாணையையும் எதிர்பார்க்கிறார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தையில், ‘எடப்பாடி தொகுதியிலேயே வன்னியர் வாக்குதான் பிரதானம்’ என்று விடாப்பிடியாக நிற்கிறது தைலாபுரம் தோட்டம். பிரசாரச் சுற்றுப்பயணத்திலிருக்கும் முதல்வர் சென்னை வந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று அவகாசம் கேட்டிருக்கிறோம். இதனால்தான், நிர்வாகிகள் கூட்டத்தை ஜனவரி 31-ம் தேதிக்குத் தள்ளிவைத்திருக்கிறார் ராமதாஸ்” என்றார்.

அ.தி.மு.க ஏற்கெனவே ஒரு கணக்கைப் போட்டிருந்ததாம். பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க ஆகிய மூன்று கட்சிகளுக்கும் சேர்த்து 70 தொகுதிகளை ஒதுக்கி, பிரித்துக்கொடுக்கும் பொறுப்பை பா.ஜ.க-விடம் ஒப்படைத்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு பா.ம.க உடன்படவில்லையாம். தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பா.ம.க-வுடன் இப்போதும் நல்ல தொடர்பில் இருப்பதே ராமதாஸ் முரண்டுபிடிக்கக் காரணம் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். எப்படியும் பா.ம.க-வைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடலாம் என்று துரைமுருகன் நினைக்கிறாராம். ஆனால், தொடர்ந்து ராமதாஸைக் கடுமையாக ‘முரசொலி’யில் விமர்சித்துவந்த தி.மு.க., ஜனவரி 25-ம் தேதி, ‘தி.மு.க-வைக் குறிவைக்கும் இலவு காத்த கிளி... மருத்துவர் அய்யாவின் பகல் கனவு’ என்று கடுமையான விமர்சனக் கட்டுரையை எழுதி, தனது கூட்டணியில் பா.ம.க-வுக்கு இடம் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது.

இதனால், ராமதாஸ் கடும் ஆத்திரமடைந்தாலும், அன்புமணி தரப்பிலிருந்து தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க முயல்வதால், எதுவும் பேச முடியாமல் தவிக்கிறார். அன்புமணி கொடுத்த அழுத்தத்தின் வெளிப்பாடுதான், சமீபத்தில் கோ.க.மணி அளித்த தி.மு.க சிக்னல் பேட்டி என்கிறார்கள் பா.ம.க வட்டாரத்தில். ஒருவேளை உள் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கும், சீட் பங்கீட்டுக்கும் அ.தி.மு.க செவிசாய்க்கவில்லை என்றால், மக்கள் நீதி மய்யத்துடன் அணிசேரவும் தயாராகிறாராம் ராமதாஸ். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனியாக நின்று பா.ம.க பல தொகுதிகளில் இரண்டாம் இடம் வந்தது. கமலுடன் சேர்ந்தால், அந்த இடங்களில் ஜெயிக்க முடியும் என கணக்கு போடுகிறார் ராமதாஸ்.

அமையுமா மூன்றாவது அணி?

மையப்புள்ளியான கமல்!

இன்று ‘மூன்றாவது அணி’ என்று மிரட்டும் பல கட்சிகளுக்கு ஆபத்பாந்தவனாக வந்து வாய்த்திருக்கிறார் கமல்ஹாசன். இப்படியோர் அணி அமைந்தால், அது அ.தி.மு.க-வைவிட, தி.மு.க-வுக்கே பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் கணக்கு. மக்கள் நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம், ‘‘காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட்டுகள் என்று ஒரு அணியைக் கட்டமைக்கும் யோசனை கமலிடம் இருக்கிறது. இந்தப் புதிய அணியில் அ.ம.மு.க-வும் இணைந்துகொண்டால், வாக்கு சதவிகிதம் 20 சதவிகிதத்தைத் தாண்டிவிடும். ஒருவேளை அறிவாலயம் பக்கம் பா.ம.க சாய்ந்துவிட்டால், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறும் விடுதலைச் சிறுத்தைகளை வைத்து களம் காணவும் கமல் தயாராகிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 100 சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமான சதவிகித வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. அந்தத் தொகுதிகளை மட்டும் தன் வசம் வைத்துக்கொண்டு, கூட்டணிக் கட்சிகளுக்கு மற்ற இடங்களை வழங்கலாம் என்று கமல் நினைக்கிறார். காங்கிரஸுடன் அணிசேர்வதில் கமலுக்கு எந்த முரண்பாடும் இல்லை. ‘கமல் எனக்கு ஒருவகையில் தாய்மாமன் முறை வேண்டும்’ என்று கார்த்தி சிதம்பரம் அழைப்பு விடுத்ததிலிருந்தே இந்த உறவைப் புரிந்துகொள்ளலாம்’’ என்றார்.

கமல்ஹாசனைக் காட்டி திராவிடக் கட்சிகளை மிரட்டுவதற்கு பல கட்சிகள் ‘மூன்றாவது அணி’ என்ற அஸ்திரத்தைக் கையில் எடுக்க, இன்னொரு பக்கம் கமல் கட்சியில் இருப்பவர்கள் வேறொரு கணக்கைச் சொல்கிறார்கள். “அரசியல் களத்தில் எதுவும் நடக்கலாம். மூன்றாம் அணியைத் தவிர்த்து கமல்ஹாசன், தி.மு.க பக்கமும் கூட்டணிவைக்க வாய்ப்பு இருக்கிறது. தனித்தோ... பிற சிறு கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடும் பட்சத்தில் கமல்ஹாசன் கணிசமான ஓட்டு வங்கியைப் பெறலாம். ஆனால், எத்தனை இடங்களில் வெற்றிபெறுவார் என்பது கேள்விக்குறியே. அதனால், தி.மு.க கூட்டணியில் இணைந்து, கணிசமான இடங்களை வென்றுவிட்டால், சட்டசபையில் தனது கட்சியின் குரல் உயரும். கட்சியையும் வளர்க்கலாம். ஆனால், தி.மு.க-வே வலிய வந்து பேச வேண்டும் என்பது கமலின் எதிர்பார்ப்பு” என்கிறார்கள் ம.நீ.ம-வின் நிர்வாகிகள் சிலர்.

மூன்றாவது அணி என்ற ஒன்று இப்போது இல்லை. அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வின் கூட்டணிக் கணக்குகள் தப்பாகும்போது, குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தையாக அது அவதரிக்கலாம். ஒருவேளை அது கமல்ஹாசனின் விஸ்வரூபமாகவும் அமையலாம்!