Published:Updated:

தள்ளிப்போகும் நியமனங்கள்... என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை?

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

பா.ஜ.க-வில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், அடுத்த முறையும் தலைவராகப் போட்டியிடலாம்.

தள்ளிப்போகும் நியமனங்கள்... என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை?

பா.ஜ.க-வில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், அடுத்த முறையும் தலைவராகப் போட்டியிடலாம்.

Published:Updated:
அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

தமிழகத்தில் இப்போது உட்கட்சித் தேர்தல் சீஸன்! அ.தி.மு.க-வில் முதற்கட்ட உட்கட்சித் தேர்தல் முடிந்து, இரண்டாம் கட்ட தேர்தல் சூடுபிடித்துள்ளது. தி.மு.க-விலும் உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான முஸ்தீபுகளில் மும்முரமாகியிருக்கிறார்கள். சமீபத்தில்தான் காங்கிரஸ் கட்சியும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது. அதேசமயம், பா.ஜ.க-வில் கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பே வேகமெடுத்த புதிய நிர்வாகிகள் நியமனங்கள் அப்படியே முடங்கிவிட்டன. கமலாலயத்தில் என்னதான் நடக்கிறது?

பா.ஜ.க மாநிலத் தலைவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஓரிரு மாதங்களில் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள். கடந்த காலங்களில் தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் பதவியேற்றதும் நிர்வாகிகளை மாற்றினார்கள். ஆனால், அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு எட்டு மாதங்களாகியும், எல்.முருகன் தலைவராக இருந்தபோது நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே பொறுப்புகளில் நீடிக்கிறார்கள். “சட்டப்பேரவை, ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி எனத் தொடர்ந்து தேர்தல்கள் வரிசைகட்டியதால்தான் நிர்வாகிகளை மாற்ற முடியவில்லை” என்று அண்ணாமலை தரப்பினர் சொன்னாலும், எதிர்த்தரப்பினரோ, “தனக்குத் தோதான ஆட்களை மட்டுமே நியமிக்க நினைக்கிறார் அண்ணாமலை. அதனால்தான் நியமனங்கள் தள்ளிப்போகின்றன” என்று விமர்சிக்கிறார்கள்.

தள்ளிப்போகும் நியமனங்கள்... என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை?

பா.ஜ.க தேர்தல் நடைமுறை என்ன?

பா.ஜ.க-வில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், அடுத்த முறையும் தலைவராகப் போட்டியிடலாம். ஆனால், இரண்டு முறைக்கு மேல் ஒருவர் தலைவராகத் தொடர முடியாது. தலைவரின் பதவிக்காலம் முடிந்ததும், அவர் நியமித்த நிர்வாகிகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்துவிடும். அதேசமயம், பழைய நிர்வாகிகளை மாற்றாமல் இருப்பதும் தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான். மாநிலத் தலைவர், மாவட்டத் தலைவர், மண்டலத் தலைவர்கள் மட்டுமே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மற்ற பொறுப்புகள் அனைத்தும் மாநிலத் தலைவரால் நியமிக்கப்படும்.

சமூக பிரதிநிதித்துவம்... அண்ணாமலை கணக்கு!

இந்த நிலையில், பா.ஜ.க நிர்வாகிகள் நியமனத்தில் அண்ணாமலை என்ன செய்யப்போகிறார் என்று பா.ஜ.க துணைத் தலைவர் ஒருவரிடம் கேட்டோம்... “நிர்வாகிகள் மாற்றத்துக்கு மூத்த நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலைக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லை. ஆனால், நான்கைந்து மாதங்களுக்கு முன்பே டெல்லி மேலிடத்திடம் பேசி நிர்வாகிகள் மாற்றத்துக்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டார் அண்ணாமலை. இப்போது இருக்கும் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலை மீதான அதிருப்தியால், தங்களுக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் மீது எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கரு.நாகராஜன், ஜி.கே.செல்வகுமார், இராம.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பொதுச் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது. இவர்களுக்கு பதிலாக ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தமிழக பா.ஜ.க தலித் பிரிவுத் தலைவர் பாலகணபதி, கொங்கு மண்டலத்தின் பிரதிநிதித்துவத்துக்காக ஏ.பி.முருகானந்தம், டெல்டா பகுதிக்காக தஞ்சாவூர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதேபோல வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்க அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார்.

பா.ஜ.க இளைஞரணித் தலைவராக இருக்கும் வினோஜ் பி செல்வம் மீது தியேட்டர் உரிமையாளர் தரப்பினர் சில புகார்களைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், அவரை மாற்றிவிட்டு, தனக்கு நெருக்கமான ராகுல் தினேஷ் சுரானா என்பவரை இளைஞரணித் தலைவராக நியமிக்கத் திட்டமிட்டிருக்கிறார் அண்ணாமலை. அதேபோல ஏற்கெனவே அண்ணாமலையுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த கலைப்பிரிவுத் தலைவர் காயத்ரி ரகுராமும் மாற்றப்படுவார். தேசிய அளவில் குஷ்புவுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார் அண்ணாமலை. அதனால்தான், மேற்கு வங்கத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை விசாரிக்க டெல்லி பா.ஜ.க நியமித்த குழுவில் குஷ்புவுக்கும் இடம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதன் பின்னணியில் வானதி சீனிவாசனுக்கு எதிராக குஷ்புவை முன்னிறுத்தும் எண்ணமும் அண்ணாமலைக்கு இருக்கிறது. சென்னை மண்டல பொறுப்பாளராக கராத்தே தியாகராஜன் நியமிக்கப்படவும் வாய்ப்பு அதிகம்” என்றார் விரிவாக!

நிபந்தனை விதித்த டெல்லி!

நம்மிடம் பேசிய பொதுச்செயலாளர் ஒருவர், “அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து சீனியர்களுக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏழு சதவிகித வாக்குகள் வாங்கிவிட்டோம். இது கடந்த சட்டசபைத் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவிகிதத்தைவிட அதிகம்’ என்று மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார் அண்ணாமலை. ஆனால், தமிழ்நாடு பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலர் டெல்லி தலைமையிடம், ‘உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க பெற்ற உண்மையான வாக்கு விகிதம் என்ன?’ என்பதைப் போட்டு உடைத்துவிட்டார்கள். இதையடுத்து, நிர்வாகிகள் நியமனத்தில் அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் ஓகே சொன்னாலும்கூட ‘உங்கள் விருப்பப்படி 30 சதவிகிதமும், கட்சி சீனியர்களின் ஆலோசனையைக் கேட்டு 70 சதவிகிதமும் நிர்வாகிகளை நியமித்துக்கொள்ளலாம்’ என்று நிபந்தனை விதித்திருக்கிறது. அதனால், அண்ணாமலை நினைப்பது முழுமையாக நிறைவேறாது” என்றார்.

“பொது விவகாரங்களில் எல்லோருக்கும் முன்பாக கருத்து சொல்லும் அண்ணாமலையால், சொந்தக் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை” என்பதே பா.ஜ.க-வினரின் விமர்சனமாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism