Published:Updated:

அடுத்த தலைவர் யார்? - களைகட்டும் கதர் ரேஸ்

அடுத்த தலைவர் யார்? - களைகட்டும் கதர் ரேஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அடுத்த தலைவர் யார்? - களைகட்டும் கதர் ரேஸ்

- மூன்றாண்டுகளுடன் முடிகிறது அழகிரியின் பதவிக்காலம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக அடங்கியிருந்த புதிய தலைவர் பதவிக்கான ரேஸ் மீண்டும் தொடங்கிவிட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டியில் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் தலைவரை நியமிக்க, டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவெடுத்து விட்டதாகத் தகவல்கள் தடதடக்கின்றன.

பொதுவாக மாநிலத் தலைவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெல்லி காங்கிரஸ் மேலிடம் மாற்றுவது வழக்கம். ஆனால், கே.எஸ்.அழகிரி மட்டும் கூடுதல் சலுகையாக மூன்றாண்டுகள் பதவிவகித்தார். ஓராண்டுக்கு முன்பு “உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வேன். அதற்காக இந்தத் தேர்தல் முடியும்வரை பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும்” என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தச் சலுகை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான், வரும் பிப்ரவரி 2-ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகளுடன் நிறைவடைகிறது. இதையடுத்தே, புதிய தலைவருக்கான ரேஸ் சத்தியமூர்த்தி பவனில் சூடுபிடித்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் சிலர், ‘‘கடந்த ஆகஸ்ட் மாதம், ‘தலைவரை மாற்றப்போகிறார்கள்’ என்று செய்திகள் றெக்கை கட்டியபோது செல்வப்பெருந்தகை, செல்லக்குமார், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இப்போதும் அவர்களின் பெயர்களே அடிபட்டாலும், ஜன்பத் சாலையின் கணக்கு வேறு மாதிரியாக இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

செல்வப்பெருந்தகை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், பொதுக்கணக்குக்குழுத் தலைவராகவும் இருப்பதால், அவருக்கே தலைவர் பதவியையும் அளித்து சுமையை ஏற்ற டெல்லி தயங்குகிறது. கார்த்தி சிதம்பரத்துக்கும், ராகுல் காந்திக்குமான உறவு சுமுகமாக இல்லை. ‘உட்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும்’ என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை, தானும் வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் சமரச சிக்னல் காட்டினாலும், ராகுல் சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. ஜோதிமணி சிறந்த போட்டியாளர்தான். மாவட்ட அரசியலில் அதிரடி காட்டுபவர், தமிழக அரசியலிலும் பட்டையைக் கிளப்ப முடியும். ஆனால், அதற்கு இதர காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டுமே? அவர் தலைவர் பதவியை அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த ஆறு மாதங்களாகவே சிலர் டெல்லி தலைமையிடம் போட்டுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘கட்சிக்காக உழைக்க வந்த என்னை, கட்சியின் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் ஒடுக்குகிறார்கள்’ என்று வெளிப்படையாகவே கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டு விலகினார் நடிகை குஷ்பு. அந்த அளவுக்குக் கதர்களுக்குள் கோஷ்டிகள் ஏராளம். தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டால், இதையெல்லாம் ஜோதிமணி சமாளிக்க வேண்டியிருக்கும்.

அடுத்த தலைவர் யார்? - களைகட்டும் கதர் ரேஸ்

ஒடிசா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமாருக்கு சமீபத்தில் மேற்கு வங்கம், அந்தமான் தீவுகளின் கட்சிப்பொறுப்பும் தற்காலிகமாக ஒதுக்கப் பட்டது. 1990-களிலிருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்குப் பரிசீலிக்கப்படும் பெயர்களில் இவர் பெயரும் ஒன்று. இதற்காகவே, அவருக்கு அந்தப் பதவி அளிக்கப்படலாம். ஆனால், மூன்று மாநிலங்களின் கட்சிப் பொறுப்பைச் சுமப்பதால், அங்கேயெல்லாம் தேவையான மாற்று ஏற்பாடுகளை யோசித்த பின்னர்தான், செல்லக்குமாருக்கு தமிழகத் தலைவராகும் யோகம் கிடைக்கும்.

தலைவர் பதவிக்கான ரேஸில் புதிதாக இணைந்திருப்பவர் சசிகாந்த் செந்தில். தன் ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவருக்கு, தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பதவி அளிக்கப்பட்டது. இதுவே, கட்சி சீனியர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், தலைவர் பதவிக்கான பட்டியலில் அவரும் இடம்பிடித்திருக்கிறார். ‘முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, அதே கர்நாடகா கேடர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை கட்சித் தலைவராக்கினால் என்ன? இளைஞர் காங்கிரஸ் தேர்தலை இப்போதுதான் நடத்தியிருக்கிறோம். அதற்கேற்ப, இளைஞர் ஒருவர் கட்சிப் பொறுப்புக்கு வரட்டுமே?’ என்று தமிழக கதர்கள் சிலர் டெல்லிக்கு ஆலோசனை அளித்திருக்கிறார்கள். ஆனால், கோஷ்டி கானத்துக்குப் புகழ்பெற்ற சத்தியமூர்த்தி பவனில் சசிகாந்த் செந்திலின் குரல் எடுபடுமா என்பதுதான் தெரியவில்லை’’ என்றார்கள்.

‘‘கடந்த நாற்பதாண்டுகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை நீண்டகாலம் தக்க வைத்துக்கொண்டவர் எம்.பழனியாண்டி ஒருவர்தான். 1983 முதல் 1988 வரையில் தொடர்ச்சியாக ஆறு ஆண்டுக்காலம் தன் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். அதே பாணியில், தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள தற்போது முயல்கிறார் கே.எஸ்.அழகிரி. ஆனால், அவருக்குத் தொடக்கத்தில் ஆதரவளித்த ப.சிதம்பரம் அணியினரே இப்போது எதிர்ப்பாகத் திரும்பியிருப்பதால், பதவி நீட்டிப்பு கிடைப்பது சந்தேகம்தான்’’ என்கிறார்கள் விவரமறிந்த கதர்கள். பவனை அலங்கரிக்கப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!