அரசியல்
Published:Updated:

ஒன் பை டூ

சி.வி.எம்.பி.எழிலரசன், டி.ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.வி.எம்.பி.எழிலரசன், டி.ஜெயக்குமார்

“அப்போதும் இப்போதும் அ.தி.மு.க., டெல்லி சொல்வதையே கேட்கிறது” என்ற அமைச்சர் உதயநிதியின் விமர்சனம்?

சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``இது உலகறிந்த உண்மைதானே... அ.தி.மு.க என்ற கட்சி தொடங்கப்படுவதற்குக் காரணமும் டெல்லிதான். அது, அ.இ.அ.தி.மு.க என்று தன் பெயரை மாற்றிக்கொள்வதற்குக் காரணமாக இருந்ததும் டெல்லிதான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமைப் பொறுப்புக்கு வருவதற்குக் காரணமாக இருந்ததும் டெல்லிதான். அதே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவோ, தினகரனோ தலைமைப் பொறுப்புக்கு வர முடியாமல் போனதற்கும் காரணம் டெல்லிதான். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் சண்டைக்கும் சமாதானத்துக்கும்கூட டெல்லிதான் காரணம். ஊழல் குற்றங்களிலிருந்து தப்பிக்க, ஒன்றிய பா.ஜ.க சொல்வதை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு, அவர்களின் மகுடிக்கு மயங்கிக் கிடந்தவர்கள்தானே இந்த ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும். கேவலம், ஈரோடு இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களெல்லாம் கமலாலயம் வாசலில் காத்துக்கிடந்ததை மறக்க முடியுமா... அ.தி.மு.க-வை மோசமாக விமர்சித்த அண்ணாமலையை, `அவரெல்லாம் ஒரு ஆளா?’ என்கிற தொனியில் விமர்சித்த இ.பி.எஸ் டெல்லிக்குப் போய்விட்டு வந்ததும், ‘அண்ணாமலையுடன் எந்தத் தகராறும் இல்லை’ என்று பேட்டி கொடுக்கிறார் என்றால் என்ன அர்த்தம்... அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஒட்டுமொத்த கட்சியையும் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் அடகுவைத்துவிட்டனர். போகிற போக்கைப் பார்த்தால் அ.தி.மு.க-வின் பெயரை, ‘அமித் ஷா’ தி.மு.க என்று மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.’’

சி.வி.எம்.பி.எழிலரசன், டி.ஜெயக்குமார்
சி.வி.எம்.பி.எழிலரசன், டி.ஜெயக்குமார்

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

``காங்கிரஸ் ஆட்சியின் கொடுமைக்கு எதிராக உதயமான தி.மு.க-வை, அதே காங்கிரஸ் கட்சியின் கொத்தடிமையாக மாற்றியவர்களுக்கு அ.தி.மு.க-வைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது... இந்திரா காந்தியைத் திட்டித் தீர்த்துவிட்டு, அவருடனேயே கூட்டணி வைத்துக்கொண்டவர்கள் தி.மு.க-வினர். 1999-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க ஆட்சி கவிழ்ந்தபோது, ஓடி வந்து முட்டுக்கொடுத்தவர்கள்தான் தி.மு.க-வினர். வாஜ்பாய் ஆட்சியில் பா.ஜ.க-வைத் தூக்கிச் சுமந்து, அதன் மூலம் முக்கிய இலாகாக்களை வாங்கிக்கொண்டு தங்களை வளப்படுத்திக்கொண்டவர்கள்தான் தி.மு.க-வினர். பிறகு காங்கிரஸுக்குக் காவடி தூக்கி 10 ஆண்டுக்காலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தார்கள். இப்படி டெல்லிக்கு கூஜா தூக்குவதையே வழக்கமாக வைத்திருந்த அடிமை வம்சத்தின் இளவரசர் எங்களை வசைபாடுவதா... எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமருக்கு எதிராகக் கறுப்பு பலூன் பறக்கவிடுவார்கள். ஆளுங்கட்சியானதும் வெண் குடை, சாமரங்கள் பிடிப்பார்கள். இப்படி சூழலுக்குத் தக்கபடி நிறத்தை மாற்றிக்கொள்வதில் பச்சோந்தியையே தோற்கடிக்கும் கட்சி தி.மு.க. கூட்டணியிலிருக்கும் ஒரு தேசியக்கட்சியின் தலைவர்களை நாங்கள் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது... ஏன், இதே கருத்தைச் சொன்ன உதயநிதிகூட சமீபத்தில் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்கவில்லையா... தங்கள்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே இப்படியெல்லாம் பேசிவருகிறார்கள் தி.மு.க-வினர்.’’