அரசியல்
அலசல்
Published:Updated:

ஒன் பை டூ

ஏ.பி.முருகானந்தம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
News
ஏ.பி.முருகானந்தம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

“தி.மு.க. அரசை வெளி சக்திகள் இயக்குகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது” என்ற வானதி சீனிவாசனின் விமர்சனம்?

ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க

``உண்மையான சந்தேகம்தானே... சட்டமன்றத்தில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது. பின்னர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் அந்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படுகிறது. ஒரு சட்டத்தைக் கொண்டுவரும்போது அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், மக்களை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதுகூட இந்த அரசுக்குத் தெரியவில்லை. அப்படியென்றால் ஒரு சிலரின் நலன்களுக்காக, தேவைகளுக்காக அந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்ற சந்தேகம் வருவது நியாயம்தானே... பொம்மை முதல்வரை அவரின் குடும்பத்தினரும், அவரைச் சுற்றியிருக்கும் ஒரு கூட்டமும்தான் இயக்கிக்கொண்டிருக்கின்றன என்ற சந்தேகம் எங்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களும் இருக்கிறது. தன் மகனை அமைச்சராகியதும், தன் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து சம்பாதித்ததும் மட்டும்தான் இந்த ஆட்சியின் சாதனை. மாநிலம் முழுவதும் ஊழல் ஆறாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது நடைபெறும் ஜி ஸ்கொயர் சோதனையெல்லாம் வெறும் டிரெய்லர் மட்டுமே. இது போன்ற பல நூறு ஊழல்கள் இன்னும் தொடர்ந்து வெளிவந்துகொண்டேதான் இருக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தி.மு.க-வுக்குச் மறக்க முடியாத அளவுக்குப் பாடம் புகட்டுவார்கள்.’’

ஏ.பி.முருகானந்தம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
ஏ.பி.முருகானந்தம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

`` எந்த அந்நிய சக்தியாலும் தி.மு.க-வை இயக்க முடியாது. வெளியிலிருந்து இயக்கப்படுவது பா.ஜ.க-வா அல்லது தி.மு.க-வா என்பது மக்களுக்கே தெரியும். வேளாண் திருத்தச் சட்ட மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டம் என மக்களால் எதிர்க்கப்பட்ட பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்த பா.ஜ.க-வினர், எங்களைப் பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது. ஒன்றிய பா.ஜ.க அரசின் எத்தனையோ சட்டங்களை எதிர்த்து, பல லட்சம் மக்கள் போராடியிருக்கிறார்கள். பலரும் உயிரிழந்தார்கள். அவர்களுடன் கூட்டணி யிலிருந்த கட்சியினர், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்கள். 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வுடன் இருந்த பல கட்சிகள் இப்போது அவர்களுடன் இல்லை. அந்த நிலை தி.மு.க-வுக்கு இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் நன்மைக்காக அரசு ஒரு சட்டம் கொண்டுவருகிறது. அந்தச் சட்டம் முழுவதும் புரிந்துகொள்ளப்படும் முன்பே அதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. மக்கள் ஒரு சட்டத்தை விரும்பவில்லையென்றால், அதைத் திரும்பப் பெறுவதுதானே ஜனநாயகம்... தி.மு.க அரசு அதைத்தான் செய்திருக்கிறது. தமிழகத்தில் ஓர் ஆகச்சிறந்த ஆட்சி நடைபெற்றுவருகிறது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க-வின் மேல் வீண் அவதூறு பரப்பப்படுகிறது.’’