Published:Updated:

தே.மு.தி.க-வின் தேய்பிறைக்காலம்!

விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
விஜயகாந்த்

கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சி, குடும்ப ஆதிக்கத்துக்குள் சிக்கியது.

தே.மு.தி.க-வின் தேய்பிறைக்காலம்!

கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சி, குடும்ப ஆதிக்கத்துக்குள் சிக்கியது.

Published:Updated:
விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
விஜயகாந்த்
போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8.45 சதவிகித வாக்குகள் பெற்று இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும், அதுவரை வட மாவட்டங்களில் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருந்த பா.ம.க-வுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கட்சி தே.மு.தி.க.

தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது தே.மு.தி.க. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளும் கூட்டணிக்கு வலைவிரிக்க, பிடிகொடுக்காத தே.மு.தி.க மீண்டும் தனித்துக் களம்கண்டது. விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், மாஃபா பாண்டியராஜன் மட்டுமே ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகமானவர்களாக இருக்க, 10.08 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்கவைத்தது தே.மு.தி.க. ஆனால் அதே தே.மு.தி.க., 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக மண்ணைக் கவ்வியது; அ.தி.மு.க-வால் ராஜ்யசபா சீட்டு மறுக்கப்பட்டது. குறுகியகாலத்தில் மிகப்பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது தே.மு.தி.க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனித்தே களம்கண்டு தனக்கான இமேஜை உருவாக்கிய விஜயகாந்த், முதன்முதலில் சரிவைச் சந்தித்தது 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோது. முதலில் ஜெயலலிதா மரியாதையாகத்தான் விஜயகாந்தை நடத்தினார். ஆட்சி அமைத்து சில மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் முட்டிக்கொண்டது.

ராஜ்யசபா
சீட்டு மறுப்பு

சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா முன்னிலையில் ஆளுங்கட்சியினரைப் பார்த்து விஜயகாந்த் நாக்கைத் துறுத்தி “ஏய்...” என எச்சரிக்கை செய்தார். விஜயகாந்தின் இந்தச் செயலுக்கு வெளியில் மட்டுமல்லாமல். கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகள் வெடிக்கத் தொடங்கின. கட்சியின் பொருளாளர் சுந்தர்ராஜன், மாஃபா.பாண்டியராஜன், நடிகர் அருண் பாண்டியன் உள்ளிட்ட எட்டு எம்.எல்.ஏ-க்கள் ‘தொகுதி வளர்ச்சிக்காக ஜெயலலிதாவைச் சந்திக்க’ தே.மு.தி.க கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகத் தொடங்கியது. மறுபுறம், ஆளும் கட்சியினரின் கிண்டலையும் கேலியையும் சமாளிக்க முடியாத விஜயகாந்த், சட்டமன்றத்துக்கு மட்டம் போடத் தொடங்கினார். ஆளுங்கட்சிக்கு எதிராக ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையையும் விஜயகாந்த் மேற்கொள்ளவில்லை. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவதிலிருந்து நழுவினார் நடிகர் விஜயகாந்த். ஒருபுறம் பொதுவெளியில் விஜயகாந்தின் இமேஜ் மெள்ள மெள்ளச் சரிந்து வர, மறுபுறம் அவரின் உடல்நிலையும் மோசமாகிக்கொண்டே வந்தது. வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பவும், 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரவும் சரியாக இருந்தது.

கருணாநிதியே அழைப்புவிடுத்தும் தி.மு.க கூட்டணியைப் புறக்கணித்த விஜயகாந்த், அந்தத் தேர்தலில், யாரைத் தன் அரசியல் எதிரியாகக் கருதினாரோ அதே ராமதாஸ் அங்கம்வகித்த தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தார்.

ஓர் இடத்தில்கூட தே.மு.தி.க-வால் வெற்றிபெற முடியவில்லை. 2009-ல் தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகள் சரிபாதியாகக் குறைந்திருந்தன.

விஜயகாந்த்
விஜயகாந்த்

ஆனாலும் விஜயகாந்துக்கான மவுசு முற்றிலுமாகக் குறைந்துவிடவில்லை. இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள், ம.தி.மு.க. இணைந்து ஆரம்பித்த ‘மக்கள்நலக் கூட்டணி’, தே.மு.தி.க-வையும் தங்களுடன் இணைத்துக்கொண்டது. அரசியல் சீனியர் தலைவரான வைகோவே “விஜயகாந்த் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்” என்றார். ஆனால் மக்கள்நலக் கூட்டணியைத் தே.மு.தி.க-வில் இருந்தவர்களே ஏற்றுக் கொள்ளவில்லை.

அதுவரை விஜயகாந்தின் வலது கரமாக, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டுவந்த சந்திரக்குமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இணைந்து, ‘`இது மக்களின், தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு... மாற்றிக்கொள்ள வேண்டும்’’ எனக் கால அவகாசம் கொடுத்தனர். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூடக் கவலைப்படாத விஜயகாந்த், எதிர்ப்பாளர்களைக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார்.

L. K. Sudhish
L. K. Sudhish

கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சி, குடும்ப ஆதிக்கத்துக்குள் சிக்கியது. எந்தக் குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்குவதாக அறிவித்தாரோ, அதே ஆதிக்கம் தன் மனைவி, மைத்துனர் மூலம் தன் கட்சியில் உண்டானபோது கண்டுகொள்ளாமலிருந்தார் விஜயகாந்த். `மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், யார் எந்தத் துறைக்கு அமைச்சர்...’ என்றெல்லாம் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் சுதீஷ். அந்தத் தேர்தலில், 104 தொகுதிகளில் போட்டியிட்டு 103 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது தே.மு.தி.க. கட்சியின் நிறுவனர் விஜயகாந்தே உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டார். தனித்துப் போட்டியிட்டபோது, 10.08 சதவிகிதத்தைத் தொட்ட தே.மு.தி.க வாக்கு சதவிகிதம், கூட்டணி அமைத்துப் போட்டி யிட்டபோது 2.39-ஆகக் குறைந்தது. தேர்தல் தோல்வி மட்டுமல்லாமல். மேடையில் தொடர்பற்ற பேச்சு, பொதுவெளியில் தன் கட்சிக்காரர்களை அடிப்பது, திட்டுவது, பத்திரிகையாளர்களை நோக்கித் துப்புவது என தன் மொத்த இமேஜையும் இழந்திருந்தார் விஜயகாந்த்.

தேரை இழுத்துத் தெருவில்விட்ட சம்பவமாக, மிச்சம் மீதமிருந்த தே.மு.தி.க-வின் இமேஜ் உடைந்தது 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்தான்.

ஒருபுறம் அ.தி.மு.க கூட்டணியில் இணைய, பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை, மறுபுறம் தி.மு.க-வுடன் பேச்சு நடத்த ஆள் அனுப்பியது என பிரேமலதா `பேர’ லதாவாக அம்பலமானதும் அரங்கேறியது. 2014 தேர்தலில் இதே தேசிய ஜனநாயகக் கூட்டணியில், எட்டு இடங்களைப் பெற்ற பா.ம.க-வுக்கு, 2019 தேர்தலில், ராஜ்யசபாவுடன் சேர்த்து எட்டு இடங்கள் ஒப்பந்தமாக, 2014-ல் 14 இடங்களைப் பெற்ற தே.மு.தி.க-வுக்கு வெறும் நான்கு இடங்கள் மட்டுமே ஒப்பந்தமாகின. ஓரிடத்தில்கூட தே.மு.தி.க-வால் வெற்றி பெற முடியவில்லை. தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தே.மு.தி.க-வுக்கு மரண அடி. `ராஜ்யசபா சீட் கிடைக்கும்’ என எதிர்பார்த்துக் காத்திருக்க, அதுவும் ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

பிரேமலதா, விஜயகாந்த்
பிரேமலதா, விஜயகாந்த்

ஆரம்பத்தில் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் அங்கம் வகிக்காத பிரேமலதா, கட்சியின் பொருளாளர் ஆன பிறகு அவரது சர்வாதிகாரப் போக்கு அதிகரித்தது. 2019 தேர்தலையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பில், ‘நீ, வா, போ...’ என ஒருமையில் பத்திரிகையாளர்களை எதிர்கொண்டது ஏகப்பட்ட எதிர்ப்புகளைச் சந்தித்தது. நேற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், ``கூட்டணிக்காக எல்லோரும் மறைமுகமாக எங்கள் காலில் விழுகிறார்கள்’’ என சிறுபிள்ளைத்தனமாகப் பேசியது, ஜனநாயகத்தின் படுவீழ்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் தே.மு.தி.க ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி பேரம் பேசி எத்தனை சீட்டுகளை வேண்டுமானால் வாங்கலாம். ஆனால், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த புதிதில் களத்தில் இறங்கி வேலை செய்த மன்ற நிர்வாகிகளில், தொண்டர்களில் பலர் எப்போதோ கூடாரத்தைக் காலிசெய்துவிட்டு மாற்றுக் கட்சிகளுக்குப் போய்விட்டார்கள். அப்படியே தேடிப்பிடித்து யாரையாவது வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை நம்பி வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை.

‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று’ என்று ஆரவாரமாக ஆதரிக்கப்பட்ட தே.மு.தி.க., தேய்பிறை காலத்திலேயே தன் பயணத்தைத் தொடர்வது அரசியல் பரிதாபம்தான்!