Published:Updated:

ஒன் பை டூ

நரேந்திரன், பி.டி.அரசகுமார்
பிரீமியம் ஸ்டோரி
நரேந்திரன், பி.டி.அரசகுமார்

“ஆளுநர் மற்றும் பா.ஜ.க-வால்தான் தமிழகத்துக்குப் பாதுகாப்பு இல்லை!” என்ற கனிமொழியின் கருத்து?

ஒன் பை டூ

“ஆளுநர் மற்றும் பா.ஜ.க-வால்தான் தமிழகத்துக்குப் பாதுகாப்பு இல்லை!” என்ற கனிமொழியின் கருத்து?

Published:Updated:
நரேந்திரன், பி.டி.அரசகுமார்
பிரீமியம் ஸ்டோரி
நரேந்திரன், பி.டி.அரசகுமார்

நரேந்திரன், துணைத் தலைவர், தமிழக பா.ஜ.க.

“இதுபோன்ற குற்றச்சாட்டுகளெல்லாம் தி.மு.க-வின் கையாலாகாத்தனத்தையே காட்டுகின்றன. ‘கவர்னர் முதல் காவலர் வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை’ என்ற எடப்பாடியின் கருத்துக்கு பதில் கொடுக்கிறோம் என்ற பெயரில்தான் கனிமொழி இவ்வாறு பேசியிருக்கிறார். எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைசொல்வது தி.மு.க-வின் வாடிக்கையாகிவிட்டது. பா.ஜ.க-வால் இவர்களுக்கு என்ன பாதிப்பு... அதேபோல், ஆளுநர் அப்படியென்ன சட்ட விதிமீறல்களைச் செய்துவிட்டார்... துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் சட்டம் இயற்றியிருக்கிறார்கள். இது, ஒப்புதலுக்காக அதே ஆளுநருக்குத்தானே போகும்... வேண்டுமென்றே ஆளுநரை வம்புக்கிழுக்கிறார்கள். ஆளுநர்மீது அதிருப்தியிருந்தால், குடியரசுத் தலைவரிடம் முறையிட வேண்டும். அதைவிடுத்து, ஆளுநரைத் தமிழ்நாட்டுக்கான அச்சுறுத்தல் என்பதும், அதிகாரத்தைப் பறிப்பதும் போகாத ஊருக்கு வழிசொல்வது போன்றதுதான். எது முறையானதோ அதைத்தான் குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ செய்ய முடியும். மத்திய அரசை எதிர்ப்பதற்கு, ஆளுநரையும் - பா.ஜ.க-வையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது தி.மு.க!”

நரேந்திரன்
நரேந்திரன்
பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

பி.டி.அரசகுமார், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க.

“கனிமொழி சொல்லியிருப்பது 100-க்கு 200 சதவிகிதம் உண்மை. தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் தமிழக பா.ஜ.க-வினருக்கு உண்மையான அக்கறை இருக்குமென்றால், தமிழகத்துக்கான தேவைகளை ஒன்றிய அரசிடம் கேட்டுப் பெற்றுக்கொடுக்கலாமே... அதற்கான வாய்ப்புகள் இருந்தும், பா.ஜ.க அதைப் பயன்படுத்த மறுப்பதால், கண்டிப்பாகத் தமிழகத்துக்கு பா.ஜ.க ஓர் அச்சுறுத்தல்தான். அதற்குத் தகுந்தாற்போல ஆளுநரின் குரல் பா.ஜ.க-வின் குரலாகத்தான் ஒலிக்கிறது. தமிழகத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல், ‘இந்தி ராஜ்ஜிய மொழியாக வேண்டும்’ என்கிறார் ஆளுநர். இப்படிப் பேசினால் பிரச்னை வரும் எனத் தெரிந்துதான் பேசுகிறார். முதல்வர் மீதும், அரசின் மீதும் குறைகூற முடியவில்லை. அதனால், பதற்றமான சூழலை உருவாக்க முன்னுக்குப் பின் முரணானவற்றைப் பேசுகிறார் ஆளுநர். தி.மு.க தலைவரிலிருந்து இன்று ஒட்டுமொத்த மக்களின் தலைவராக மாறிக்கொண்டிருக்கிறார் முதல்வர். ஏற்கெனவே, தென் மாநில முதல்வர்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்திவிட்டார். அடுத்ததாக, வட மாநிலங்களிலும் முதல்வரின் புகழ் வளர்கிறது, இந்த அமோக வரவேற்பை, சீர்குலைப்பதற்காகத் திட்டமிட்டு பா.ஜ.க செயல்படுகிறது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism