Published:Updated:

ஒன் பை டூ:

கே.பி.ராமலிங்கம், கோபண்ணா
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.ராமலிங்கம், கோபண்ணா

“அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள், நாடு முழுவதும் பா.ஜ.க-வின் யுகமாகவே இருக்கும்!” என்று அமித் ஷா பேசியிருப்பது?

ஒன் பை டூ:

“அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள், நாடு முழுவதும் பா.ஜ.க-வின் யுகமாகவே இருக்கும்!” என்று அமித் ஷா பேசியிருப்பது?

Published:Updated:
கே.பி.ராமலிங்கம், கோபண்ணா
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.ராமலிங்கம், கோபண்ணா

கே.பி.ராமலிங்கம், தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர்

“அவர் சொன்னதில் நியாயம் இருக்கிறது. இந்தியாவின் எதிர்கால வரலாற்றை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார். இன்று இந்தியாவிலிருக்கும் அரசியல் கட்சிகளில் ஊழலற்ற நிர்வாகம், தன்னலமற்ற தியாகம், தேசபக்தி இம்மூன்றையும் கொண்ட ஒரே அரசியல் இயக்கம் பா.ஜ.க மட்டும்தான். கடந்த எட்டு ஆண்டுக்காலமாக, உலக அரங்கில் இந்தியா பொருளாதார நிலையிலும், வணிகத் தொடர்பிலும், வெளியுறவுக் கொள்கையிலும் மேலோங்கியிருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். பிரதமர் மோடியின் தேசத்தின் மீதான அக்கறையையும், ஈடுபாட்டையும் உலக நாடுகள் வரவேற்கின்றன. இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு இந்தியா வளர்ச்சியடைந்திருக்கிறது. பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் இவ்வளவு ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்போடும் பணியாற்றும் தொண்டர்கள் கிடையாது. தேசியமும் தெய்விகமும் பா.ஜ.க-வின் இரண்டு கண்கள். இங்கு தெய்விகம் என்பது, அனைத்து மதத்தினரும் எந்தத் துன்புறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான். தேசத்தின் பாதுகாப்பின் மீதும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பா.ஜ.க முனைப்பான அக்கறைகொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் நிலையில், அடுத்த 100 ஆண்டுகளுக்குக்கூட பாரத தேசம் பா.ஜ.க-வின் வசம்தான். அதைத்தான் அமித் ஷா சொல்லியிருக்கிறார். அவரின் கருத்தை அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்!”

ஒன் பை டூ:
ஒன் பை டூ:

கோபண்ணா, காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர்

“ஜனநாயக விரோதமான பாசிசப் பேச்சு இது. இந்தியாவைச் சர்வாதிகாரமாக ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, தேர்வுசெய்யப்பட்ட ஆட்சிகளைக் கலைத்து, புதிய ஆட்சிகளை அமைப்பதென்பது இவர்களின் வழக்கமான ஒன்றாகிப்போனது. பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் இவர்களை இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்பில் அமரவைத்தார்கள். ஆனால், வளர்ச்சித் திட்டங்கள் எதையுமே இவர்கள் நிறைவேற்றவில்லை. மாறாக, நாட்டில் கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்குக் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு முதல் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் மலைபோல் உயர்ந்திருக்கிறது. மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி வாக்கு அரசியல் செய்வதுதான் குஜராத் மாடல். அதைச் செய்துதான், குஜராத்தில் 11 வருடங்கள் மோடி முதல்வராக இருந்தார். அதை நாடு முழுவதும் செயல்படுத்த முயன்றுவருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த வலுவான நாட்டை காந்தியும் நேருவும் அமைத்திருக்கிறார்கள். மக்களைப் பிளவுபடுத்தி வாக்கு வாங்குவது இங்கு நடக்காத ஒன்று. 1984-ல் 414 இடங்களில் வரலாற்று வெற்றிபெற்று ஆட்சியமைத்த ராஜீவ் காந்தியால், அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்க முடியவில்லை. அதேநிலை வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கும் உண்டாகும்!”