ஒரு கையில் கத்தியைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையைக் குலுக்கியபடி இருவர் நட்புடன் பேச முடியுமா? இந்தியாவும் இலங்கையும் இப்போது அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கின்றன. இருவர் கைகளிலுமே கத்திகள். ‘இலங்கைத் தமிழர்களின் நலன்’ என்ற கத்தியைக் கையில் பிடித்துக்கொண்டு இந்தியா பேசுகிறது. ‘சீனா’ என்ற கத்தியை வைத்துக்கொண்டு மர்மச் சிரிப்புடன் இலங்கை பேசுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெறுவார் என்பதை இந்தியா உணர்ந்திருந்தது. எனவே, அவருடன் நட்பு பாராட்ட முடிவுசெய்தது.

அதற்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே குடும்பத்தின் அதிகாரத்தை வீழ்த்திவிட்டு சிறீசேனா அதிபராக வென்றதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. ராஜபக்சே குடும்பத்தின் சீனப் பாசம் இந்தியாவுக்குப் பிடிக்கவில்லை. மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது சீனக் கடற்படையைச் சேர்ந்த நீர்முழ்கிக்கப்பல் இலங்கைக்கு வந்தது. அப்போது பாதுகாப்புத் துறைக்கு பொறுப்புவகித்த கோத்தபய ராஜபக்சேவை, ‘எப்படி நீங்கள் இதை அனுமதிக்கலாம், ஏன் இந்தத் தகவலை எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை?’ என டெல்லிக்கு அழைத்து இந்தியா கண்டித்தது.

ராஜபக்சே குடும்பத்துக்கு எதிரான கூட்டணியை இந்தியா உருவாக்க, அந்தச் சம்பவமும் ஒரு காரணமாக இருந்தது. அதன் பிறகு இந்தியாவை விமர்சனம் செய்பவராக கோத்தபய ராஜபக்சே மாறினார். ஐந்து ஆண்டுகளில் நிலைமை தலைகீழாகி, இப்போது அவரே அதிபராகவும் ஆகிவிட்டார். இலங்கை அதிபராக யார் ஜெயித்து பதவி ஏற்றாலும், அவர்களின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கு வருவதாகவே இருக்கும். ‘டெல்லிக்கு காவடி எடுக்கும்’ இந்த வழக்கத்தை கோத்தபயவும் மாற்றவில்லை.

அதற்கு முன்பு சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கோத்தபய ஜெயித்ததும் அவரைச் சென்று சந்தித்த முதல் வெளிநாட்டுப் பிரதிநிதி, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்தான். சீனாவிலிருந்து எவரும் வருவதற்கு முன்பாக, முந்திக்கொண்டு அவர் போய் வாழ்த்து தெரிவித்தார். இலங்கையை இதுவரை ஆட்சிசெய்த எந்த அதிபருக்கும் இப்படி ஒரு மரியாதையை இந்தியா கொடுத்ததில்லை. ஆனாலும், மீசையில் மண் ஒட்டாத கதையாக ‘இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கு அதிகாரப் பகிர்வு தர வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது’ என்று ஜெய்சங்கர் டெல்லி திரும்பிய பிறகு ஓர் அறிக்கை வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இலங்கைத் தமிழர்கள் குறித்து இந்திய அரசுத் தரப்பிலிருந்து வெளியாகும் அறிக்கை இது.

ராஜபக்சே குடும்பத்துடன் இணக்கமாக இருக்க இந்தியா விரும்புவதை, ஜெய்சங்கரின் பயணம் உணர்த்தியது. அதே சமயம், ‘எங்களைப் பகைத்துக் கொண்டால் இலங்கைத் தமிழர்கள் பிரச்னையைக் கையில் எடுத்து உங்களுக்கு நெருக்கடி கொடுப்போம்’ என கோத்தபயவுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் மத்திய அரசின் அறிவிப்பு இருந்தது.

இந்தியா நீட்டிய நட்புக்கரத்தை கோத்தபய பற்றிக்கொண்டிருக்கிறார். மூன்று நாள் பயணமாக அவர் முதலில் வந்தது இந்தியாவுக்குத்தான். ஆனால், அவர் இலங்கை திரும்பிய இரண்டே நாளில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கொழும்பு போய் அவரைச் சந்தித்தார். அடுத்ததாக சீனாவுக்கும் போகிறார் கோத்தபய.

அவரின் நோக்கம் தெளிவானது. அது, இந்தியாவைக் காட்டி சீனாவை வழிக்குக் கொண்டுவருவது. விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் இலங்கை நிகழ்த்திய கொடூரங்கள் காரணமாக, அந்த நாட்டுக்குக் கடன் தர மேற்கு நாடுகளோ, உலக வங்கியோ முன்வரவில்லை. அந்தச் சூழலில் சீனா பெரிய அளவில் கடன் கொடுத்தது. இலங்கைக்கு 1,44,500 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது சீனா. இப்போதும் அங்கு நெடுஞ்சாலை களையும் கொழும்பு துறைமுக நகரையும் சீனாவே நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது.

வாங்கிய கடனையோ, வட்டியையோ திருப்பித் தர இயலாத நிலையில் இலங்கை இருக்கிறது. அதனால் சீனா கட்டிக் கொடுத்த ஹம்பந்தோடா துறைமுகத்தையும், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலத்தையும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு சீனாவுக்கே கொடுத்து விட்டது இலங்கை. அங்கு கடற்படைத்தளம் அமைக்க சீனா முயல்வதாக தகவல்கள் வந்தன. சீனாவின் கடன் வலையில் மீள முடியாமல் சிக்கியிருக்கும் சூழலில், இன்னும் கடன் வாங்க முயல்கிறார் கோத்தபய ராஜபக்சே. அத்துடன், குத்தகையாகக் கொடுத்த துறைமுகத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் திட்டமிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சே ஆட்சிக்காலத்தில், ஹம்பந்தோடா துறைமுகத்தின் அருகிலேயே ஒரு சர்வதேச விமானநிலையம் கட்டப்பட்டது. நஷ்டத்தில் இயங்கியதால் அது மூடப்பட்டது. அதை இந்தியா ஏற்று நடத்த வேண்டும் என்பது இலங்கையின் கோரிக்கை. அதாவது, அந்த நஷ்டத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். இந்தியா ஏற்கெனவே அங்கு மின் நிலையங் களையும் வீடுகளையும் கட்டிவருகிறது. சமீபத்தில் கோத்தபய இந்தியா வந்தபோது, புதிதாக 3,200 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உறுதியும் அளித்திருக்கிறது.

அதை ஏற்றுக்கொண்ட அவர், ‘‘இந்தியாவுக்குச் சந்தேகம் எழும் அளவுக்கு எந்த உறவையும், எந்த நாட்டுடனும் வைத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் இந்தியாவின் நட்பு நாடு. இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் செய்ய மாட்டோம்’’ என்று சொல்லியிருக்கிறார்.

அதேசமயம் டெல்லியில் அளித்த பேட்டியில் கோத்தபய ராஜபக்சே சொல்லியிருக்கும் இன்னொரு விஷயம் முக்கியமானது. `பிரதமர் மோடி, மாகாண கவுன்சில்களை அமைத்து தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை அளிக்கும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கு மாறாக எதையும் என்னால் நிறைவேற்ற முடியாது’ என அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

நட்பான ஓர் அரசு அங்கு இருந்த நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ‘பொறுமை யாக இருங்கள்’ என உபதேசம் செய்தது இந்தியா. இப்போது டெல்லியிலேயே இப்படிச் சொல்லிவிட்டுப் போயிருக்கும் ஓர் அதிபரை தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு, பகடைக்காயாக மட்டுமே இலங்கைத் தமிழர்களின் உரிமையைப் பற்றி இந்தியா பேசக்கூடும்.

‘பெரும்பான்மை சிங்களவர்களுக்கு மட்டுமே நான் அதிபர்’ என்பதை மறைமுகமாக இல்லாமல் நேரடியாகவே உணர்த்துகிறார் கோத்தபய ராஜபக்சே. அவரின் அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமர் ஆகி, இப்போது அமைத்திருக்கும் 51 பேர்கொண்ட அமைச்சரவையில், இரண்டு தமிழர்கள் இருக்கிறார்கள், முஸ்லிம்கள் எவரும் இல்லை.

`சிங்கள பௌத்தத்தின் அடையாளமாகக் கருதப்படுபவன், மன்னன் துட்டகைமுனு. அனுராதபுரத்தைத் தலைநகரமாகக்கொண்டு ஆண்ட இவன்தான் இங்கு பௌத்த மதத்தைப் பரப்பியவன்’ என இலங்கையின் வரலாற்றுக் காவியமான `மகா வம்சம்’ குறிப்பிடுகிறது. தமிழ் மன்னனான எல்லாளனை வெற்றிகொண்ட வீரனாக, சிங்களவர்கள் கையில் அதிகாரம் வந்ததற்கு அடையாளமாக மன்னன் துட்டகைமுனு காட்டப்படுகிறான். அவன் கட்டிய கோயிலில்தான் கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பதவியேற்றார்.

தன்னிடம் தோற்றுப்போன தமிழ் மன்னன் எல்லாளனின் வீரத்தைப் போற்றி, அவனுக்கு துட்டகைமுனு சிலை வைத்ததாக கதைகள் உண்டு. கோத்தபய ராஜபக்சே அதைப் படித்திருப்பாரா என்பது தெரியவில்லை.