Published:Updated:

'டூல்கிட்' வழக்கில் திஷா ரவி கைது! - சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் முயற்சியா?

திஷா ரவி
திஷா ரவி

"மக்களின் பிரச்னைகளுக்காக கட்சி சார்பற்ற, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் திஷா ரவிக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். அதிகாரத்தின் மூலம் அவர்களை ஒடுக்கிவிடலாம் என்று அரசு நினைப்பது எல்லாம் நடக்காத காரியம்…"

சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள மற்றுமொரு தாக்குதல் எனவும் அவர் பிரிவினை வாதிகளுடன் இணைந்து நாட்டில் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்கிறார் எனவும் திஷா ரவிக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. சமூகச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது அரசுக்கு எதிராக போராட நினைப்பவர்களை அடக்கும் ஒரு நடவடிக்கை எனவும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

கனகராஜ் சிபிஎம்
கனகராஜ் சிபிஎம்

இது தொடர்பாக சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் கனராஜிடம் பேசினோம்

"பா.ஜ.கவுக்கு ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இல்லை. ஜனநாயகம் என்பது ஒரு மேற்கத்திய கலாசாரம். அது இந்தியாவுக்கு உதவாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை. ஏதாவது ஒரு சிறிய பிரச்னையை பெரிதாக்குவதன் பின்னணியில் ஒரு பெரிய பிரச்னையை முக்கியத்துவம் இல்லாதது ஆக்குவது தான் பா.ஜ.கவின் கொள்கையே. அப்படித்தான் திஷா ரவி கைதின் மூலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகளின் பிரச்னைகளை திசை திருப்பி வருகிறது பா.ஜ.க. ஒரு காலத்தில் புனிதாமாக இருப்பது மற்றொரு காலகட்டத்தில் புனிதம் இல்லை என முடிவு செய்கிறோம். சமூக இயக்கங்கள், தனிமனிதரின் விவாதம், உரையாடல்கள் மூலமாக ஒரு கருத்து தொடர்ந்து செழுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், பா.ஜ.கவினர் இதற்கு எல்லாம் இடம் கொடுக்கத் தயாராக இல்லை.

என்னை ஆதரிக்கவில்லை என்றால் நீ தேச துரோகி, என்னை எதிர்த்து யார் பேசினாலும் அடிப்போம். அதே நேரத்தில் தகுதியே இல்லை என்றாலும் எங்கள் கருத்துடன் ஒத்துப் போனால் நாங்கள் ஆதரிப்போம் என்பதுதான் பா.ஜ.க சொல்ல வருவது. போராட்டம் நடத்துபவர்கள் அனைவரும் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்றால் பா.ஜ.க இதுவரை போராட்டம் நடத்தியதே இல்லையா?

எதிலும் நேர்மையற்ற அரசாங்கம் தான் சொல்லும் பொய் மட்டும் செய்தியாக வர வேண்டும் என நினைக்கிறது. அதை எதிர்த்துக் கேட்டால் தேச துரோகியாக முத்திரை குத்தப்படுகிறது. மக்கள் இயக்கங்கள் எப்போதும் சர்வாதிகார நடவடிக்கைகளை முடித்து வைத்துள்ளன. அது நிச்சயம் தங்களுக்கும் நடக்கும் என்பதை பா.ஜ.க உணர வேண்டும்" என்கிறார்.

வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்
வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்

"அரசின் திட்டங்களை எதிர்க்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதற்காகவே போராடுபவர்கள் மீது தேசத்துக்கு எதிரானவர்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்ற முத்திரைகளை குத்தி அவர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்க பா.ஜ.கவினர் முயல்கிறார்கள்" என திஷா ரவி கைது தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்து கொண்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்...

"2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூழலியல் அமைப்புகள், ஆய்வாளர்கள் மீதான தாக்குதலைக் கையில் எடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமல்ல இயற்கை அது சார்ந்த உற்பத்திகளிலும் தனியார் பங்களிப்பை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தாக்குதல்களை பா.ஜ.க அரசு நிகழ்த்தி வருகிறது. அதனால் தான் தொழில்துறை முதலீடு, சூழலியல் பாதுகாப்பு சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மத்திய பா.ஜ.க அரசு செய்துள்ளது.

வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னைகள் எழும்போது மக்கள் மத்தியில் பெரிய எழுச்சி நடந்துகொண்டே தான் இருந்திருக்கிறது. ஸ்டெர்லைட், 8 வழிச் சாலை, மீத்தேன் திட்டங்கள், அணு உலைகள் போன்ற திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் அதற்கான உதாரணங்கள் தாம். மீண்டும்… மீண்டும்… அரசு மூலமே தங்கள் வாழ்வாதாரம் சார்ந்து பிரச்னைகள் எழுவதால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற வேதனையில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் பிரச்னைகளுக்காக கட்சி சார்பற்ற, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் மூலம் அவர்களை ஒடுக்கிவிடலாம் என்று நினைப்பது எல்லாம் நடக்காத காரியம்" என்கிறார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

"21 வயது பெண்ணைக் கைது செய்யலாமா என்கிறார்கள். தனியார்மயம் ஆக்க பா.ஜ.க அரசு முயல்கிறது என்றேல்லாம் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். எந்த ஓர் அரசையும் விமர்சிப்பது தவறே இல்லை. அந்த விமர்சனம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர அரசைத் தடுமாறச் செய்யும் விதமாக, அதிகாரத்தில் இருந்தும் நீக்கும் விதமாக இருக்கக் கூடாது" எனக் கூறும் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,

"இந்த விவகாரத்தில் திஷா ரவி தொடர்ந்து சில தீய சக்திகள் அந்நிய நாட்டில் இருக்கும் சில பிரிவினைவாதிகளுடன் இணைந்து இந்தியாவைப் பிரிக்க சதித்திட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது பல்வேறு விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

`டூல் கிட்’ வழக்கு... திஷா ரவி கைது ஏன்?; டெல்லி போலீஸின் குற்றச்சாட்டுகள்! - என்ன நடந்தது?

இந்தியாவில் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைப் பயன்படுத்தி மக்களிடையே வன்முறையைத் தூண்டுவது, இந்திய இறையாண்மைக்கு, அரசுக்கு எதிராக எப்படிப் பேசுவது என்ற திட்டங்களை அந்நிய சக்திகளுடன் இணைந்து திஷா ரவி தீட்டியுள்ளார் என்பதெல்லாம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

திஷா ரவி போன்றவர்கள் பா.ஜ.க அரசின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு வெறுப்பை ஏற்படுத்தி, வன்முறையைத் தூண்டிவிட முயல்கிறார்கள். தாங்கள் சார்ந்த சித்தாந்தங்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்பதற்காகவே அந்த அரசை எதிர்ப்பது எல்லாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்கிறார்

அடுத்த கட்டுரைக்கு