Published:Updated:

`700 கோடி கேட்டேன்; 1,000 கோடி என்றார்! -எடியூரப்பாவுக்கு செக் வைக்கும் தகுதிநீக்க எம்.எல்.ஏ

ஆதரவளிக்க, தங்களுக்கு எடியூரப்பா ஆயிரம் கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

நாராயண கௌடா - எடியூரப்பா
நாராயண கௌடா - எடியூரப்பா

கர்நாடகாவில், கடந்த வருடம் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அங்கு தொடர் அரசியல் குழப்பங்கள், பிரச்னைகள் தீராமல் நீடிக்கின்றன. கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 225 இடங்களில் 113ல் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற அடிப்படையில் காங்கிரஸ், பா.ஜ.க, ஜேடிஎஸ் ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தன.

கர்நாடகா சட்டமன்றம்
கர்நாடகா சட்டமன்றம்

தேர்தலின் முடிவில் பா.ஜ.க 105 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும் ஜேடிஎஸ் 34 இடங்களிலும் வெற்றிபெற்றன. மூன்று கட்சிகளில் யாருக்கும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், அங்கு கூட்டணி தொடர்பான சர்ச்சை ஆரம்பித்தது. இதில் முந்திக்கொண்ட காங்கிரஸ், ஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்து, அவர்களுக்கே முதல்வர் பதவியையும் விட்டுக்கொடுத்தது. இதன் காரணமாக ஜேடிஎஸ்ஸின் குமாரசாமி, கர்நாடகாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அவரின் ஆட்சிக்காலத்திலும் உள்கட்சிப் பூசல், கூட்டணி மோதல், சித்தராமையா விமர்சனம் போன்ற பல்வேறு அரசியல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பா.ஜ.க, காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுத்து, அவர்களை ராஜினாமா செய்யவைத்தது. இதன் விளைவாக, போதுமான பெரும்பான்மை இல்லாததால் குராமசாமியின் ஆட்சி முடிவுக்குவந்தது. இதையடுத்து, அங்கு அதிகப் பெரும்பான்மை உள்ள பா.ஜ.க-வின் எடியூரப்பா, கர்நாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்றார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

ராகுல் காந்தி - குமாரசாமி
ராகுல் காந்தி - குமாரசாமி

இதைத் தொடர்ந்து ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி பிரிந்தது. எடியூரப்பா பதவியேற்ற பிறகு, கர்நாடகாவில் அரசியல் பிரச்னைகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் தற்போது எடியூரப்பாவாலேயே ஒரு புதிய பிரச்னை உருவாகியுள்ளது. தன் கட்சி நிர்வாகிகளிடம் எடியூரப்பா பேசிய விஷங்கள் அடங்கிய ஆடியோ வெளியாகி காங்கிரஸாரைக் கொந்தளிக்கவைத்தது. அந்த ஆடியோவில், “தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ-க்களும் என்னை நம்பி வந்தவர்கள். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். 17 எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க தேசிய தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் மும்பையில் இருந்தனர். அப்போது அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்” என எடியூரப்பா பேசுவதுபோல அந்த ஆடியோ இருந்தது.

`அமித் ஷாவால்தான் எல்லாம் நடந்தது’- பா.ஜ.க ரகசியத்தைப் போட்டு உடைத்த எடியூரப்பா?

ஆடியோமீது விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடியூரப்பா பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துவருகிறது. இந்தப் பிரச்னைகள் ஒரு புறம் நீடிக்க, மறுபுறம், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ -க்களில் ஒருவர், எடியூரப்பா தனக்கு ஆயிரம் கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகக் கூறியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, ஏஎன்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம், கர்நாடக அரசியலில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பா
எடியூரப்பா

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ நாராயண கௌடா பேசியிருப்பதாவது, “குமாரசாமி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவர் என்னிடம் வந்து ‘எடியூரப்பா அழைத்தார்’ என்று கூறினார். அதை ஏற்று நானும் அதிகாலை 5 மணிக்கு எடியூரப்பாவின் வீட்டுக்குச் சென்றேன். நான் அவரது வீட்டுக்குள் நுழையும்போது, அவர் பூஜை செய்துகொண்டிருந்தார். அது முடிந்ததும் நேராக என்னிடம் வந்தார். அவரைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக நான் எழுந்து நின்றேன்.

எடி 4.0... இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறார் எடியூரப்பா?!

அமருங்கள் எனக் கூறிய அவர், உடனடியாக ‘'நான் மீண்டும் முதல்வராக வேண்டும் அதற்கு உங்களின் ஆதரவு தேவை'’ என்றார். அவரின் பேச்சு எனக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது. ‘'நான் உங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், என் கிருஷ்ணராஜபேட் தொகுதியை மேம்படுத்த 700 கோடி ரூபாய் வேண்டும்'' எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘'நீங்கள் கேட்கும் பணத்தைவிட இன்னும் 300 கோடி ரூபாய் அதிகமாக, 1000 கோடி ரூபாயாகத் தகுகிறேன். எனக்கு உதவுங்கள்'’ என்று கூறினார். பிறகு, அவருக்கு உதவுவதாக உறுதியளித்து, சொன்னபடி செய்தேன். ஆனால், தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எடியூரப்பா தெரிவித்துள்ளது வேதனையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நாரயண கௌடா
நாரயண கௌடா
FB/@MLAkcnarayanagowda

“எனக்கு மட்டுமில்லாது, தகுதிநீக்கம் செய்த அனைத்து எம்.எல்.ஏ -க்களுக்கும், தங்கள் தொகுதி மேம்பாட்டிற்காகப் பணம் வழங்கப்பட்டது. நாங்கள் அனைவரும் மாண்டியாவில் வைத்து எடியூரப்பாவுக்கு உதவுவதாக உறுதியளித்தோம்” என்றும் நாராயண கௌடா கூறியுள்ளார். இவரின் பேச்சு, கர்நாடக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.