Published:Updated:

கர்நாடகத் தேர்தல்: 'பொம்மை அரசின் மீதான அதிருப்தி' - கார்கே கூட்டத்தில் தலைவர்களுக்குக் 'குட்டு'

மல்லிகார்ஜுன கார்கே

``ஊழல் குற்றச்சாட்டுகளால் பொம்மை அரசின் மீது மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இருப்பினும், இதைப் பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றிக்கான வாய்ப்பை உயர்த்தத் தவறிவிட்டது" என்று கர்நாடக தலைவர்களிடம் கட்சி மேலிடம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

கர்நாடகத் தேர்தல்: 'பொம்மை அரசின் மீதான அதிருப்தி' - கார்கே கூட்டத்தில் தலைவர்களுக்குக் 'குட்டு'

``ஊழல் குற்றச்சாட்டுகளால் பொம்மை அரசின் மீது மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இருப்பினும், இதைப் பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றிக்கான வாய்ப்பை உயர்த்தத் தவறிவிட்டது" என்று கர்நாடக தலைவர்களிடம் கட்சி மேலிடம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
மல்லிகார்ஜுன கார்கே

அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வி, தலைவர்கள் போர்க்கொடி போன்றவற்றால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சோர்வைச் சந்தித்துவந்தனர். மறுபுறம் பாஜக தேர்தல்களில் வெற்றிபெற்று வந்தது. இதே நிலை நீடித்தால் காங்கிரஸ் மேலும் மோசமான நிலைக்குச் சென்றுவிடும் என்று அரசியல் நோக்கர்களும், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களும் கருத்து தெரிவித்துவந்தனர். இதை உணர்ந்துகொண்ட காங்கிரஸ் தலைமை, கட்சியைப் பலப்படுத்தத் திட்டமிட்டது. இதன் ஒரு பகுதியாகத் தேர்தல் நடத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கார்கேவைத் தேர்வுசெய்தது.

மேலும், ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையும் தொண்டர்களிடத்தில் புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தாலும், இமாச்சலில் வெற்றிபெற்றிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மட்டுமில்லாமல முக்கியத் தலைவர்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. இதனால் விரைவில் நடக்கவிருக்கும் கர்நாடகத் தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காகப் பல்வேறு திட்டங்களை கார்கே வகுத்துவருகிறார். குறிப்பாக கல்யாண் கர்நாடகப் பகுதியின் வளர்ச்சிக்காக 10 அம்ச திட்டங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.

ராகுல் யாத்திரை
ராகுல் யாத்திரை

இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், டெல்லியில் கடந்த 12-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலு, கர்நாடக மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில பிரசாரக்குழு தலைவர் எம்.பி.பட்டீல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் பேசிய சுனில், "ஊழல் குற்றச்சாட்டுகளால் கர்நாடக மாநில மக்கள் பொம்மை அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் இதைப் பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றிக்கான வாய்ப்பை உயர்த்தத் தவறிவிட்டது. பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகா வழியாகச் சென்றதால், கட்சியின் நடவடிக்கைகளில் வேகம் ஏற்பட்டது. இருப்பினும், அது விரைவில் தணிந்தது. ஆளும் ஆட்சியின் தவறான செயல்களை அம்பலப்படுத்தி வெற்றிக்கான களத்தை அமைக்க வேண்டும்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

மேலும் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாவட்டம்தோறும் 'ஜன் சங்கல்ப யாத்திரை' நடத்தப்பட்டுவருகிறது. ஜனதா தளம் (எஸ்) கட்சி 'பஞ்சரத்னா யாத்திரை' மூலமாகப் பிரசாரம் செய்துவருகிறது. அத்தகைய பிரசாரத்தை காங்கிரஸ் இன்னும் தொடங்கவில்லை. பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெரிய நிகழ்வுகள் நடத்தப்படவில்லை" என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் ஜனவரி நடுப்பகுதிக்குள் குறைந்தபட்சம் 150 வேட்பாளர்களை இறுதிசெய்ய வேண்டும் என்று தேசியத் தலைவர்களை மாநிலத் தலைவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த, கார்கே... `சரியான வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய விரைவில் தேர்தல்குழு அமைக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகா
கர்நாடகா

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அளித்த பேட்டியில், "கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராவது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அடுத்த 75 நாள்களுக்குள் கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகளை எடுத்திருக்கிறோம். இதில் ஜனவரி முதல் வாரத்தில் கூட்டு யாத்திரை தொடங்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டு யாத்திரை 45 முதல் 50 நாள்கள் வரை நடைபெறும்.

மேலும் 224 தொகுதிகளில் இந்த யாத்திரை நடைபெறவிருக்கிறது. இந்த யாத்திரையின்போது, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், 40 சதவிகித கமிஷன் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவிருக்கிறோம். வரும் 30-ம் தேதி விஜயாப்புரா, ஜனவரி மாதம் 2-ம் தேதி உப்பள்ளி, 8-ம் தேதி சித்ரதுர்காவில் பிரமாண்டமான முறையில் கட்சியின் மாநாடுகளை நடத்த முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.