Published:Updated:

கருத்து கேட்பதில்லை... ஒடுக்கப் பார்க்கிறார்கள்... கொதிக்கும் தி.மு.க தோழமை கட்சிகள்!

தோழமைக் கட்சிகள்
பிரீமியம் ஸ்டோரி
தோழமைக் கட்சிகள்

தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கொள்கைரீதியாக எடுக்கும் முடிவுகளை, கூட்டணிக் கட்சியினருடன் கலந்தாலோசித்து எடுத்தார்கள்.

கருத்து கேட்பதில்லை... ஒடுக்கப் பார்க்கிறார்கள்... கொதிக்கும் தி.மு.க தோழமை கட்சிகள்!

தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கொள்கைரீதியாக எடுக்கும் முடிவுகளை, கூட்டணிக் கட்சியினருடன் கலந்தாலோசித்து எடுத்தார்கள்.

Published:Updated:
தோழமைக் கட்சிகள்
பிரீமியம் ஸ்டோரி
தோழமைக் கட்சிகள்

``தோழமைக் கட்சிகளுடனான தி.மு.க-வின் அணுகுமுறையை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஆட்சிக்கு வந்ததற்குப் பின்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஆட்சிக்கு வந்த பிறகு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட தோழமைக் கட்சிகளுக்குத் தருவதில்லை. இன்னும் சொல்லப்போனால் எங்களைத் திட்டமிட்டு ஒடுக்குகிறார்கள்’’ எனத் தங்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துகிறார்கள், ஆளும் தி.மு.க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர்!

ஆளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை தொடர்கிறது. சட்டமன்றத் தேர்தலின்போதே சீட்டுப் பங்கீட்டு விஷயத்தில் கூட்டணிக் கட்சிகளிடம் தி.மு.க கடுமையாக நடந்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், வெளிப்படையாக எந்தவோர் அதிருப்தியையும் அப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்தவில்லை. அதேபோல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க-வினரே போட்டியிட்டு வெற்றிபெற்றது சிறு சிறு சலசலப்புகளை உண்டாக்கியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட, முதல்வர் உடனடியாகத் தலையிட்டு தன் கட்சி உறுப்பினர்களுக்கு அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தார். இப்படித் தேர்தல் காலங்களில் மட்டுமே கூட்டணிக்குள் சிறு சிறு அதிருப்திகள் எழுந்துவந்தன. ஆனால் சமீபகாலமாக, `நிர்வாகரீதியாக, கொள்கைரீதியான தி.மு.க-வின் செயல்பாடுகளில் எங்களுக்குக் கடும் அதிருப்தி’ என்கிறார்கள் கூட்டணிக் கட்சிகள் வட்டாரத்தில். கூட்டணிக் கட்சிகளிலுள்ள முக்கியமான சில நிர்வாகிகளிடம் விசாரித்தோம்...

கருத்து கேட்பதில்லை... ஒடுக்கப் பார்க்கிறார்கள்... கொதிக்கும் தி.மு.க தோழமை கட்சிகள்!

``தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கொள்கைரீதியாக எடுக்கும் முடிவுகளை, கூட்டணிக் கட்சியினருடன் கலந்தாலோசித்து எடுத்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் போக்கு முற்றிலுமாக மாறிவிட்டது. கூட்டணிக் கட்சிகளைக் கண்டுகொள்வதே இல்லை. கூட்டங்களும் நடத்தப்படுவது இல்லை. கொள்கை முடிவுகளில் மட்டுமல்லாமல், இந்த ஆட்சி, நிர்வாகம் குறித்தும் எங்களிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படுவதில்லை. ஓராண்டு ஆட்சி நிறைவுக்குப் பிறகாவது எங்களிடம் கருத்து கேட்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இல்லை. சட்டமன்றத்திலும் பா.ம.க., பா.ஜ.க., அ.தி.மு.க உறுப்பினர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட எங்களுக்குக் கொடுப்பதில்லை. நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில்லை. எங்களை ஒடுக்கும்விதமான போக்கைத்தான் பார்க்க முடிகிறது தி.மு.க-விடம்.

நீட், புதிய கல்விக் கொள்கை போன்ற விஷயங்களுக்கு எதிராக, பல முன்னெடுப்புகளை இந்த அரசாங்கம் செய்கிறது. அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், தொழிலாளர் உரிமைகள், தொழிற்சங்க உரிமைகளைக் காவு வாங்கும் புதிய தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக இந்த அரசு பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிற்சங்கங்கள் அதைக் கையிலெடுத்துப் போராடத் தயாராகிவருகின்றன. ஒன்றிய அரசின் பல திட்டங்களை, கொள்கைரீதியாக தி.மு.க அரசு எதிர்க்கிறது. ஆனால், தொழில் சார்ந்து மத்திய அரசு கடைப்பிடிக்கும் அதே பாணியைத்தான் தமிழக அரசும் கடைப்பிடிக்கிறது. நம்முடைய 23 பொதுத்துறை நிறுவனங்களில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதை மீட்டெடுத்து மீண்டும் செயல்பட வைக்கவேண்டிய முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும். மின்சாரத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து, அவற்றை நொடிப்பு நிலைக்குச் செல்லாமல் பாதுகாக்க வேண்டும். எங்களுடன் ஆலோசனை நடத்தினால், இது போன்ற விஷயங்களில் எங்களின் கருத்துகளை எடுத்துவைக்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அதேபோல, அரசு கொண்டுவரவிருக்கும் பல திட்டங்கள், சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியிலுள்ள தொழிலதிபர்களுக்குத் தெரிகிறது. ஆனால், தோழமைக் கட்சி உறுப்பினர்களான எங்களுக்குத் தெரிவதில்லை. முழுமையாக வியாபார நலனுடன், முதலாளிகளுக்கான அரசாங்கமாக, இந்த அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறதோ என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுந்திருக்கிறது’’ என்றவர்கள், தொடர்ந்து வேறு சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

``கொள்கைரீதியாகவும் தோழமைக் கட்சிகளுடன் தி.மு.க கலந்தாய்வு செய்யவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. பகுத்தறிவு நாடான தமிழ்நாட்டில், மனிதனை மனிதன் தூக்கிச் சுமக்கும் ஒரு நிகழ்வுக்கு அரசு அனுமதியளித்திருக்கிறது. தடை செய்தபோது அதை ஆதரித்து நாங்கள் அறிக்கை வெளியிட்டோம். ஆனால், இந்தந்த விஷயங்களுக்காகத்தான் தடையை நீக்குகிறோம் என எங்களுக்கு எந்த விளக்கமும் தரவேயில்லை. மக்கள் மத்தியில் பதிலளிக்கவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். ஆனால், ஒருசில இடங்களில் மட்டுமே செய்தார்கள். பெரும்பாலான இடங்களில் அவர்களேதான் பதவிகளில் நீடிக்கிறார்கள். வழக்குகள் விஷயங்களிலும் அப்படித்தான்... எதிர்க்கட்சிகள், எதிர்க்கொள்கை உடையவர்கள் கடுமையாக விமர்சித்தால்கூட அரசின் காவல்துறை கண்டுகொள்வதில்லை. அதே தோழமைக் கட்சிகள், தோழமை அமைப்புகள், பொதுமக்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடினால்கூட வழக்குகள் பாய்கின்றன. நிச்சயமாக இந்தப் போக்கு ஆரோக்கியமானது அல்ல. தி.மு.க தலைமை நிச்சயமாகத் தங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்’’ என்றார்கள்.

கூட்டணிக் கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். ``எங்களுடைய எல்லா கருத்துகளுக்கும் அவர்கள் உடன்படுகிறார்கள் என்றால், அவர்கள் தி.மு.க-வில்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு” என்பதோடு முடித்துக்கொண்டார்.

விமர்சனத்துக்குக் காது கொடுப்பது தலைமைக்கு நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism