புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் நிலை ஆணையும் இருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் அதைக் கண்டுகொள்ளாமல் சாலைகளை அடைத்து பேனர்களை வைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் விழா தேதி முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு, பேனர்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடுவதை வழக்கமாகவைத்திருக்கின்றன. அப்படியும் அகற்றாத பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றிவருகின்றனர். சமீபத்தில் அமித் ஷா வருகைக்காக வைக்கப்பட்ட பேனர்களை நகராட்சியை அகற்றும்படி உத்தரவிட்ட நீதிமன்றம், அதற்கான தொகையை பேனர் வைத்தவர்களிடமே வசூலிக்கும்படி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன், ``இந்திய சுதந்திர தினத்தின் 75-வது அமிர்த ஆண்டு பெருவிழாவின் ஒரு பகுதியாக, பிரதமர் நரந்திர மோடி அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட 14 திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளோடு வரும் 31-ம் தேதி காணொளி வாயிலாக கலந்துரையாட உள்ளார். பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், ஆயூஷ்மான் பாரத் திட்டம், அம்ரூத் திட்டம், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம், முத்ரா திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெற்ற 20 பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் திட்டங்கள் மூலம் அவர்கள் பெற்ற பலன், திட்டங்களை மேலும் திறம்பட அமல்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், 100 சதவிகிதம் இந்தத் திட்டத்தின் பயன்கள் மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை பயனாளிகளிடம் கேட்கவே இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் ஆளுநர், முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி-க்கள் மற்றும் பொதுநல இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்திலும் நடக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 600 பயனாளிகளும், காரைக்காலில் 400 பயனாளிகளும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. ஆகவே, இந்த நிகழ்ச்சியில் பயனாளிகள் அனைவரும் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரியில் பேனர் வைக்கக் கூடாது எனச் சொல்லியிருக்கிறோம். வைத்தவர்கள் மீது வழக்கும் பதிவுசெய்துள்ளோம்.
90 சதவிகிதம் பேனர்களை அவற்றை வைத்தவர்களே அகற்றியுள்ளனர். அகற்றப்படாமல் இருந்த பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதையும் மீறி ஒருசில இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தரமாக பேனர்களை அகற்றுவதற்கு எனது தலைமையில் எல்லாத் துறைகளையும் சேர்ந்த பிரத்தேயக் குழு ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அடுத்த வாரத்திலிருந்து செயல்படத் தொடங்கும்” என்றார்.