Published:Updated:

`எனது பேச்சைக் கேட்டிருந்தால் முதல்வராகியிருப்பார்!' - சசிகலா குறித்து திவாகரன்

எம்.ஜி.ஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நின்று கட்சியைக் காப்பாற்றியவர்களில் அமைச்சர் செங்கோட்டையனை தவிர பலரும் இப்போது அ.தி.மு.க-வில் இல்லை.

dhivakaran
dhivakaran

மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள சீனிவாச மஹாலில், அண்ணா திராவிடர் கழகம் கட்சியின் மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் மற்றும் அவரது மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் பேசிய பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தினகரன் ஆகியோருக்கு எதிராக ஆவேசமாகப் பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் திவாகரன்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் திவாகரன்

கூட்டத்தில் பேசிய திவாகரன், ” இனிவரும் காலங்களில் தற்போதைய அ.தி.மு.க.வால் தேர்தலில் வெற்றிபெற சாத்தியமில்லை. அதனால் நீங்கள் மக்களிடம் செல்லுங்கள். தமிழகத்தில் நடக்கும் அனைத்தையும் விளக்கிக்கூறி கட்சியைப் பலப்படுத்துங்கள். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் நமது பலத்தை நிரூபிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நின்று கட்சியைக் காப்பாற்றியவர்களில் அமைச்சர் செங்கோட்டையனை தவிர பலரும் இப்போது அ.தி.மு.க-வில் இல்லை. இக்கட்டானசூழலில் சசிகலாவை காப்பாற்றவேண்டியது எனது கடமை. எனது பேச்சைக்கேட்டு அவர் ஒரு வருடம் அமைதியாக இருந்திருந்தால், கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புகளை சரி செய்திருப்போம்.

நிச்சயம் அவர் முதல்வராகவும் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்திருப்பார். சசிகலாவுக்கு வெளியில் இருந்து யாராவது தொந்தரவு செய்தால் அவர்களின் தலையை எடுத்திருப்பேன். உறவினராக இருப்பதால் கையை பிசைந்துகொண்டு இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். அரசியலில் பழிவாங்கல் கூடாது. சிதம்பரம் அப்படி பழிவாங்கும் வகையில் செயல்பட்டதால்தான், இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்று பேசினார்.

அப்போது நிர்வாகிகளில் ஒருவர் ஆவேசமாகக் கத்த, அவரின் அருகில் இருந்த நிர்வாகிகள் சத்தம் போட்ட நபரை அப்படியே அமுக்கி வெளியேற்றினர்.

கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள்

கூட்டத்தைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய திவாகரன், ” சசிகலா சகோதரி என்கிற வகையில், அவரை எல்லாவகையிலும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அவருக்குத் துரோகம் செய்தது, உறவினர் என்பதால் கையை பிசைந்துகொண்டு இருக்கிறேன். அக்கா சிறைக்கு போகும்போது 137 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களுடன் கட்சியை ஒப்படைத்து விட்டுச்சென்றார்.

இப்போது என்ன மிச்சம் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தினகரனிடம் 31 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். அவர்களும் உண்மை நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டதால் ஒவ்வொருவராகக் கட்சி மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க டி.டி.வி.தினகரன் தடையாக உள்ளார். அக்கா சிறையில் இருந்து வந்தாலும்கூட, தினகரனைத் தனிமைப்படுத்தினால் மட்டுமே சிதைந்து கிடக்கின்ற அ.தி.மு.க ஒன்றிணைய வாய்ப்புள்ளது'' என்றார்.

பேட்டியின் போது திவாகரன்
பேட்டியின் போது திவாகரன்

`தினகரனிடம் இருந்து வெளியே வருபவர்கள், தி.மு.க-வுடன் இணைகிறார்கள். இதற்குத் திவாகரன்தான் பணத்தை வாங்கிக்கொண்டு கலகம் செய்வதாக கூறப்படுகிறதே?' என்கிற கேள்விக்குப் பதிலளித்த திவாகரன், “எனக்குப் பணம் கொடுக்க இந்த உலகத்தில் எவனும் பிறந்து வரவில்லை. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஆனால். அவரால் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. அதனால்தான் அ.தி.மு.க அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்துள்ளது'' என்றவர்,

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஆனால் அவரால் கட்சியை கட்டுப்பாட்டில் வைக்கமுடியவில்லை.
திவாகரன்

`` மத்திய அரசுடன் அதிமுக சமரசம் செய்து கொள்வதும் முக்கிய காரணமாக இருக்கிறது. உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் விரக்தியில் அமைதியாக உள்ளனர். அதனால் தற்போதைய அ.தி.மு.க அடுத்தடுத்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புகள் இல்லை. அதேபோல், இனிமேல் நடிகர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் இருக்காது. அதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் போன்று தெரியவில்லை. நடிகர்களின் நிலைப்பாட்டையும் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்'' என்றார் திவாகரன்.