கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே சிவகுமாரை அமலாக்கத்துறை கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்திவந்த நிலையில், விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று கூறி நேற்று இரவு அவரைக் கைது செய்தது.
கர்நாடகாவில் தற்போது எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக சில எம்.எல்.ஏ-க்களின் பிரிவு காரணமாக ஆட்சியில் இருந்த ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மும்பையில் தங்கியிருந்தனர். அவர்களை மீண்டும் கட்சியின் பக்கம் இழுக்க அக்கூட்டணி சார்பில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார் சிவகுமார். எனினும் முயற்சி பலனளிக்காத நிலையில் ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பின்னர்தான் அவர் மீதான பணமோசடி வழக்கில் வேகம் காட்டப்பட்டதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ.க அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதாக குற்றம்சாட்டியது. தான் கைது செய்யப்பட்டது தொடர்பாக ட்வீட் பதிவிட்ட சிவகுமார், ``இறுதியாக என்னைக் கைது செய்யும் மிஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பா.ஜ.க நண்பர்களுக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பா.ஜ.க-வின் பழிவாங்கும் அரசியலுக்கு பலிகடா ஆகியவன் நான்” எனப் பதிவிட்டார். மற்றொரு ட்வீட்டில், ``எனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் யாரும் மனமுடைந்துபோக வேண்டாம். நான் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. எனக்கு கடவுள் மற்றும் நமது நாட்டின் நீதித்துறை மீது அபார நம்பிக்கை இருக்கிறது. சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பா.ஜ.க-வின் அரசியல் சதியில் இருந்து மீண்டு வருவேன்” என்று பதிவிட்டார்.
சிவகுமார் தொடர்ச்சியாக பா.ஜ.க-வை விமர்சனம் செய்துவர, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவோ, சிவகுமார் கைது செய்யப்பட்டத்தில் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவரின் விடுதலை செய்தியை கேட்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ``ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல நினைக்கிறேன். டி.கே சிவகுமாரின் கைது எனக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சி தரவில்லை. அவர் சீக்கிரம் வெளியே வர வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன்.

எனது வாழ்வில் நான் யாரையும் வெறுத்தது கிடையாது. யாரையும் காயப்படுத்தினதும் கிடையாது. சிவகுமார் விடுதலை ஆகிவிட்டார் என்ற செய்திதான் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும்” என்றார். காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில், எடியூரப்பாவின் இந்தக் கருத்து அனைத்துத் தரப்பினருக்கும் ஆச்சர்யத்தை தந்துள்ளது. சிவகுமாரின் கைதைக் கண்டித்து இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சி.