Published:Updated:

தேய்பிறையான தே.மு.தி.க? - நாளொரு பேச்சு பொழுதொரு முடிவு!

சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்

தலைமை இல்லாத போர்ப்படை சிதறி ஓடிவிடும் என்பதுபோல, விஜயகாந்த் என்ற தலைவர் இருந்தும் ஆக்டிவ்வாக இல்லாத காரணத்தால், தே.மு.தி.க இன்று தவியாய்த் தவிக்கிறது

தேய்பிறையான தே.மு.தி.க? - நாளொரு பேச்சு பொழுதொரு முடிவு!

தலைமை இல்லாத போர்ப்படை சிதறி ஓடிவிடும் என்பதுபோல, விஜயகாந்த் என்ற தலைவர் இருந்தும் ஆக்டிவ்வாக இல்லாத காரணத்தால், தே.மு.தி.க இன்று தவியாய்த் தவிக்கிறது

Published:Updated:
சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்ற விவேக்கின் காமெடி டயலாக், அரசியலில் இன்று அப்படியே தே.மு.தி.க-வுக்குப் பொருந்தும். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவே அழைத்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியே எதிர்பார்த்த விஜயகாந்தின் கட்சி இன்று தேய்பிறையாகச் சுருங்கிக்கொண்டே போகிறது. அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி தி.மு.க-வுடன் சேர முயன்று அது முடியாததால், அ.ம.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிலும் உடன்பாடு ஏற்படாததால், தனித்துக் களம் காணப்போவதாக அறிவித்திருக்கிறது அந்தக் கட்சி.

‘தே.மு.தி.க-வில் என்னதான் நடக்கிறது?’ என்று அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் விசாரித்தோம்... ‘‘தலைமை இல்லாத போர்ப்படை சிதறி ஓடிவிடும் என்பதுபோல, விஜயகாந்த் என்ற தலைவர் இருந்தும் ஆக்டிவ்வாக இல்லாத காரணத்தால், தே.மு.தி.க இன்று தவியாய்த் தவிக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகள் இருந்தபோதே கட்சி தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தவர் விஜயகாந்த். முதல்வர் வேட்பாளர் என்ற பிம்பத்தில் மக்கள் நலக் கூட்டணியில் விழுந்தவர், அதன் பிறகு எழவே இல்லை. தொடர்ந்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பிரேமலதா கட்சியை கன்ட்ரோலில் எடுத்ததிலிருந்தே தே.மு.தி.க-வின் தேய்மானம் தொடங்கிவிட்டது. இந்நேரம் விஜயகாந்த் ஆக்டிவ்வாக இருந்திருந்தால் ஸ்டாலின், எடப்பாடி கண்களில் விரலைவிட்டு ஆட்டியிருப்பார் என்பது நிதர்சனம்.

சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்
சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்

தே.மு.தி.க சமீபகாலமாகச் செய்த தவறுகளும் குழப்படிகளும் ஏராளம். மக்கள் நலக் கூட்டணிக்குப் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணிக்குள் நுழைந்தது தே.மு.தி.க. ஆனால், பா.ம.க-வுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விரும்பாமல், மற்றொரு பக்கம் தி.மு.க-வுடனும் பேச்சுவார்த்தை நடத்த, தகவல் வெளியே வந்து ‘ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையா?’ எனப் பொதுவெளியில் பெயர் கெட்டுப்போனது; தேர்தலிலும் தோற்றுப்போனார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என எதுவும் முடிவாவதற்கு முன்பே தலைவர்கள் பிரசாரத்துக்குக் கிளம்பினார்கள். பிரசாரத்தில் பங்கெடுத்த பிரேமலதா, ‘தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளும் சீக்கிரம் கூட்டணியை முடிவுசெய்யுங்கள். கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேசுங்கள்’ என்றார். ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்துகொண்டு, தி.மு.க-வையும் சேர்த்தே ஏன் சொல்கிறார்?’ என்று அ.தி.மு.க-வில் குழப்பம் உண்டானது.

சசிகலா விடுதலையாகி சென்னை திரும்பியபோது, பிரேமலதா வாழ்த்து சொன்னார். அவரைச் சந்திக்க நேரமும் கேட்டதாகத் தகவல் பரவியது. பிரசாரத்தின்போது தொடர்ச்சியாக அ.தி.மு.க-வை அக்கா பிரேமலதாவும், தம்பி சுதீஷும் வம்பிழுத்தபடியே இருந்தார்கள். ‘நாம் ஒன்றும் கூட்டணிக்காக அலையவில்லை. அவர்கள்தான் கூட்டணிவைக்க நம்மை அணுகுகிறார்கள்’ எனத் தன் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஓவராகவே முழங்கினார் சுதீஷ். எனினும், அ.தி.மு.க அதைக் கண்டுகொள்ளவில்லை.

பா.ம.க-வுடனான டீலை முடிப்பதற்காக, வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அ.தி.மு.க விவாதித்துக் கொண்டே இருந்தது. சரியாக, தேர்தல் தேதி அறிவிப்புக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக, வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு, பா.ம.க-வுடனான கூட்டணியும் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகும் எடப்பாடியால் நிம்மதிப் பெருமூச்சுவிட முடியவில்லை. பா.ஜ.க பின்னாலேயே வந்து, தொகுதிகளில் கறார் காட்டியது. பா.ம.க-வை 23-க்குள் சுருக்கிய அ.தி.மு.க தலைமை, பா.ஜ.க-வை 20-க்குள் சரிக்கட்டி, அடுத்ததாக ‘யாரப்பா அங்கே?’ என்று தே.மு.தி.க-வை அழைத்தது. அதிலும், தே.மு.தி.க சார்பாக பிரேமலதாவோ, சுதீஷோ போய் பேசவில்லை. துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதிதான் சென்றார். அ.தி.மு.க பக்கம் எடப்பாடியோ, பன்னீரோ பேசவில்லை. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை டீல் பண்ணச் சொல்லிவிட்டார்கள். ‘பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் ஒன்றுகூட குறையக் கூடாது’ என்று கே.பி.முனுசாமியிடம் சொல்லியிருக்கிறார் பார்த்தசாரதி. அவ்வளவுதான்... கோபத்தின் உச்சிக்கே சென்ற கே.பி.முனுசாமி, ‘நீங்களும் பா.ம.க-வும் ஒண்ணா? அவங்களுடைய வாக்கு சதவிகிதம் என்ன... வலிமை என்ன... உங்களோட வாக்கு சதவிகிதம், வலிமை என்ன?’ என நக்கலாகப் பேசி பிரஷரை ஏற்றி அனுப்பிவிட்டார்.

இதற்கிடையே பா.ம.க - பா.ஜ.க - அ.தி.மு.க மற்றும் ஏனைய குட்டிக் கட்சிகளின் மொத்தத் தொகுதிப் பட்டியலும் வெளிவந்தது. திடீரென மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டிய பிரேமலதா, எல்லோரிடமும் கருத்து கேட்டிருக்கிறார். மா.செ-க்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாகச் சொன்னது இதுதான், ‘தி.மு.க கூட்டணிக்குச் செல்லலாம். அப்படி இல்லையென்றால், மூன்றாவது அணியைப் பலப்படுத்துவோம். அதுவும் இல்லையென்றால், தனித்துக் களம் காண்போம்.’ ஆலோசனைக் கூட்டம் முடிந்த கையோடு, அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்தது தே.மு.தி.க. அத்துடன், இதுவரை அ.தி.மு.க மீதிருந்த மொத்த கோபத்தையும் பிரேமலதா, சுதீஷ், விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வார்த்தைகளாகக் கொட்டத் தொடங்கினார்கள்.

இதற்கிடையே, சுதீஷ் தரப்பிலிருந்து தி.மு.க-வைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். ஆனால், தி.மு.க கூட்டணியிலிருக்கும் கட்சிகளுக்கே தொகுதியைப் பங்கிட்டுக் கொடுக்க முடியாமல் விழிபிதுங்கிப் போயிருக்கும் தி.மு.க தலைமை, டீல் பேசவந்தவர்களை டீலில் விட்டிருக்கிறார்கள். ‘இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று அடுத்ததாக அ.ம.மு.க-வை நோக்கிப் படையெடுத்தது தே.மு.தி.க. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல, ‘இருவரின் பொது எதிரியான அ.தி.மு.க-வைக் கூட்டுச் சேர்ந்து வீழ்த்துவோம்’ என்று முழங்கியபடியே பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள்.

தேய்பிறையான தே.மு.தி.க? - நாளொரு பேச்சு பொழுதொரு முடிவு!

தொகுதிகளைப் பொறுத்துவரை, ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று ஆரம்பித்திருக்கிறது தே.மு.திக. 117 தொகுதிகளைக் கேட்டதுடன் துணை முதல்வர் நாற்காலியையும் டீல் பேச... அதிர்ந்துபோன அ.ம.மு.க அப்படியே ‘பேக்’கடித்திருக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால், அதே நாளில் அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது தே.மு.தி.க.

ஏற்கெனவே, கமல், சீமான், தினகரன் ஆகியோர் தனித்தனியாக தங்கள் தலைமையில் கூட்டணியை அமைக்கையில், தே.மு.தி.க-வும் தனித்துக் களம் காணுமா எனத் தெரியவில்லை. சரியான முடிவு எடுப்பது, அதையும் சரியான நேரத்தில் எடுப்பது அரசியலில் ரொம்பவே முக்கியம். அந்த விஷயத்தில் தே.மு.தி.க எல்லா வகையிலும் தொடர்ந்து கோட்டைவிடுகிறது’’ என்றார்கள்.

வடிவேலுவின் காமெடிபோல ‘அது நேத்து, நான் சொல்றது இன்னக்கி...’ என்பதாக நாளுக்கு நாள் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேயிருக்கும் தே.மு.தி.க, தனித்து நிற்குமா... அல்லது கமலுடன் பேச்சுவார்த்தை நடத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism