Published:Updated:

``மிகுந்த வேதனை அடைந்தேன்... இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நான் இடம் தருகிறேன்!'' - விஜயகாந்த்

விஜயகாந்த்
விஜயகாந்த்

``கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடுஅடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள், தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனையளிக்கிறது'' - விஜயகாந்த்

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய டாக்டர், தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்திவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டாக்டர், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

சேதப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
சேதப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்

அவரது உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. இதுகுறித்த தகவல் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தெரிந்தது. உடனடியாக அவர்கள் கல்லறைத் தோட்டம் அமைந்துள்ள இடத்துக்கு வந்து, `இங்கு கொரோனா தொற்றால் இறந்த டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்யக் கூடாது' என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அது பெரிய பிரச்னை ஆனது. போராட்டம் நடத்திய சிலர் ஆம்புலன்ஸை உடைக்க, 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்தார். அவரின் சடலத்தையும் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல, சென்னையில் தனியார் மருத்துவமனையை நடத்தி வந்த பிரபல டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்வதில் நடந்த வன்முறை சம்பவங்கள் மருத்துவத்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி அறிவிப்பு

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலியானால், அவர்களது உடல் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் அடக்கம் செய்யப்படும் என்றும் அதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதையேதான் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருவதாக அறிவித்துள்ளர். இது தொடர்பாக விஜயகாந்த், ``கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒருநாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள். இப்படி இருக்கும்போது மருத்துவத்துறையைத் தேர்தெடுத்து மக்களுக்குச் சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும்” என்றார்.

பிரேமலதா, விஜயகாந்த்
பிரேமலதா, விஜயகாந்த்

தொடர்ந்து அவர், `` கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள், தற்போது மருத்துவரின் உடலை அடக்கம்செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உடலை அடக்கம் செய்வதால் எந்தத் தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும் தமிழக அரசும் தெரிவித்துள்ளது. ஆனால், மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதும், ஓட்டுநர் உட்பட மற்றவர்களைத் தாக்குவதும் கண்டனத்துக்குரியது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இது போன்ற செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதைத் தாழ்மையுடன் கேட்டுக்கோள்கிறேன்” என்றவர்

`ஆம்புலன்ஸ் உடைப்பு; டிரைவருக்கு அடி' - கொரோனாவால் இறந்த சென்னை டாக்டரின் இறுதி அஞ்சலியில் வன்முறை
``மிகுந்த வேதனை அடைந்தேன்... இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நான் இடம் தருகிறேன்!'' - விஜயகாந்த்

மேலும் ``உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்குத் தமிழக அரசு புரிய வைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் கருதுவது மருத்துவர்களைத்தான். ஆனால், மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியில் உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு