Election bannerElection banner
Published:Updated:

தே.மு.தி.க: நோட்டாவுக்குக் கீழே வாக்குகள் - கட்சியைப் படுபாதாளத்துக்கு இட்டுச் சென்றது யார்?

தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா
தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா

60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 2,00,156 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்டு சந்தித்த முதல் இரண்டு தேர்தல்களில் மலைபோல் இருந்த அந்தக் கட்சியின் வாக்குவங்கி கடுகுபோலச் சுருங்கிவிட்ட காரணத்தை அலசுவோம்.

கட்சி தொடங்கப்பட்டு மிகக்குறுகிய காலத்திலேயே தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கு மாற்று சக்தியாக உருவெடுத்த தே.மு.தி.க., இந்தத் தேர்தலில் இருந்த சுவடே தெரியாமல் கரைந்துபோயிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 2 அன்று வெளியிடப்பட்டன. தி.மு.க தலைமையிலான கூட்டணி 159 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றியையும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 75 இடங்களைப் பெற்று கௌரவமான தோல்வியையும் அடைந்திருக்கின்றன. ஆனால், மாற்று அணிகளாகப் போட்டியிட்ட, அ.ம.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியோ, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கமல்ஹாசன் தலைமையிலான அணியோ, 234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சியோ ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதிலும் அ.ம.மு.க கூட்டணியில், 60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., இரண்டு லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்டு சந்தித்த முதல் இரண்டு தேர்தல்களில் மலைபோல் இருந்த அந்தக் கட்சியின் வாக்குவங்கி இப்போது கடுகுபோலச் சுருங்கிவிட்டதன் காரணத்தை விரிவாகப் பார்ப்போம்.

தே.மு.தி.க - விஜயகாந்த்
தே.மு.தி.க - விஜயகாந்த்

தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்டு சந்தித்த முதல் இரண்டு தேர்தல்களில், தனியாகப் போட்டியிட்டபோதும் அந்தக் கட்சிக்கு பத்து சதவிகித வாக்குகள் வரை கிடைத்தன. 2011 தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு 29 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தும் கிடைத்தது. அதன் பிறகு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அந்தக் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்குவங்கியும் ஐந்து சதவிகிதமாகக் குறைந்தது. தொடர்ந்து, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரானார் விஜயகாந்த். ஆனால், போட்டியிட்ட, 104 தொகுதிகளில் 103 தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு டெபாசிட்கூட கிடைக்கவில்லை.

முதல் தேர்தலிலேயே வென்று சட்டமன்ற உறுப்பினரான விஜயகாந்த், மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அந்தக் கட்சியின் வாக்குவங்கியும் 2.3 சதவிகிதமானது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்குவங்கியும் 2.2 சதவிகிதமாகக் குறைந்தது. தொடர்ந்து அ.தி.மு.க கூட்டணியில் நீடித்துவந்தபோதும், அந்தக் கட்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ``எங்களைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள்'' என பிரேமலதா வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து, பா.ம.க., பா.ஜ.க-வுடனான தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகு கடைசியாகத்தான் தே.மு.தி.க-வை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. கூடவே குறைவான தொகுதிகளை, அதிலும் தே.மு.தி.க விரும்பிய தொகுதிகளை ஒதுக்க மறுத்தது. அதனால், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வில் இணைந்து தேர்தலைச் சந்தித்தது தே.மு.தி.க. அந்தக் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பொருளாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார்.

விஜயகாந்த் - தினகரன்
விஜயகாந்த் - தினகரன்

அ.ம.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ இன்னும் சில அமைப்புகளை உள்ளடக்கிய இந்தக் கூட்டணியை பலமானதொரு மாற்றாகத்தான் அரசியல் நோக்கர்கள் கருதினர். காரணம், அ.ம.மு.க-வுக்கு ஐந்தரை சதவிகித வாக்குகள், தே.மு.தி.க-வுக்கு இரண்டரை சதவிகித வாக்குகள், இன்னும் சிறிய அமைப்புகளின் வாக்குகளையும் சேர்த்தால் எட்டு சதவிகிதத்துக்கும் அதிகமாக வருகிறது என கணக்குப் போட்டனர். அதுமட்டுமல்ல, அது அ.தி.மு.க கூட்டணியின் வெற்றியைப் பல தொகுதிகளில் பாதிக்கும் எனவும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் அது அனைத்தும் பொய்த்துப் போயின. பெரிய அளவில் இந்தக் கூட்டணியால் அ.தி.மு.க கூட்டணிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதிலும், நோட்டாவுக்கும் கீழே வாக்கு சதவிகிதத்தைப் பெற்று படுவீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது தே.மு.தி.க. விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா, வெறும் 25,908 வாக்குகளை மட்டுமே வாங்கியிருக்கிறார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், வெறும் 2.2 சதவிகித வாக்குகளையே பெற்றிருந்தாலும் அ.தி.மு.க கூட்டணியில் அந்தக் கட்சிக்கு பத்து முதல் பதினைந்து இடங்கள் வரை முதலில் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், சசிகலா சிறையிலிருந்து விடுதலையானபோது, 'சசிகலா இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியே கிடைத்திருக்காது. சசிகலா இல்லாவிட்டால் எந்த அமைச்சரும் வசதியாக வாழ்ந்திருக்க முடியாது. சசிகலாவால் வாழ்வு பெற்றவர்கள் அந்த நன்றியை மறந்துவிட்டார்கள்' என்றெல்லாம் பிரேமலதா பேசியது அ.தி.மு.க-வினரின் கோபத்தைக் கிளறியது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என அ.தி.மு.க தலைமை பலமுறை சொன்னபோதும்,``பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தயார் செய்துவிட்டேன். கூட்டணிக்குப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம்'' என பிரேமலதா பேசியதை அ.தி.மு.க தலைமையை இன்னும் உரசிப் பார்த்தது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அதனால், தே.மு.தி.க-வை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்தனர் அ.தி.மு.க-வினர். அதன் காரணமாகவே தொகுதிப் பங்கீட்டில் மிகக் குறைந்த தொகுதிகளையும் கேட்ட தொகுதிகளை ஒதுக்காமலும் பிடிவாதம் பிடித்தனர், அதனால், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்தது தே.மு.தி.க. அப்போதும், `இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி. அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும்' எனக் கொதித்தெழுந்தார் அந்தக் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ். ஆனால், தற்போது தே.மு.தி.க-வுக்குத்தான் அத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தடாலடியான பேரமா...  நிதானமான பயணமா? என்ன செய்யப்போகிறார் பிரேமலதா? #TNElection2021

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க நான்கு இடங்களையும், பா.ம.க ஐந்து இடங்களையும் வென்றிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தே.மு.தி.க-வின் பொருளாளர் தேவையற்ற வார்த்தைகளை உதிர்க்காமல், அ.தி.மு.க கூட்டணியில் தொடர்ந்திருந்தால் நிச்சயமாக அந்தக் கட்சி இத்தகைய படுதோல்வியைச் சந்தித்திருக்காது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் பிரேமலதாவின் கடுமையான பேச்சால், மோசமான முடிவுகளாலும்தான் அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் கட்சியைவிட்டு வெளியேறினர். நாளுக்கு நாள் அந்தக் கட்சியின் வாக்குவங்கியும் சரிந்துகொண்டே போனது. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளிடம் அனுசரித்துப் போகாமல் தடாலடியாகப் பேசுவதையே வழக்கமாகக்கொண்டிருந்தார் பிரேமலதா.

தே.மு.தி.க விஜய பிரபாகரன்
தே.மு.தி.க விஜய பிரபாகரன்

பிரேமலதா மட்டுமல்ல, அவரின் தம்பி சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் முதற்கொண்டு கூட்டணிக் கட்சியினரையும், மாற்றுக் கட்சியினரையும் மரியாதை இல்லாமல் பேசுவது தொடர்கதையாகிவருகிறது. தவிர, கட்சியில் நிலவும் குடும்ப ஆதிக்கமே கட்சியிலிருந்து பல முன்னணி நிர்வாகிகள் வெளியேற முக்கியக் காரணமாகவும் இருந்தது. தேவையான அளவு சீட்டுகளைப் பெற்று, அதில் வெற்றிக்காக உழைத்து கட்சியையும், இழந்த வாக்குவங்கியையும் மீட்டிருந்தாலே கட்சி நிர்வாகிகளுக்கு அது புத்துணர்ச்சியையும், மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், வழக்கம்போலவே தனது சுயநலத்தாலும் தடாலடியான முடிவுகளாலும் கட்சியை அதலபாதாளத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் விஜயகாந்தின் குடும்பத்தினர் என்றால் அது மிகையில்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு